நெட்ஃப்ளிக்ஸ்க்கு எதிராக வழக்கு - ‘ஸ்குவிட் கேம்: தி சேலஞ்ச்’ போட்டியாளர்கள் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

லண்டன்: ‘ஸ்குவிட் கேம்: தி சேலஞ்ச்' ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப் போவதாக எச்சரித்துள்ளனர்.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான தென்கொரிய தொடர் 'ஸ்குவிட் கேம்'. ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கிய மொத்தம் 9 எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு பெரும் சாதனை படைத்தது. நெட்ஃபிளிக்ஸில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட இணையத் தொடர் என்ற பெருமையையும் 'ஸ்குவிட் கேம்' பெற்றிருந்தது. இதன் இரண்டாவது சீசனும் தற்போது உருவாகி வருகிறது.

இந்த தொடரை அடிப்படையாகக் கொண்டு ‘ஸ்குவிட் கேம்: தி சேலஞ்ச்’ என்ற ரியாலிட்டு ஷோவை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறது. அந்த தொடரில் இடம்பெறுவது போன்ற போட்டிகளைக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் 456 போட்டியாளர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு 4.56 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக கிடைக்கும். இதுவரை எந்த ரியாலிட்டி ஷோவிலும் வழங்கப்படாத மிகப்பெரிய தொகை இது.

இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் பலரும் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் நடைபெற்ற ரெட் லைட் கிரீன் லைட் என்ற டாஸ்க்கின் போது, போட்டியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படாததால் பலருக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சி, இங்கிலாந்தில் உள்ள கார்டிங்டன் ஸ்டுடியோஸில் நடக்கிறது. அங்கு கடும் குளிர் நிலவுவதால், போட்டி நடந்த ஆறு மணி நேரமும் போட்டியாளர்களுக்கு குளிருக்கு ஏற்ற ஆடைகள் வழங்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர இருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். இதில் கலந்து கொண்ட மற்றொரு போட்டியாளர், போட்டியின் இடையே முறையான உணவு வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் நடத்திய ’லவ் இஸ் ப்ளைண்ட்’ என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டவர்களும் இதே போன்ற குற்றச்சாட்டை முன்வைத்தது சர்ச்சையான நிலையில், தற்போது ‘ஸ்குவிட் கேம்’ போட்டியாளர்களும் நெட்ஃப்ளிக்ஸ் மீது குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE