ஓடிடி திரை அலசல் | Pulimada: லாஜிக் மீறலுடன் மனம் திருந்தும் புலி குணம் கொண்ட மனிதனின் கதை!

By குமார் துரைக்கண்ணு

இயக்குநர் ஏ.கே.சஜன் எழுதி, இயக்கியிருக்கும் மலையாளத் திரைப்படம் 'புலிமடா' (Pulimada). வயநாட்டில் உள்ள மலைப்பகுதியில் ஒரு புலி நுழைந்து விடுகிறது. அதே காட்டுப் பகுதியில் வசிக்கும் ஒரு 40 வயது காவலரின் திருமணம், மணப்பெண் வேறு ஒருவருடன் ஓடிப்போனதால் நின்றுபோகிறது. இந்த இரண்டு புலிகளும் விரக்தியும் கோபமுமாக, ஆக்ரோஷத்துடன் அந்தக் காட்டுக்குள் சுற்றிவர, இருவரில் யாருக்கு இரை கிடைத்தது? இருவரில் யார் பொறியில் சிக்கிக் கொள்கின்றனர்? - இதுதான் ‘புலிமடா’ படத்தின் ஒன்லைன். புலிமடா என்பதற்கு புலிக் குகை என்பது பொருள்.

வயநாட்டில் இருந்து 10 மைல் தொலைவில் காடு, மலைகளின் நடுவே பசுமையுடன் தனித்திருக்கிறது அந்த வீடு. தனது தந்தை கட்டிய அந்த வீட்டில் 40 வயதாகும் காவலரான வின்சென்ட் ஸகாரியா வாழ்ந்து வருகிறார். மனநலம் பாதித்த அம்மாவின் இறப்புக்குப் பின்னர், கனவுகள் வழியே வந்துச் செல்லும் அம்மாவின் நினைவு வின்சென்ட்டை அச்சுறுத்துகிறது. இதனால் வின்சென்ட்டும் அவரது அம்மாவைப் போலவே மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அரசல் புரசலாக பேசப்படுகிறது. அவரது திருமணம் பலமுறை தடைபட இதுவும் ஒரு காரணமாகிறது.

மருத்துவரை சந்தித்து, தனக்கு ஒரு குறையும் இல்லை என்பதை உறுதி செய்யும் வின்சென்ட் திருமணத்துக்கு தயாராகிறார். பெண் எல்லாம் பார்த்து முடித்து, போனில் சங்கீத ஸ்வரங்கள் பாடி முடித்து, திருமணத்துக்கு முதல் நாள் மாப்பிள்ளை வீட்டில் சொந்த பந்தங்கள் திரண்டு தடபுடலாக வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. அந்த வீட்டின் முகப்புத் தொடங்கி, வீட்டின் படுக்கையறை வரை மின் விளக்குகளும், பூக்களும் அலங்கரிக்கின்றன. திருமண ஜெபம், அசைவ விருந்து, விருந்தினர்களின் பரிசுப் பொருட்கள், மது போதையென அந்த வீடு முழுவதும் திருமண களைகட்டுகிறது.

அதேநேரம் காட்டுப் பகுதிக்குள் புலி ஒன்று சுற்றித் திரிகிறது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறை அறிவிக்கிறது. ஆனாலும், திருமண வேலைகள் நிற்கவில்லை. ஒருவழியாக உறவினர்கள், விருந்தினர்கள், நண்பர்கள் அனைவரும் அசந்து தூங்கிப்போக, மாப்பிள்ளை வின்சென்ட் விழித்திருக்கிறார். அப்போது அங்கு வரும் காவல்துறை அதிகாரியும், வின்சென்டின் நண்பருமான அசோகன் திருமண அன்பளிப்பைக் கொடுத்துவிட்டு, வனத்தில் புலி திரிவதை கூறி எச்சரிக்கையாக இருக்கும்படி சொல்லிவிட்டு அங்கிருந்த செல்கிறார். இப்படியாக அந்த இரவு முடிய, விடிகிறது.

வின்சென்ட் கோர்ட் சூட் எல்லாம் அணிந்து, ஜெபம் எல்லாம் முடிந்து திருமணம் நடைபெறவுள்ள சர்ச்சுக்கு அனைவரும் கிளம்புகின்றனர். சர்ச்சின் வெளியே போட்டோகிராபர் வின்சென்ட்டை வளைத்து வளைத்து போட்டோ எடுக்கிறார். அப்போது மணப்பெண் தனது காதலருடன் ஓடிபோய்விட்டதாக வின்சென்டின் உறவினர் ஒருவருக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. இத்தகவல் வின்சென்டுக்கு தெரியவர கோபத்தில் அங்கிருந்து தனது வீட்டுக்கு ஆக்ரோஷத்துடன் கிளம்புகிறார். சமாதானப்படுத்த வந்த அனைவரையும் விரட்டி அடித்துவிட்டு தாழிட்ட அறைக்குள் தன்னை பதுங்கிக் கொள்கிறார்.

அந்த பகல் முழுவதும், திருமணம் தடைபட்டதை நினைத்தவாறே மது, புகையென மீண்டும் மீண்டும் எடுத்துக் கொள்கிறார். போதை உச்சந் தலைக்கேறிய நிலையில், தனக்கொரு பெண் துணை தேடி திருமணம் நின்றுபோன நாளின் பின்னிரவில் அந்த காட்டையே சுற்றி வருகிறார். ஒருபுறம் வின்சென்ட், மறுபுறம் புலி காடே பரபரப்பாகிறது. இந்தத் தேடலின் ஒவ்வொரு தோல்வியிலும் வின்சென்ட் போதையை குறையவிடாமல் பார்த்துக் கொள்கிறார். விரக்தியும், வலியும், வெறியேறித் திரியும் வின்சென்டிடம் அந்த ராத்திரியில் காட்டுக்குள் தன்னந்தனியாக உதவிக் கேட்டு நிற்கிறார் அல்ட்ரா மாடர்ன் கேர்ள் மகிஷ்மதி எமிலி ஜெயராம். அவருக்கு உதவுவதாக கூறி தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார் வின்சென்ட். அதன்பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் திரைக்கதை.

படத்தின் துவக்கத்தையும், கதாப்பாத்திரங்களின் குணாதிசயங்களையும், கதைக்களத்தின் சூழலையும் அழகாக விவரித்து, நம்மை கதைக்களத்துள் கொண்டு செல்லும் இப்படம், ஒருகட்டத்தில் அயற்சியை ஏற்படுத்த தொடங்கிவிடுகிறது. காரணம், படத்தின் பிரதான கதாப்பாத்திரமான ஐஸ்வர்யா ராஜேஷ் குறித்த பின்னணி நம்பும்படியாக இல்லாமல் இருப்பதே அதற்கு காரணம். மேலும், லாஜிக் மீறலுடன் வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் கதாப்பாத்திரத்துக்கு படத்தில் பெரிய ஸ்கோப் எதுவுமில்லை. அவரது கதாப்பாத்திரம் மட்டுமல்ல, செம்பன் வினோத், ஜாபர் இடுக்கி, ஜானி ஆன்டனி, லிஜோமல் ஜோஸ் அப்புறம் அந்தப் புலி உட்பட யாருக்கும் படத்தில் பெரிய முக்கியத்துவம் இல்லாமல் வீணடிக்கப்பட்டிருக்கிறது.

தொய்வான இந்தக் கதையை உண்மையில் தாங்கிப்பிடித்திருப்பது ஜோஜு ஜார்ஜின் நடிப்புதான். இரவு காவல் பணியின்போது அம்மாவின் நினைவால் திடுக்கிடுவது, காதல் காட்சிகளில் போனில் குழைவது, குடும்ப உறவினர்களுடன் மகிழ்ந்து சிரிப்பது, விரக்தியுடன் அவர்களை விரட்டியடிப்பது, இயலாமை, சபலம் என வெவ்வேறு உணர்வுகளை அவர் வெளிப்படுத்தும் காட்சிகள் சுவாரஸ்யம். அதிலும் குழிவெட்டியபடி அழுதுபுலம்பும் காட்சியில் வழக்கம்போலவே ஸ்கோர் செய்திருக்கிறார் ஜோஜு ஜார்ஜ். படத்தின் மற்ற கதாப்பாத்திரங்களும் தங்களுக்கான காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

இந்தப் படத்தில், முக்கியமான காட்சி, அந்தத் திருமணம் நின்றுபோன அந்த இரவுக் காட்சிதான். படத்தின் ஒளிப்பதிவாளர் வேணுவின் கேமரா அந்த தனித்த மலைக்காட்டின் வீட்டையும், அந்த இரவையும் உண்மைக்கு மிக நெருக்கமாக படம் பிடித்திருக்கிறது. இஷான் தேவ் இசையில் படத்தில் வரும் பாடல்கள் தலையாட்டி ரசிக்கும் ரகம். அனில் ஜான்சனின் பின்னணி இசை இந்தப் படத்துக்கு வலு சேர்த்திருக்கிறது.

இந்தப் படத்தில் இயக்குநர் வெவ்வேறு வகையான பெண் கதாப்பாத்திரங்களை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக, கால்கள் கட்டப்பட்டு, மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்து மரணித்தவராக ஜோஜு ஜார்ஜின் தாயை இயக்குநர் காட்டுகிறார். இவருக்கு என்ன ஆனது என்பது குறித்து சொல்லாத இயக்குநர், பெண்கள் ஏன் வேலைக்குப் போக வேண்டும், வீட்டிலேயே இருந்து மலையில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு வருமானம் ஈட்டலாம் என கூறும் ஜோஜு ஜார்ஜின் விருப்பத்தின் மூலம் அவர் தந்தை எப்படிப்பட்டவர் என்பதை பார்வையாளர்களுக்கு கடத்துகிறார் இயக்குநர்.

மேலும், வீட்டுக்குள் கழிவறை வைக்காமல், வீட்டுக்கு வெளியே அதை வைத்தது தனது தந்தை என்றும், அதை தானும் தொடரவே விரும்புவதாக ஜோஜு ஜார்ஜ் கூறும் காட்சியின் வழியே அவர் ஒரு பழமைவாத, பிற்போக்கு சிந்தனை கொண்ட ஆணாதிக்கவாதி என்பதை இயக்குநர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இத்தகைய சிந்தனை கொண்ட ஒருவர் அறிமுகமே இல்லாத ஒரு பெண்ணுக்கு செய்துவிட்டதாக நம்பும் துரோகத்தால் மனமுடைவதும், அதற்காக வருத்தப்படுவதும் சினிமாத்தனமாக இருக்கிறது. இதுபோன்ற லாஜிக் மீறல்களுடன் உள்ள இந்தப் படம் நிச்சயம் ஒருமுறை பார்க்கக் கூடிய படங்களின் பட்டியலில் ஒன்றுதான். கடந்த அக்டோபரில் திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம், நவம்பர் 23-ம் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE