குரூரங்களையும், வன்மங்களையும் தனக்கத்தே கொண்ட சலனமில்லா நதியைப் போன்றது மனித மனம். அந்தக் குரூரங்களும், வன்மமும் வெடிக்கும் இடங்கள் கணிக்க முடியாதவை. அத்துடன் சூழலும் அதற்கு கைகொடுக்கும்போது குற்றங்கள் நிகழ்ந்துவிடுகின்றன. அதற்கு காரண, காரியங்களை கேட்டு டீகோட் செய்துகொண்டிருக்க முடியாது என்கிறது ‘Curry & Cyanide: The Jolly Joseph Case’ ஆவணப்படம். கேரளாவை உலுக்கிய இந்தக் கொலை வழக்கை 1.35 மணி நேரம் ஓடும் ஆவணப் படமாக இயக்கியுள்ளார் கிறிஸ்டோ டாமி. ஷாலினி உஷாதேவியின் திரைக்கதை எழுத்து பக்கபலமாக அமைந்துள்ளது. இந்திய டுடே தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்த ஆவணப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் தற்போது காணக் கிடைக்கிறது.
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஜாலி ஜோசஃப். 1997-ம் ஆண்டு தனது உறவினரான ராய் தாமஸ் என்பவரை சந்திக்கிறார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். ராய் தாமஸ் தந்தை டாம் தாமஸ். தாய் அன்னம்மா ஜோசப். இருவரும் ஆசிரியர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்கள். ராய் தாமஸுக்கு ரெஞ்சி தாமஸ் என்ற சகோதரியும், ரோஜோ தாமஸ் என்ற சகோதரரும் உண்டு. கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள கூடத்தாய் பகுதியில் கல்வி அறிவு பெற்ற சாதாரண குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.
2002 - 2016-ம் ஆண்டுக்குள் இந்தக் குடும்பத்தில் உள்ள அன்னம்மா ஜோசப், டாம் தாமஸ், ராய் தாமஸ் உணவில் சையனைடு கலந்து கொடுக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். இது தவிர 2 வயது சிறுமி உட்பட உறவினர்கள் 3 பேரின் கொலையும் நடக்கிறது. இதற்கு ஜாலி ஜோசஃப்தான் காரணம் என கூறி காவல் துறை அவரை கைது செய்கிறது. கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது இந்த ஆவணப் படம்.
இந்த 6 பேரின் கொலைக்கும் என்னதான் காரணம்? இந்தக் கொலைகளை ஜாலி தனியாகத்தான் நிகழ்த்தினாரா? மாட்டிக்கொள்ளாமல் அவர் கொன்றது எப்படி? - இந்த கேள்விகளுக்கான பதிலை அறிந்துகொள்ளும் ஆர்வம்தான் இந்த ஆவணப் படத்தை அயற்சியில்லாமல் நகர்த்துகிறது. ஆனால், தொடர் முடிந்த பின்பும் சில கேள்விகளுக்கான பதில் கிடைக்காமலே தொக்கி நிற்கிறது. கொல்லப்பட்ட ராய் தாமஸின் சகோதரி ரெஞ்சி தாமஸின் பார்வையில்தான் கதை சொல்லப்படுகிறது. காவல் அதிகாரி, ஜாலி ஜோசப் தரப்பு வழக்கறிஞர், பத்திரிகையாளர், சமூக ஆர்வலரின் பார்வையும் முன்வைக்கப்படுகிறது.
» நயன்தாராவின் ‘அன்னபூரணி’ டிச.29-ல் ஓடிடியில் ரிலீஸ்
» ஓடிடி திரை அலசல் | கூச முனிசாமி வீரப்பன் - ‘பேலன்ஸ்’ அணுகுமுறையுடன் பதைபதைப்பு அனுபவம்!
அடுத்தடுத்த கொலைகளின் விவரிப்பு, அதற்கான சில சித்தரிப்புக் காட்சிகள், சயனைடு எப்படி கிடைத்தது என்பதை சொல்லும் இடம், காட்டிக் கொடுத்த கணவரின் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட், உடன்பிறப்புகளின் நீதிக்கான முன்னெடுப்புகள், பழைய ஃபுட்டேஜ் காட்சிகள், குற்றம்சாட்டபட்ட ஜாலி ஜோசப் மகனின் வாக்குமூலம், போலி கல்விச் சான்றிதழ், அதை உருவாக்கியது குறித்து சொல்லும் இடங்கள் என க்ரைம் த்ரில்லர் படத்துக்கு இணையாக நடந்த சம்பவங்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக தன் மீது சந்தேகம் எழாமலும், போலீஸில் சிக்காமலும் கமுக்கமாக கொலைகளை இயற்கை மரணமாக மாற்றியதாக சொல்லப்படும் ஜாலி ஜோசஃபின் மாஸ்டர் ப்ளான், சினிமாவை விஞ்சிய ஆச்சரியம்.
