ஓடிடி திரை அலசல் | The Village: மர்மம், அச்சுறுத்தல் இருந்தாலும் ‘பலி’யானது?

By கலிலுல்லா

தமிழின் முதல் கிராஃபிக்ஸ் நாவல், வெப் சீரிஸாக உருவாகியுள்ள இந்தத் தொடர் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது. ஹாரர் - த்ரில்லர் பாணியிலான இந்த சீரிஸில் தற்போது வெளியாகியிருக்கும் முதல் சீசன் மொத்தம் 6 எபிசோடுகளைக் கொண்டது. கிட்டத்தட்ட 4 மணி நேரம் செலவு செய்வதற்கு தகுந்த சீரிஸா என்பதைப் பார்ப்போம்.

மருத்துவரான கவுதம் (ஆர்யா) தனது மனைவி நேஹா (திவ்யா பிள்ளை), மகள் மாயாவுடன் (குழந்தை ஆலியா) தூத்துக்குடிக்கு சாலைப்பயணமாக தனது காரில் சென்றுகொண்டிருக்கிறார். அப்போது நெடுஞ்சாலையில் விபத்து ஒன்று ஏற்பட, மாற்றுப்பாதையைத் தேர்வு செய்கிறார். அடர்ந்த காடுகள் அடங்கிய மக்கள் நடமாட்டமில்லாத கட்டியல் என்ற பகுதிக்குள் சென்றுகொண்டிருக்கும்போது வண்டியின் டயர் பஞ்சராகிறது. தனது மனைவி, மகளை காரிலேயே அமரச் சொல்லிவிட்டு உதவிக்காக அருகிலுள்ள கிராமத்துக்குச் செல்கிறார் கவுதம்.

‘அய்யய்யோ கட்டியலா, அது பயங்கரமான ஊராச்சே’ என முதலில் உதவிக்கு முன்வர மறுக்கும் சக்திவேல் (ஆடுகளம் நரேன்), கருநாகம் (முத்துகுமார்), பீட்டர் (ஜார்ஜ் மரியன்) பின்பு ஒப்புக்கொள்கின்றனர். நான்கு பேரும் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று பார்க்கும்போது கவுதமின் மனைவியும், மகளும் மாயமாகின்றனர். இதற்கு மறுபுறம் நடக்க முடியாமல், வீல் சேரில் வலம் வரும் பிரகாஷ் (அர்ஜுன் சிதம்பரம்) தான் நடப்பதற்கு உதவும் லாண்டனைட் எனப்படும் வேதிப்பொருளை கட்டியல் பகுதியிலிருந்து எடுத்து வர விஞ்ஞானிகள் மற்றும் ஃபர்ஹான் (ஜான் கொக்கன்) தலைமையிலான கூலிப்படையை அனுப்புகிறார். இறுதியில் கவுதம் தனது மனைவி மற்றும் மகளை மீட்டாரா? அவர்கள் மாயமானது எப்படி? பிரகாஷ் தேடும் வேதிப்பொருள் கிடைத்ததா? உண்மையில் கட்டியல் பகுதியில் அப்படி என்னதான் இருக்கிறது என்பது திரைக்கதை.

முதல் எபிசோட் ஒருவித மர்மங்களை உள்ளடக்கி அடுத்து என்ன என்ற ஆர்வத்துடன் அழைத்துச் செல்கிறது. ஆனால், அந்த ஆர்வம் அடுத்தடுத்த எபிசோடுகளில் இருந்ததா என்பது மில்லியன் டாலர் கேள்வி. காரணம், திகிலை ஏற்படுத்தும் காட்சிகள் அதிகபட்சம் இரண்டு எபிசோட்கள் வரை தாக்குப்பிடிக்கின்றன. தொடர்ந்து கதையை நோக்கி நகரும் எபிசோடுகள் அதன் அடர்த்தியின்மையால் ஆர்யாவின் காரைப்போல பஞ்சராகிவிடுகின்றன. இதனால் சீரிஸில் வரும் கோர உருவங்களையும், அச்சுறுத்தலை மட்டும் எவ்வளவு நேரத்துக்கு பார்த்துகொண்டிருக்க முடியும்? அதுமட்டுமல்லாமல் சீரிஸில் வரும் கோரமான உருவம் கொண்ட உயிரினங்கள் பயத்தையோ, ஆர்வத்தையோ ஏற்படுத்தாமல் வெறுமனே வந்து செல்வது சோதனை. நடு நடுவே வரும் ‘ஒரு அப்பனுக்கு பொறந்திருந்தா’ போன்ற பிற்போக்குத்தனமான வசனங்கள் எரிகிற தீயில் எண்ணை ஊற்றுகின்றன.

