ஓடிடி திரை அலசல் | Swathi Mutthina Male Haniye - மரணப் பாதையில் அன்பைத் தேடும் பயணம்!

By கலிலுல்லா

நாயகனிடம் நாயகி, ‘நீ ஏன் மல்லிப்பூ செடியை பரிசளித்தாய்?’ என கேட்கும்போது, “நீ அதை கொண்டாடவில்லை என்றாலும் அது பூக்கும், அது கடவுளிடம் சென்றடையவில்லை என்றாலும் பூக்கும், யாரும் அது குறித்து கவிதை எழுதாவிட்டாலும் அது பூக்கும், நீ அதை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றாலும் அது பூக்கும், அது மற்றவர்களுக்காக பூக்கவில்லை. அது தனக்காக மட்டுமே பூக்கிறது. உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்பதுதான் அதன் நோக்கம்” என்பார் நாயகன். இயக்குநர் ராஜ்.பி ஷெட்டியின் இந்த வசனம் வாழ்க்கை குறித்த அணுகுமுறை வேறொரு கோணத்தில் பார்க்கச் சொல்கிறது. படமும் கூட உங்களுக்கு அப்படியான ஒரு வித்தியாச அனுபவத்தை கொடுக்க முயல்கிறது.

அடுத்த நொடியின் இருப்பை உறுதி செய்ய முடியாத நோயாளிகளின் கூடாரம் அந்த மருத்துவமனை. அங்கிருப்பவர்கள் அனைவரும் எப்போது வேண்டுமானாலும் உயிரிழக்கலாம். அவர்களில் பெரும்பாலானோருக்கு புற்றுநோய். இந்த மருத்துவமனையில் மனநல ஆலோசகராக பணியாற்றி வருகிறார் பிரேரணா (சிறி ரவிக்குமார்). வலிமிகு தருணங்களைச் சுமக்கும் நோயாளிகளின் கதைகள், மரணங்களை பார்த்து பழகி, களங்கும் அவர், அது தன்னை பாதித்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்.

எப்போதும் வேலையிலேயே மூழ்கியிருக்கும் கணவர் சாகர் (சூர்ய வசிஷ்ட). மனைவிக்கு நேரம் ஒதுக்காத கணவர் மற்றவருடன் உறிவில் இருப்பதை அறிந்தும் அமைதியாக கடக்கிறார் பிரேரணா. அது குறித்து சண்டையிடவோ, கூச்சலிடவோ அவர் விரும்பவில்லை. விழிப்பது, குப்பைகளை சுத்தம் செய்வது, பாத்திரங்களை கழுவுவது, தோசை சுடுவது, பிஸியாக இருக்கும் கணவருக்கு காஃபி கொடுத்துவிட்டு வேலைக்குச் செல்வது, அங்கிருக்கும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டு ஆலோசனை வழங்குவது இப்படியான ஒரு சலிப்பான வாழ்க்கையை வாழ்ந்து வரும் பிரேரணா உலகில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனிகேத் (ராஜ்.பி.ஷெட்டி) நுழைய, அவரின் வாழ்க்கையை எப்படி மாறுகிறது என்பதே திரைக்கதை. கன்னட படமான இது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.

மரணத்தை எதிர்பார்த்து வாழ்வது ஒரு சாபம். இதோ... இன்றைக்கு, நாளைக்கு அல்லது நாளை மறுநாள் என எப்போது வேண்டுமானாலும் கவ்விக்கொள்ள காத்திருக்கும் மரணத்தை அருகில் வைத்து வாழும் மனிதர்களின் கதையை காதல், தத்துவம் கலந்து பேரமைதியுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராஜ்.பி.ஷெட்டி. பெண் ஒருவரின் பார்வையிலிருந்து விரியும் இப்படத்தில் அவரின் அழுத்தம் மிகு உலகம் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரேரணா தனக்கு மற்றொருவர் மீது காதல் உள்ளது என தாயிடம் கூறும்போது, “திருமணமான மகள் தனது அம்மாவிடம் இப்படி கேட்பது தவறு. ஆனால், நான் ஒரு தாயாக இதனை பார்க்கும்போது தப்பாக தெரியவில்லை. துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது என கழியும் நம் வாழ்க்கையில் எல்லாமே கிடைக்கும்... காதலைத் தவிர! நாமும் கேட்பதில்லை. அவர்களும் தருவதில்லை. நாம் வாழ்வு முழுவதும் காதலுக்காக ஏங்கி மடிகிறோம்” என தாய் பதிலளிப்பார். எத்தனை அழுத்தமான வசனம். மொத்த பெண்களின் வலியை ஒற்றை வசனத்தில் அழகாக கடத்தியிருப்பார்.

பிரேரணாவிடம் ஆயுள் இருக்கும். சுற்றி எல்லோரும் இருப்பார்கள். மன மகிழ்ச்சி இருக்காது. விரைவில் மரணத்தை தழுவப்போகும் அனிகேத்துக்கு யாரும் இருக்கமாட்டார்கள். அதேபோல வாழ்நாளும் இருக்காது. ஆனால் மகிழ்ச்சியும் வாழ்க்கை மீதான காதலும் மரிக்காமல் இருக்கும். வெவ்வேறு சூழலில் இயங்கும் இந்த இரண்டு கதாபாத்திரங்களில் ஒரு கதாபாத்திரம் மற்றொன்றுக்கு தன்னிடமிருக்கும் அன்பையும், மகிழ்ச்சியையும் பரிசளித்துவிட்டு இறந்துவிடுகிறது. காதலையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்தளித்துவிட்டு வாழ்க்கை குறித்த கோணத்தை மாற்றிவிட்டு செல்பவர்களின் பிரியாவிடையை பேசும் படத்தில் இரண்டு முதன்மை கதாபாத்திரங்களும் கச்சிதமாக எழுதப்பட்டுள்ளன.

மெலோ டிராமாக கதையில் எமோஷனல் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் அதனை ஓவர் டோஸ் ஆக்கிவிடாமல் கச்சிதமாக வெட்டி கோர்க்கப்பட்டிருப்பது பலம். உதாரணமாக வயது மூத்த தம்பதியில் ஒருவரின் இறப்பு, பிரபாகர் என்ற கதாபாத்திரத்தின் பின்கதை என உணர்வுபூர்வ காட்சிகள் மிகையில்லாமல் வந்து செல்கின்றன. சிறி - ராஜ்.பி.ஷெட்டி கெமிஸ்ட்ரியில் தொடக்கத்தில் பொருந்தாத உணர்வை கொடுத்தாலும் போக போக அதனை ஏற்றுக்கொள்ள வைக்கிறது திரைக்கதை.

கணிக்கக் கூடிய கதையின் போக்கையும், மெதுவாக நகரும் காட்சிகளையும் கவனிக்க விடாமல் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது பிரவீன் ஷ்ரியன் கேமரா. நிறைய ஒயிடு ஆங்கிள் ஷாட்ஸ்கள், அதற்கான உருவக (metaphore) காட்சிகள் கண்களுக்கு விருந்து. மீட்டரை தாண்டியிருந்தால் சோகம் பிழியப்பட்டு சோக கீதமாக மாறிவிடும் அபாயத்தை உணர்ந்து தேவையான மீட்டரில், காட்சிகளுக்கான உணர்வை பின்னணி இசையில் ஃபீல் குட்டாக கொடுக்க முயன்றியிருக்கிறார் மிதுன் முகுந்தன்.

சலிப்பானதொரு வாழ்க்கைக்குள் மாட்டிக்கொண்டு உள்ளுக்குள் புழுங்கி தவிக்கும் பிரேரணா கதாபாத்திரத்தில் சிறி ரவிக்குமார் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அன்புக்காக ஏங்கும் அவள், அனிகேத்துடன் இருக்கும்போது முதன்முறையாக புன்னகைக்கிறாள். எந்த இடத்திலும் அழவில்லை; ஆனால் அந்த சோகத்தை கச்சிதமாக கடத்தும் இடம் கனமான பாத்திரப் படைப்பு. ராஜ்.பி.ஷெட்டி மெச்சூரிடியான அலட்டிக் கொள்ளாத நடிப்பில் பெரிய ரியாக்‌ஷன்கள் இல்லாவிட்டாலும் யதார்த்த நடிப்பில் கவனம் பெறுகிறார். மற்ற கதாபாத்திரங்கள் குறைவில்லாத நடிப்பை வெளிபடுத்துகின்றன.

வறட்சியான வாழ்வில் பூக்கும் காதலையும், மரணத்தில் விளையும் அன்பையும், வாழ்க்கை மீதான பற்றுதலையும் சொல்லும் இப்படத்தில் சில லாஜிக் பிரச்சினைகளும், கனெக்ட் ஆகாத எமோஷனலும் இருக்கலாம். ஆனாலும், இப்படம் ஒவ்வொருவருக்கும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கலாம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

3 days ago

ஓடிடி களம்

4 days ago

ஓடிடி களம்

5 days ago

ஓடிடி களம்

7 days ago

ஓடிடி களம்

10 days ago

ஓடிடி களம்

16 days ago

ஓடிடி களம்

18 days ago

ஓடிடி களம்

19 days ago

ஓடிடி களம்

22 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

25 days ago

ஓடிடி களம்

26 days ago

ஓடிடி களம்

26 days ago

ஓடிடி களம்

26 days ago

ஓடிடி களம்

26 days ago

மேலும்