இந்த 6 கொலைகளை நிகழ்த்த ஜாலி ஜோசஃப்புக்கு ஒரே காரணம் இருந்திருக்கவில்லை. நபருக்கு நபர் கொலைகளுக்கான காரணம் மாறுபடுகிறது. வேலைக்குச் சென்றே ஆக வேண்டும் என அடிக்கடி மாமியார் கொடுத்த டார்ச்சர் முதல் கொலைக்கான தொடக்கமாக சொல்லப்படுகிறது. மேலும், தன்னுடைய கல்விச் சான்றிதழ் போலி என தெரிந்துவிடும் என்ற பயத்திலும் அந்தக் கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது.
அடுத்து சொத்துக்காக மாமனார் கொலை. வேலைக்குச் செல்லாமல் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் கணவருக்கும் ஜாலி ஜோசஃப்புக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக கணவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த மூன்று கொலைகளையும் வெளியே சொல்லிவிடக் கூடாது என்பதற்காக உறவினர் மேத்யூ மஞ்சாடி கொலை. தொடர்ந்து அடுத்து தன்னுடைய இரண்டாவது திருமணத்துக்கு தடையாக இருந்த உறவினர் சாஜூவின் மனைவி மற்றும் மகள் கொல்லப்பட்டது என மொத்தம் 6 கொலைகள் வெவ்வேறு காரணத்துக்காக நிகழ்த்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கொலைகளையும் டைம்லைனுடன் விவரிக்கும் இடங்கள் நேர்த்தி.
ஆனால், அந்த கொலைக்கான காரணங்களை நுணுக்கமாக அணுகாமல் மேலோட்டமாக கடப்பது நிறைய கேள்விகளை எழுப்புகிறது. இருள் சூழ் பக்கங்களை புனைவுக் காட்சிகளின் மூலம் படமாக்கிய விதமும், ஆங்காங்கே கதைசொல்லலின் தீவிரத்தை உணர்த்தும் பின்னணி இசையும் பலம்.
இந்த ஆவணப் படம் புதிய பார்வையாளர்களுக்கு அதாவது, இந்தச் செய்தி குறித்து அறிந்திடாதவர்களுக்கு நிச்சயம் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியைத் தரும் என்பதில் மாற்றமில்லை. 2019-ம் ஆண்டு ஜாலி ஜோசஃப் கைது செய்யப்படுகிறார். அதன் பின்னர் இந்த வழக்கு தொடர்பான நிறைய தகவல்கள் வெளியாகின. இந்த வழக்கை பின்தொடர்பவர்களுக்கும், கேரள மக்களுக்கும், இந்தச் சம்பவத்தை அறிந்தவர்களுக்கு படத்தில் புதிதான தகவல்கள் எதுவும் இல்லை.
செய்திகளை மட்டுமே பதிவாக்கி, அத்துடன் சம்பந்தப்பட்டவர்களின் சாட்சியங்களை பெற்றிருக்கிறார்கள். மேலதிக தகவல்கள் இல்லை என்ற குறை ஒருபுறம் இருந்தாலும், தேவையற்று இழுத்து கதை சொல்லாமல் இருந்ததும் ஓர் ஆறுதல். கச்சிதமாக 1.30 மணி நேரத்தில் உருவாக்கப்பபட்ட இந்தத் தொடர் வழக்கை அறிந்துகொள்ளும் பார்வையாளர்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியையும், சுவாரஸ்யத்தையும் கொடுக்கும்.
ஆவணப் படத்தின் இறுதியில், “எவ்வளவு தான் பாவங்கள் செய்தாலும் ஆண்டவர் மன்னிப்பதாக பைபிளில் சொல்லப்பட்டுள்ளதே. அதுபோல நானும் மன்னிக்கப்படுவேன்” என ஜாலி ஜோசஃப் சொன்னதாக கூறும் இடம் உண்மையில் நிறைய கேள்விகளை எழுப்புகிறது. மேலும், அவர் தான் 6 பேரை கொன்றதை ஒப்புக்கொண்டதாக கூறும் ஆவணப் படத்தில் அதற்காக அவர் வருந்தவில்லை என்பதையும் பதிவு செய்யும் இடம், மனித மனங்களின் உளவியலை புரிந்துகொள்ள முடியாது என்பதையும் உணர்த்துகிறது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
5 days ago
ஓடிடி களம்
7 days ago
ஓடிடி களம்
10 days ago
ஓடிடி களம்
16 days ago
ஓடிடி களம்
18 days ago
ஓடிடி களம்
19 days ago
ஓடிடி களம்
22 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
25 days ago
ஓடிடி களம்
26 days ago
ஓடிடி களம்
26 days ago
ஓடிடி களம்
26 days ago
ஓடிடி களம்
26 days ago