ஓடிடி திரை அலசல் | Falimy: பசில் ஜோசப்பின் ஓர் இறுக்கம் தளர்த்தும் படைப்பு!

By கலிலுல்லா

முரண்களைக் கோர்த்து அதனை இன்னும் வீரியமாக்கி ஓரிடத்தில் உடைத்து ஆசுவாசப்படுத்தும் கலை மலையாள சினிமாவின் ஆதிமொழி. அந்த மொழியை மிக கச்சிதமாக கையாண்டு, அதன் வழியே மனித உணர்வுகளை நுட்பமாக பேசும் படங்கள் ரசிக்க வைக்கத் தவறுவதில்லை. அதில் கூடுதலாக நகைச்சுவையும் சேரும்போது அடிபொலி! ‘ஹோம்’ படத்தை இந்த வகையறாக்குள் அடக்க முடியும். அப்படியொரு படமான ‘ஃபேலிமி’ (Falimy) ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அனூப் (பசில் ஜோசப்) டப்பிங் ஆர்டிஸ்ட். திருமணத்துக்கான முயற்சிகள் கைகூடாமல் போன விரக்தியில் வாழ்க்கையை கடத்துகிறார். அப்பா சந்திரன் (ஜெகதீஸ்) முன்னாள் பிரன்டிங் ப்ரஸ் ஓனர். இப்போது இழுத்து மூடப்பட்டிருப்பதால், வேலைக்குச் செல்லாமல் வீட்டில் பொழுதை கழித்து வருகிறார். இளைய மகன் சந்தீப் (அபிஜித்) கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார். பிரன்டிங் ப்ரஸ்ஸில் வேலை பார்க்கும் அம்மா ரேமா (மஞ்சு பிள்ளை).

இப்படியான குடும்பத்தில் உள்ள தாத்தா ஜனார்த்தனனுக்கு (மீனாராஜ்) காசி செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. ஒவ்வொரு முறையும் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு காசி செல்ல முயற்சிக்கும் அவரின் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. ஒருநாள் 5 பேரும் காசிக்கு புறப்பட அந்தப் பயணத்தில் தாத்தா ஜனார்தனன் தொலைந்து போகிறார். அவருடன் தொலைந்த குடும்பத்தின் பிணைப்பையும், சந்தோஷத்தையும் மீட்டெடுப்பதே படம்.

நேர்க்கோட்டில் (லீனியர்) பயணிக்கும் கதையை எந்தவித அயற்சியுமில்லாமல், அவர்களின் வாழ்க்கையை பக்கத்திலிருந்து பார்க்கும் அனுபவத்தை கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் நிதிஷ் சகதேவ். பெரிதும் பேசிக்கொள்ளாத முரண்பட்டிருக்கும் தந்தை - மகன் உறவு, திருமணமாகாத விரக்தியில் அனூப், காசிக்குச் செல்ல வேண்டும் என்ற கடைசி ஆசையில் ஜனார்தனன், படிப்புக்கு அமெரிக்கா செல்ல வேண்டும் என இளையமகன் சந்தீப்,

தோல்வியில் முடிந்த தொழிலால் முடங்கிய சந்திரன், இவர்களை ஒன்றிணைக்கும் தாய் என 5 கதாபாத்திரங்களை வடிவமைத்த விதமும், அதிலிருக்கும் முரண்களும், நிறைவேறா ஆசைகளும், ஏதோ ஒருவகையில் எல்லோராலும் கனெக்ட் செய்து கொள்ள முடியும். இந்த கனெக்‌ஷன் படத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துகிறது. குறிப்பாக இவர்களின் ரோட் ட்ரிப் பயணத்தில் நிகழும் சம்பங்களை சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையாகவும் மாற்றியிருக்கும் எழுத்து படத்தின் ஆன்மா.

பேருந்து வசதி கூட இல்லாத வட மாநிலங்களின் அவல நிலையை படம் பிடித்து காட்டுவதும், அங்கே போய், “இந்தி தெரியாதா...அது நம் ராஷ்ட்ரா பாஷா” (தேசிய மொழி) என பசில் ஜோசப் பேசும் இடங்களும் ரசிக்க வைக்கின்றன. அப்பா - மகன் உறவின் அழுத்தம் கூடும் இடங்கள் அழகு சேர்க்கின்றன. பசில் ஜோசப் தந்தையிடம், “உங்க அப்பா என்ன மருந்து சாப்டுறாருன்னாச்சும் தெரியுமா?” என கேட்க, அதற்கு அவர், “உன் அப்பாவ பத்தி உனக்கு என்ன தெரியும்” என பதிலுரைக்கிறார். வாழையடி வாழையாக நிகழும் தந்தை - மகன் உறவின் சிக்கலை சில வசனங்களில் கடத்துகிறது படம். எமோஷனலையும், காமெடியையும் தேவையான இடங்களில் மிகச்சரியாக எழுதியிருக்கும் விதம் அயற்சியில்லாமல் கடக்க பெரிதும் உதவுகிறது.

ப்ளாக் காமெடி வகையாறாவுக்கு பொருத்தமான நடிகர் பசில் ஜோசப். மனமுடைந்து திரியும் காட்சிகளில் தேவையான உணர்வுகளை வெளிப்படுத்தும் அவர், நகைச்சுவைக் காட்சிகளில் அப்பாவி முகத்துடன் அசால்ட்டாக ஸ்கோர் செய்கிறார். ஜெகதீஸின் தந்தை கதாபாத்திரமும், மஞ்சு பிள்ளையின் தாய் கதாபாத்திரங்களும் பக்காவான பொருத்தம். இளைய சகோதரன் அபிஜித், தாத்தாவாக மீனராஜ், கதாபாத்திரங்களுக்கு நடிப்பில் வலுகூட்டுகின்றனர்.

நடிகர்கள் தேர்வும் படத்துக்கு பலம். பப்ளூவின் கேமரா வாரணாசியையும், உத்தரபிரதேஷின் வெளியிலேறிய வறண்ட நிலத்தையும் கச்சிதமாக படமாக்கியுள்ளது. விஷ்ணு விஜய்யின் பின்னணி இசை நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வ காட்சிகளுக்கு கூடுதல் பலம். நகைச்சுவையுடன் கூடிய உணர்வுப்பூர்வமான படத்தை எந்தவித ஓவர் டோஸும் இல்லாமல் பார்க்க விரும்பினால் ‘Falimy’ நல்ல சாய்ஸ்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE