சின்னஞ்சிறு வயதில் தொடங்கி சிறுவயதிலேயே முடிந்துவிடுகிற சம்பவங்கள் சில. சின்னஞ்சிறு சிறுவனின் கண்களால் பார்த்த கலவரங்கள் சில. இதுதான் ‘பெல்ஃபாஸ்ட்’ (Belfast) படத்தின் ஒன்லைன். இப்படத்தின் இயக்குநர் சிறுவனாக இருந்தபோது அவரது குடும்பம் வடக்கு அயர்லாந்து நாட்டில் பெல்பாஸ்ட் நகரிலிருந்து இங்கிலாந்துக்கு வெளியேற வேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது? அப்படி அந்நகரில் என்ன மோசமான நிலைமை உருவானது என்பதை தனது நினைவுகளிலிருந்து மீட்டெடுத்து ஒரு குறுநாவலைப் போன்று கதையாக்கியுள்ளார் இயக்குநர் கென்னத் பரனாக்.
நம் காலத்தில் வந்துள்ள மிகச் சிறந்த குழந்தைகள் படம் இது என்பதை படத்தை ஊன்றி கவனித்தால்தான் புலனாகிறது. கருப்பு வெள்ளையில் உருவாக்கப்பட்டது. வண்ண சினிமாவில் பழக்கப்பட்ட இன்றைய ரசிகர்களை பழைய கறுப்பு வெள்ளை திரைப்படங்களை பாருங்கள் என்றால் ‘போங்க பாஸ், வேற வேலை இல்லை’ என்பார்கள். ஆனால் ‘பெல்ஃபாஸ்ட்’ திரைப்படத்தின் சில ஃபிரேம்களே நம்மை இழுத்துக் கொண்டுவிடும். வெளிச்சத்துக்கும் சிறிது வெளிச்சத்துக்குமான வித்தியாசத்தை அவ்வளவு ஒரு துல்லியமான கருப்பு வெள்ளையில் தந்த ஒளிப்பதிவாளர் ஹாரீஸ் சம்பர்லூகோஸ் பணி மிக மிக முக்கியமானது.
தற்போது அபூர்வமாக சில படங்கள் பரிசோதனை முயற்சியாக முழுவதுமாகவே கறுப்பு வெள்ளையிலேயே எடுக்கப்படுகிறது. அக்காலத்தில் கறுப்பு வெள்ளைப் படக் காலக்கட்டங்களுக்குப் பிறகு ஈஸ்மென்ட் கலர், கேவா கலர், டெக்னிகலர், ஆர்வோ கலர் என பலவிதமான கலர்ப் படங்கள் வந்துவிட்டன. அதன் பிறகு மீண்டும் கறுப்பு வெள்ளைப் படமா என கேள்வி எழத்தான் செய்கிறது. ஆனால், வித்தியாசம் செய்ய நினைப்பவர்களின் திரைக்கதைக்கு அதற்கான சில தேவைகளும் காரணங்களும் வைத்திருக்கத்தான் செய்கிறார்கள்.
அண்மைக்கால சில தமிழ்ப் படங்களின் சில முக்கியமான திருப்பங்களில் கறுப்பு வெள்ளைக் காட்சிகள் வருகிறது. கதைநாயகனின் குடும்பத்தில் நடந்த அவர் தெரிந்துகொள்ள வேண்டிய பழைய சம்பவம் ஒன்றை காட்டுவார்கள். அல்லது ஏற்கெனவே நடந்த மறக்க முடியாத சம்பவங்களை சொல்ல பிளாஷ்பேக் உத்தி வண்ண திரையோட்டத்துக்கு நடுவே ஒரு கருப்பு வெள்ளைக்காட்சி இடம்பெறும். ஒரு முக்கியமான சம்பவத்தை வண்ணத் திரைப்படங்களில் தனியாக கருப்பு வெள்ளை காட்சியில் எடுத்துக்காட்டும்போது படத்துக்கு தனி பரிமாணம் கிடைத்துவிடுகிறது. அந்த சில நிமிடங்களில் வரும் பிளாஷ்பேக் கறுப்புவெள்ளைக் காட்சிகள் புதிய சிமென்ட் தரையில் யாரோ கீறிவிட்ட கீறல்களைப்போன்று மனதில் ஏற்படுத்தும் சிலிர்ப்பு அது.
» ஜப்பான்’ முதல் ‘லேபில்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
» மம்மூட்டியின் ‘கண்ணூர் ஸ்குவாட்’ நவ.17-ல் ஓடிடியில் ரிலீஸ்
சர்வதேச பார்வையாளர்களை ஈர்த்த போலந்து படங்கள் 'டைம் டு டய்' (2007), 'ஐடா' (2013), பிரெஞ்சு படமான 'தி ஆர்டிஸ்ட்' (2011) மெக்ஸிகோ திரைப்படமான 'ரோமா' (2018), போன்ற படங்கள் மிக அழுத்தமான கதையம்சத்தோடு இன்றுள்ள வண்ணத் திரைப்படங்களின் காலத்தில் துணிச்சலோடு மிகப்பெரிய முயற்சியுடன் எடுக்கப்பட்ட கறுப்பு வெள்ளைத் திரைப்படங்கள். 2011ல் 'ஆர்டிஸ்ட்' என்று ஒரு கறுப்பு வெள்ளை படம் வந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. 10 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டதோடு ஒரு ஆஸ்கரையும் வென்றது. 'ஆர்டிஸ்ட்' ஒரு பிரமாண்டமான திரைப்படம். 1927-களில் இருந்த திரைப்பட உலகத்தை அதன் வாழ்க்கையோடு எடுத்துக்காட்டியது 'ஆர்டிஸ்ட்'.
கிட்டத்தட்ட அவ்வகையில் சிறுவன் ஒருவனது நினைவுகளின் தொகுப்பாக வந்துள்ள படம் 'பெல்பாஸ்ட்' (2021). இன்று லண்டனில் வாழும் இயக்குநர் தான் பிறந்து 9 வயது வரை வளர்ந்த பெல்ஃபாஸ்ட்டின் நினைவுகளிலிருந்துதான் இது தொகுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பணியாற்றியவர்களும் பெல்பாஸ்ட் நகருடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையவர்கள் என்பது சாதாரணமானது அல்ல.
இப்படம் கடுமையான கரோனா கட்டுப்பாடுகள் இருந்த ஜூன் 2020-லிருந்து செப்டம்பர் 2020 வரையிலான காலகட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. மற்ற படங்களின் பிரமாண்டத்தை ஒப்பிடும்போது இப்படத்தில் ஒரு வீட்டின் முற்றத்தை, பின்பக்கத்தை ஒரு நகரின் சில தெருக்களின் அழகை ஒரு பள்ளியின் வகுப்பறையைத் தாண்டி எதுவுமில்லை. ஆர்டிஸ்ட் அளவுக்கு ரோமா அளவுக்குகூட பல்வேறு பாத்திரங்களின் விவரிப்புக் காட்சிகள் இல்லை. முழுக்க முழுக்க ஒரு பையனைச் சுற்றியே வருகிறது.
குழந்தை உலகத்தின் விளையாட்டுகள் விவரிப்புகள் அதிகம் இல்லாத பட்சத்தில் பின் எப்படி 'பெல்பாஸ்ட்' நம் காலத்தின் மிகச் சிறந்த குழந்தைப் படம் எனக் கூறமுடியும் என்ற கேள்வி எழவே செய்கிறது. இதற்கு எளிதான பதில் படத்திலேயே இருக்கிறது. குழந்தையின் கண்கள் வழியே உள்நாட்டில் ஏற்பட்ட கலவர வரலாறை எப்படி பேசமுடியுமோ அப்படி பேசியுள்ளார்கள். அதற்கு அடிப்படையானது. அதிக விவரிப்புக் காட்சிகள் என விரித்து நீட்டி முழக்காமல். மாறாக, ஒவ்வொரு காட்சியும் உணர்வுகளின் அடிப்படையில் அமையும்போது அதன் வீரியம் ஒரு தேர்ந்த ஆல்பத்தில் உள்ள ஓவியங்களைப்போல அதன் பக்கங்கள் புரட்டப்படுகின்றன.
ஒன்பதே வயதான அச்சிறுவனின் சின்னஞ்சிறு புன்னகையும் வியப்பும் கலந்த அன்புமிக்க பார்வை மட்டுமே நம்மை அவனோடு பிணைத்து விடுகிறது. தெருவில் யாராவது தகராறு செய்தால் துடிக்கும் அவனது முகம் 2 வாரத்துக்கு ஒருமுறை இங்கிலாந்திலிருந்து திரும்பும் தந்தையைப் பார்த்துவிட்டால் சிரிக்கத் தொடங்கிவிடுகிறது. சக மனிதர்களுடன் முரண்பாடு என்றால் சக தோழியைப் பர்த்ததும் கண்கள் ஒளிரத் தொடங்கிவிடுகிறது. அம்மாவின் கண்டிப்பில் முகம் வாடிய அடுத்த தருணமே தாத்தா பாட்டியின் அரவணைப்பில் உலகின் அர்த்தங்களைத் தேட தொடங்கிவிடுகிறான். அவன் காணும் உலகைக் காணும் நாமும் அதே சின்னஞ்சிறு ஈரக்குறுத்தாக மாறி தளிர்விடத் தொடங்கிவிடுகிறோம்.
2020 ஜூன் ஜூலைகளில் கடுமையான கோவிட் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்ட காலமாதலால் சாலைக்காட்சிகளில் பொதுவெளிக் காட்சிகளில் சமூக இடைவெளியை பயன்படுத்தி எடுக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. பெரும்பாலும் இருளைக் காட்டாமல் அதேநேரம் பிரத்தியோக விளக்குகளை பயன்படுத்தாமல், காட்சி அமையும் இடத்தில் என்ன ஒளி எந்த அளவுக்கு கிடைக்கிறேதா அந்த அளவுக்கு சற்று வெளிச்சமாக இருப்பதுபோல் பார்த்துக்கொண்டு இயற்கையான ஒளியில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல மிக முக்கியமான இடங்களில் அதாவது மனம் உணர்வுகளில் தவிக்கும் அல்லது திளைக்கும் இடங்களில் வரும் சாக்சபோன் இசையைத் தவிர, மீதி இடங்களில் மேலும் இயற்கையான ஒலிகளையே பயன்படுத்தியுள்ளார் இசையமைப்பாளர் வான் மோரீசன். அவர் இயக்குநர் குழந்தையாக இருந்தபோது, கென்னத் பாரனாக் வசித்த தெருவுக்கு இரண்டு தெரு தள்ளி அதே கால கட்டத்தில் வசித்தவர் என்பதாலோ என்னவோ நகரின் சர்ச் பெல் ஓசை, ரயில் ஓசை, பள்ளிக்குழந்தைகள் ஆரவாரம், தியேட்டரில் வரும் பின்னணி இசை, காலையில் பறவைகளின் ஓசை என அவரும் இயற்கையான ஒலிகளையே பயன்படுத்தி நம்மை வடக்கு அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகருக்கே கொண்டுசென்று விடுகிறார். பெல்ஃபாஸ்ட் திரைப்படத்துக்கு எட்டு ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஒரு ஆஸ்கர் விருது மட்டும் இத்திரைப்படம் வென்றது. கிட்டத்தட்ட 10 விருதுகளுக்கு பரிந்துரைத்து ஒரு ஆஸ்கர் விருது மட்டுமே கிடைத்த 'ஆர்டிஸ்ட்' படம் போலவேதான். அது பிரெஞ்சு திரைப்படம், இது பிரிட்டிஷ் திரைப்படம்.
400 hundred blows போல, children of Heavan, சமீபத்தில் வந்த Where the tracks end போல குழந்தைப் பருவ விளையாட்டு உலகின் விவரிப்புகள் அதிகம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் ஆஸ்கர் விருது கிடைத்ததற்கான காரணம் படத்தில் ஒரிஜனல் திரைக்கதை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. வரலாறு பல்வேறு சம்பவங்களை புரட்டிப் போட்டுக்கொண்டு வேகமாக நகர்ந்து போய் விடுகிறது. ஆனால் அதனை கண்ணெதிரே காண நேர்ந்த மனம் என்றென்றும் மறக்கமுடியாத ஒரு பக்கத்தை மனதின் புத்தகத்தில் எழுதிவைத்துக் கொள்கிறது.
இயக்குநர் கென்னத் பரனாக் தனக்கு 9 வயது காலத்தில் பெல்பாஸ்ட் நகர வாழ்வின் இனிமையான நினைவுகளின் ஊடே யாரோ பெரும் பாறையை உருட்டிவிட்டதைப்போல நடந்த மிகப்பெரிய கலவரத்தை தன் குழந்தையின் கண்களால் எவ்வளவு முழுமையாக புரிந்துகொள்ளப்படாமல் காட்டப்படுமோ அந்த அளவுக்காவது காட்டிவிடவேண்டும் என நினைத்ததுதான் அவரது ஒரிஜினல் திரைக்கதையின் வெற்றிக்கான முக்கிய காரணமாக இருக்கக் கூடும்.
வடக்கு அயர்லாந்திலிருந்து நடுவே உள்ள கடலைக் கடந்து இங்கிலாந்துக்கு கப்பல் கட்டும் வேலைக்குச் சென்று வருபவர் சிறுவன் பட்டியின் தந்தை. இருவாரத்திற்கு ஒருமுறை அவரை அவன் பார்க்க முடியும். அச்சிறுவன் வசிக்கும் தெருவில் புரட்டஸ்டன்களும் கத்தோக்கர்களும் கலந்துதான் வசிக்கிறார்கள். எனினும் அங்கு கத்தோலிக்கர்கள் சிறுபான்மையினர். என்பதாலேயே புரட்டஸ்டன்ட்கள் அவர்களை அப்பகுதியிலிருந்து வெளியேற வேண்டுமென கலவரங்களை செய்கிறார்கள். சாலையில் காரை ஓட்டி வந்தவர் கலவரக்காரர்களால் மேலும்செல்ல இயலாத நிலையில் காரை விட்டுவிட்டு சென்றுவிட அந்தக் கார் வெடித்து எரிகிறது. வடக்கு அயர்லாந்தில் நடைபெறும் இந்தக் கலவரங்கள் அவன் வசிக்கும் தெருவில் உச்சபட்ச நிலையை அடைகிறது. இவர்கள் வீட்டு மாடியில் கத்தோலிக்கர்கள் யாராவது இருந்தால் வெளியேற வேண்டுமென வந்து மிரட்டுகிறார்கள்..
கலவரத்துக்கு பிறகு தேவாலயத்திற்கு செல்லும் பட்டியின் குடும்பத்தினர் அருட்தந்தை பிரசங்கத்தைக் கேட்கிறார்கள். பட்டியே அவரது பேச்சில் மூழ்கிவிடுகிறான். அவர் ''நமது மதத்தில் இரு பாதைகள் உள்ளன. அதில் நீங்க செல்ல வேண்டிய பாதை ஒரு நல்ல பாதையாகத்தான் இருக்க வேண்டும்'' என உணர்ச்சிபூர்மாக படம் வரைந்து காட்டுகிறார். அவன் வீட்டில் வந்து கலவரத்திற்கான காரணத்தையும் அருட்தந்தை சொன்னதையும் ஒப்பிட்டு தன் தந்தையிடம் விவாதிப்பான். அவரோ மொத்தத்தில் எல்லா சண்டைக்கும் மதம்தான் காரணம் இதில் நல்ல பாதையென்ன கெட்ட பாதையென்ன என்பதுபோல சொல்லி முடித்துவிடவே விரும்புவார்.
காரணம் அவர் சார்ந்த தொழிலாளர் வர்க்க சிந்தனையின் வெளிப்பாடு. அவரது கருத்து கேட்டு சிறுவனுக்கு வியப்பு. ''அப்படியெனில் எங்களை ஏன் சர்ச்சுக்கு அழைத்துச் செல்கிறீர்கள்..?'' அவனது இந்த கேள்விக்கு அவனது தந்தை சொல்லும் பதில், ''இல்லைன்னா உன்னோட பாட்டி என்னை கொன்னுடுவாங்க'' என்பார். எனினும் அவனுக்கு அவரது பதில் போதுமானதாக இல்லை. மேலும் மேலும் விவாதம் செய்கிறான். ஏனெனில் கலவரத்தில் அவன் சற்று சிக்கியிருந்தால்கூட அவன் மண்டையும் பெயர்ந்திருக்கும். எனினும் தாயின் அரவணைப்பில் தப்பி வந்த நினைவுகள் அவனை பீதியுறச் செய்ததன் காரணமாக கேள்விமேல் கேள்வி எழுந்துகொண்டே இருக்கிறது.
இங்கு இயக்குநர் மிகப் பெரிய உலகளாவிய விவாதங்களை சிறுவனின் கேள்விகள் வழியே எழுப்பும்போது நாமும் அந்த விவாதத்துக்குள் நம்மையும் அறியாமல் இழுக்கப்பட்டுவிடுகிறோம். அன்றிரவு அவன் ஒரு தாளை எடுத்து அதில் ஒரு பாதையிலிருந்து பிரியும் இரு பாதைகளை வரைகிறான். அதில் வலதில் செல்லும் பாதைமீது மட்டும் good path என்று எழுதுகிறான். இன்னொன்றில் bad path என்று எழுதுகிறான். சிறுவயது குழந்தை எண்ணங்களில் குடும்பப் பாரம்பரியத்தின் மத எண்ணங்கள் எவ்வாறு ஆட்சி செலுத்துமோ அந்த அளவுக்கு அவனிடம் இருப்பதை இயக்குநர் மிகச் சரியாக வைத்துவிடுகிறார்.
தொடர்ந்து பல்வேறு நாட்கள் கலவரம் நடக்கவே அப்பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. லண்டனின் சிறு ஊதியத்தில் வேலை செய்யும் பட்டியின் தந்தைக்கு வந்துபோவது சிரமமாக இருக்கிறது. நிரந்தரமாக லண்டனுக்கு குடும்பத்தை அழைத்துச் சென்றுவிடலாம் என்பதுதான் அவரது எண்ணமாக இருக்கிறது. ஒவ்வொரு முறை வரும்போதும் இதனை தனது மனைவியிடம் பகிர்ந்துகொள்ள அவருக்கு இங்கு பெரியவர்களுடன் ஒரே வீட்டில் வசிப்பதுதான் பிடித்திருக்கிறது. பட்டிக்கும் இதில் உடன்பாடில்லை. அவனைப் பொறுத்தவரை கலவரங்கள் நடைபெறும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் பெல்பாஸ்ட் ஒரு சொர்க்கபுரிதான்.
பள்ளிக்கூடம், தோழி, தெரு பிள்ளைகளுடன் விளையாட கிடைக்கும் வாய்ப்புகள், சகோதர சகோதரிகளுடன் கடைகள் தியேட்டர், சினிமா என செல்லுதல், தாத்தா பாட்டியின் அன்பான அரவணைப்பு... இதனை விட்டு எப்படி வருவதுதான் என்பதுதான் அவனது கேள்வி. பெல்பாஸ்ட் நகரம் குறித்தான இத்தகைய அழகிய சிறு சித்திரத்தை இயக்குநர் நமக்கு தந்து விடும் திரைக்கதை நேர்த்தி. (தொலைக்காட்சியில், தியேட்டரில் city city bank bank உள்ளிட்ட சிறந்த ஹாலிவுட் படங்களின் காட்சிகள் வண்ணப்படங்களாகவே வருவது இயல்பு.)
பட்டி மற்றும் அவனது உறவினர் மொய்ரா ஒரு இனிப்பு கடையில் இருந்து சாக்லேட்டுகளை திருட முயற்சிக்கும் சம்பவத்தில் அவனது தாய் நடவடிக்கைகள் மிகவும் நேர்மையானவை, வீட்டில் காவல்துறை அதிகாரிகள் வந்து விசாரிக்கும்போது தனது மகன் திருந்த வேண்டும் என்ற நோக்கில் அவன் வீட்டுக்கு வரும் தருணத்தில் காவல்துறையினரை அறிமுகப்படுத்தி ''அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஒழுங்காக பதில்சொல்'' என்று சொல்கிறார். ஒரு கட்டத்தில் தப்பித்து ஓடிவிடுகிறான்.
தொடர்ச்சியான கலவரங்களில் ஒரு முறை பல்பொருள் அங்காடியைக் கொள்ளையடிக்கும் கும்பலில் அவனும் ஒரு ஆளாக இருக்கிறான். ஆனால் அவன் வீட்டுக்கு விலை உயர்ந்த சலவை பவுடர் வீட்டுக்கு எடுத்துவரும்போது அதனை எவ்வளவு கலவரத்திற்கு இடையிலும் தாய் அவனை கடையில் வைத்துவிட்டு வருவதற்காக இழுத்துச்செல்ல அதன்பிறகு எல்லாமே எக்கச்சக்கமாகிவிட 'பைசைக்கிள் தீவ்ஸ்' களேபரக் காட்சிகள் நினைவுக்கு வருகிறது.
பள்ளியில் அவனுடைய தோழியான கேத்தரீன் மீது பட்டிக்கு ஈர்ப்பு என்பதை விட காதல் உண்டு. வகுப்பறையில் அவள் அருகே உட்கார வேண்டும் என்பதற்காகவே கணிதத்தில் முதல் நிலையில் உள்ள அவளுடன் அருகே உட்காரும் வாய்ப்புக்காக 2வது இடத்தை வென்று காட்டுவான். கேத்தரீனைப் பற்றி அவனே அடிக்கடி வீட்டு பெரியவர்களிடம் சொல்வான்... முக்கியமாக தாத்தா பாட்டியுடன் அவளது நட்பு குறித்து பகிர்ந்துகொள்வான். அவள் மீதான தனது காதலை தனது தாத்தாவுடன் அடிக்கடி பேசி அரட்டை அடிப்பான். தோழி நட்பு, காதல், திருமணம் என்பதெற்கெல்லாம் அந்த ஒன்பது வயது பையனைப் பொறுத்தவரை ஒரு பெண்ணின் நட்பான அன்பு என்ற ஒரு அர்த்தம்தான் உண்டு.
ஒரு முறை தந்தையிடமே, ''பிற்காலத்தில் வளர்ந்தபிறகு அவளை நமது வீட்டுக்கு அழைத்துக்கொள்ளலாம், அவளைத்தான் நான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்'' என்று கூறுகிறான். ''நாம் புரடெஸ்ட்டென்ட் பிரிவைச் சார்ந்தவர்கள். அவளோ கதோலிக்கப் பெண் அவளை நமது வீட்டு மருமகளாக ஏற்றுக்கொள்ளமுடியாது'' என்பதை சொல்லி அவளை நமது தோழியாக ஏற்றுக்கொள்ளலாம் என்பதையும் அவர் கூறும்போது அவன் அதிர்ச்சியடையவில்லை. மாறாக சிறு சிரிப்புடன் நல்லவேளையாக அவளது நட்பையாவது நமது குடும்பம் அங்கீகரித்துவிட்டதே என்ற அளவில் மகிழ்ச்சியடைகிறான். ''சரி'' என அவன் தலையாட்டும் இடத்தில் நம் சிறுவயதில் தோன்றும் இனம்புரியாத அன்பை நினைவூட்டத் தவறவில்லை.
பட்டியின் குடும்பத்தை பொறுத்தவரை லண்டனுக்கு குடிபெயருவது உறுதியாகிவிட்ட நாள் ஒன்றும் வருகிறது. பைகளை எடுத்துக்கொண்டு விமானநிலையம் செல்ல அனைவரும் புறப்பட்டு தெருவிற்கு வருகிறார்கள்.. அவன் எதிரே இருக்கும் கேத்தரீன் வீட்டுக்கு சென்று மலர்க்கொத்து தந்து விடைபெறும் காட்சியில் கூட கேத்தரினை அதிகம் காட்டாமல் முழுவதும் சிறுவனின் உணர்வுபூர்வமான நிலையிலிருந்தே கேமரா கோணம் அமைக்கப்பட்டிருக்கும். ஏர்போர்ட் பேருந்து ஏறிவிட்ட பிறகு ஜன்னல் வழியாக தொலைதூரத்தில் ''சென்று வா மகனே'' என்பதுபோல உச்சரித்து தனது மகனை வழியனுப்பும் பட்டியின் பாட்டியை அவனும் அவர்களும் விடைகொடுக்கும் காட்சியும் மிகையில்லாமல் வார்க்கப்பட்டுள்ளது. இவ்வளவு நாள் குடும்பத்தோடு இணைந்திருந்து பிரியும் உறவுகளின் கண்களை கசியவிடாமல் படத்தையே வேறு உயரத்திற்கு எடுத்துச் சென்றுவிடுகிறார் இயக்குநர்.
வாழ்ந்த நகரமும் வாஞ்சையாக அன்பு செலுத்திய வீட்டில் இருந்த தாத்தா பாட்டியும் பேரன் பேத்திகளின் அரட்டைமிக்க கலகலப்பான வளர்ப்பும் எவ்வளவு விழுமியம் மிக்கது என்பதை பல்வேறு முக்கியத்துவம் கொண்ட ஒரு கறுப்பு வெள்ளைக் காவியத்தில் சேர்த்து சொன்னவிதத்தில் 'பெல்பாஸ்ட்' ஒரு தனி இடத்தில் நின்றுவிட்டது. இத்திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் காணக் கிடைக்கிறது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
5 days ago
ஓடிடி களம்
6 days ago
ஓடிடி களம்
8 days ago
ஓடிடி களம்
10 days ago
ஓடிடி களம்
17 days ago
ஓடிடி களம்
19 days ago
ஓடிடி களம்
20 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
24 days ago
ஓடிடி களம்
26 days ago
ஓடிடி களம்
27 days ago
ஓடிடி களம்
27 days ago
ஓடிடி களம்
27 days ago
ஓடிடி களம்
27 days ago