நீடித்திருக்கும் மர்மத்துக்கு காரணங்களை விவரிக்கும் பின்கதையில் பெரிய அளவில் தெளிவில்லாததால் கதையில் ஒன்றுவதே சிரமாக உள்ளது. இதையெல்லாம் தாண்டி ஆர்யாவின் மனைவியையும், மகளையும் தேடிக்கண்டுபிடிப்பதே தொடரின் மையம். விறுவிறுப்பை கூட்ட வேண்டிய அந்தக் காட்சிகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்ததால் அவருக்கு என்ன நடந்தால் என்ன என்றபடி எந்த உணர்வு கடத்தலும் இல்லாத எழுத்து தேமேவென நகர்கிறது. மேலும் சொல்லிக் கொள்ளும்படியான பாதிப்புகளும் அவருக்கு ஏற்படாமல் ‘சேஃப் சோனிலேயே’ இருக்கிறார்.

மறுபுறம் ஜான்கொக்கன் தலைமையிலான கூலிப்படையின் தேடுதல் வேட்டையில் இழப்புகளும், ஆர்யா குழுவில் நேரும் இழப்புகளும் தாக்கத்தை ஏற்படுத்தாது சீரிஸின் பெரும் மைனஸ். வில்லன் கதாபாத்திரமாக சொல்லப்படும் அர்ஜுன் சிதம்பரத்தின் பேச்சில் இருக்கும் வில்லத்தனம் செயலில் இல்லாமல் போக ‘டம்மி’வில்லனாவதால் எந்த பதைபதைப்புக்கும் உத்தரவாதம் கொடுக்கவில்லை.

கோர உருவங்களுக்கான மேக்-அப், யதார்த்தத்துக்கு நெருக்கமான கலை ஆக்கம் ஆகியவை படக்குழுவின் உழைப்பை காட்டுகிறது. அது சீரிஸுக்கு பலமாகவும் அமைந்துள்ளது. கிரீஷ் கோபாலகிருஷ்ணன் பின்னணி இசையும், சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவும் திகில் தருணங்களை கடத்த பெரும் பங்காற்றியிருக்கின்றன.

ஆர்யாவின் பலவீனமான கதாபாத்திரத்தால் அவரது நடிப்பு பெரிய அளவில் கவனம் பெறவில்லை. ஓரிடத்தில் தன் குடும்பத்தை எண்ணி அவர் அழும் காட்சிகளில் செயற்கை தன்மை மேலோங்குகிறது. ஆர்யாவின் மனைவியாக வரும் திவ்யா பிள்ளையும், பேபி ஆலியாவும் கொடுத்ததை செய்துள்ளனர். ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியான், முத்துகுமார், தலைவாசல் விஜய், ஜான் கொக்கன் ஆகிய துணை கதாபாத்திரங்கள் நடிப்பில் ஸ்கோர் செய்கின்றன.

மொத்தமாக, கோரமான உருவங்களையும், சில பல திகில் தருணங்களையும், வலுவில்லாத மையக்கதைக்குள் போர்த்தி 6 எபிசோடுகளாக இழுத்திருப்பதன் மூலம் வில்லேஜில் கொடூரமாக பாதிக்கப்பட்டு பலியாகியிருப்பது 4 மணி நேரம் செலவு செய்த பார்வையாளர்களே. மொத்த சீரிஸிலும் எதிர்கொண்ட அச்சத்தை விட, இறுதியில் அடுத்த சீசனுக்கான லீடு கொடுப்பது தான் உண்மையான திகில்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE