ஓடிடி திரை அலசல் | RDX - கொண்டாட்ட மனநிலைக்கான ரெட்ரோ ட்ரீட் சினிமா!

By குமார் துரைக்கண்ணு

அறிமுக இயக்குநரான நஹாஸ் ஹிதயத் இயக்கத்தில் ஓணம் பண்டிகையையொட்டி வெளிவந்த மலையாளத் திரைப்படம் RDX. ராபர்ட், டோனி, சேவி என்பதன் சுருக்கமே RDX.இது வழக்கமான மலையாள திரைப்படம் அல்ல. நண்பர்கள் அல்லது குடும்பத்துடன் தியேட்டருக்கு போய் பண்டிகைக் காலங்களில் கைத்தட்டி, விசிலடித்துப் பார்க்கக்கூடிய அதிரடி சண்டைக் காட்சிகள், சூப்பர் ஹிட் பாடல்களைக் கொண்ட ஒரு ஹை வோல்டஜ் ஆக்‌ஷன் மசாலாதான் RDX.

ஒரு சண்டைக்காட்சி வரும் இந்த சண்டை ஏன் நடக்கிறது என்று பார்த்தால், இதற்கு முன்பு நடந்த ஏதோ ஒரு சண்டையின் நீட்சியாக அது இருக்கும். ஆமாம், தள்ளுமாலா திரைப்படத்தில் கையாளப்பட்ட அதே பாஃர்முலாதான். இந்தப் படத்திலும் கையாளப்படுகிறது. ஆனால், இந்தப் படத்தின் கதையோ வேறு. இந்தப் படத்தில் வரும் காட்சி அமைப்புகள் அங்காமாலி டைரீஸ், தள்ளுமாலா படங்களை பார்வையாளர்களுக்கு நியாபகப்படுத்தும்.

கொச்சியில் வசிக்கும் ராபர்ட், டோனி, சேவி மூவரும் தற்காப்புக் கலையில் தேர்ச்சிப் பெற்ற நண்பர்கள். இதனால் அவ்வப்போது ஏற்படும் சில சண்டைகளில் இவர்களது கை நீள்வதால் ஏற்படும் பிரச்சினைகள் இவர்களுக்கு எதிரிகளை உருவாக்குகிறது. ஒருமுறை ஏற்படும் பெரும் கலவரத்துக்குப் பிறகு, ராபர்ட்டின் தந்தை அவரை பெங்களூருக்கு அனுப்பிவிடுகிறார். இதனால் ஆர்டிஎக்ஸ் மூவர் அணி பிரிந்துபோகிறது. இருப்பினும் டோனியும் சேவியும் உள்ளூரிலேயே வசிக்கின்றனர்.

இந்நிலையில், 2005-ம் ஆண்டில் அங்குள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் திருவிழா நடக்கிறது. திருவிழாவில் குடித்துவிட்டு தகராறு செய்யும் சிலரை தடுக்க முயற்சிக்கும் பிலீப் (லால்) அந்த கும்பலால் தாக்கப்படுகிறார். இதைப் பார்த்த பிலிப்பின் மகன் டோனி (ஆன்டனி வர்கீஸ்) அவர்களை அடித்து விரட்டுகிறார். அன்று இரவே டோனியின் வீட்டுக்குள் நுழையும் அந்த மர்ம கும்பல், டோனி அவரது தந்தை, தாய், மனைவி மற்றும் குழந்தை சாரா ஆகியோரை மிக கொடூரமாக தாக்குகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பெங்களூருவில் இருக்கும் டோனியின் தம்பி ராபர்ட்டுகக்கு (ஷேன் நிகம்) தகவல் தெரிவிக்கப்படுகிறது.

ஊர் திரும்பும் ராபர்ட் உள்ளூர் நண்பன் சேவி (நீரஜ் மாதவ்) மூலம் நடந்ததை தெரிந்து கொள்கிறான். இப்படி கொலைவெறித் தாக்குதல் நடத்த என்ன காரணம்? தாக்குதலுக்கு உள்ளான குடும்பம் அதிலிருந்து எப்படி மீண்டது? அந்த மர்ம கும்பல் யார்? ராபர்ட் டோனி சேவி மர்ம கும்பலை கண்டுபிடித்தனரா, இல்லையா என்பதுதான் படத்தின் திரைக்கதை. படத்தின் தொடக்கம் முதல் இறுதிக் காட்சி வரை ஆக்‌ஷன் காட்சிகள், காதல் சென்டிமென்ட் என எங்கேஜிங்காக நகர்கிறது.

ராபர்ட் கதாப்பாத்திரத்தில் அழகான தோற்றத்தில் வரும் ஷேன் நிகம், வெகுளித்தனத்துடன் சிரித்த முகத்துடன் காதல், நடனம் சண்டையென அனைத்திலும் முத்திரை பதித்திருக்கிறார். ஷேன் நிகம் மஹிமா நம்பியார் காதல் காட்சிகள் மழை காலத்தில் தோன்றும் வானவில்லாய் மனதை வளைக்கிறது. டோனி கதாப்பாத்திரத்தில் வரும் ஆன்டனி வர்கீஸ், காதல், குடும்பம், குழந்தை என அனைத்து விதமான பரிமாணங்களையும் தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி, ஸ்கோர் செய்திருக்கிறார்.

இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக படத்தின் சண்டைக் காட்சிகளும், இசையும் அமைந்திருக்கின்றன. குறிப்பாக சாம் சி.எஸ்-ன் இசையில், நீல நிலவே பாடல், தமிழகத்தின் பட்டித்தொட்டியெல்லாம் இன்ஸ்டாகிராம் வழியே பயணித்து பலரது ரிபீட் மோட் பாலாக மாறியிருக்கிறது. பின்னணி இசையிலும் சாம் சி.எஸ் மின்னுகிறார்.

அதேபோல், படத்தின் ஒவ்வொரு சண்டைக்காட்சியும் அனல் தெறிக்கிறது. அன்பறிவ் படத்துக்கான சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளனர். மஹாராஜா காலனிக்குள் நடக்கும் சண்டை, க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சி கொஞ்சம் அக்னி நட்சத்திரம் படத்தைப் போல தோன்றினாலும், இதுவேற லெவல். அதுவும் ராக்கி என அனைத்து ரசிகர்களாலும் அறியப்பட்ட பாபு ஆன்டனியை களமிறக்கி இயக்குநர் தரமான சம்பவத்தை செய்திருக்கிறார். படத்தில் வரும் ராபர்ட் காரத்தேவிலும், டோனி பாக்கிங்கிலும், சேவி நிஞ்சாக் கட்டை சண்டை என மூவரும் சண்டைக்காட்சிகளில் வெரைட்டி காண்பித்துள்ளனர்.

இப்படி படத்தில் பாசிட்டவான பல விஷயங்கள் இருந்தாலும், படத்தின் வில்லன்களாக கொச்சியைச் சேர்ந்த மஹாராஜா காலனியைச் சேர்ந்தவர்கள் காட்டப்படுகிறார்கள். இது இயக்குநரின் கற்பனைக் கதைதான் என்றாலும் சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய காலனி பகுதியை அவ்வாறு சித்தரிப்பது, காலனிகள் குறித்தும் அங்கு வாழும் மக்கள் குறித்தும் எதிர்மறையான சிந்தனையையே பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தும். எனவே, அவற்றை தவிர்த்திருக்கலாம். கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் நெட்பிஃளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE