மனிதகுலம் நாகரிகமடையத் தொடங்கிய காலம் முதலே அதன் வளர்ச்சியில் தொழில்நுட்பத்தின் பங்கு அளப்பரியது. சக்கரம், கத்தி போன்ற அடிப்படையான கண்டுபிடிப்புகள் தொடங்கி மனிதர்கள் இன்று தொழில்நுட்பத்தில் எட்டியிருக்கும் தூரம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. காலை எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை தொழில்நுட்பத்தின் உதவியின்றி மனித வாழ்க்கை அசையாது என்பதே நிதர்சனம்.
எனினும் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியில் இருண்ட பக்கமும் இல்லாமல் இல்லை. தனி நபர் முதல் அரசாங்கங்கள் வரை தொழில்நுட்பத்தால் ஏற்படும் தீய விளைவுகளை அலசும் படைப்பே ‘பிளாக் மிரர்’. 2016ஆம் ஆண்டு முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் இதுவரை ஆறு சீசன்கள் வெளியாகிவிட்டன. வெப் தொடர்களைப் போல தொடர்ச்சியாக இல்லாமல் இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு எபிசோடும் தனித் தனி படைப்புகள் ஆகும். இவற்றை எந்த வரிசையிலும் பார்க்கலாம்.
இத்தொடரின் ஆறாவது சீசன் கடந்த மாதம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. மற்ற சீசன்களைக் காட்டிலும் மனித உளவியல் மற்றும் உறவுச் சிக்கல்கள் இந்த சீசனில் ஆழமாக அலசப்பட்டுள்ளன. மொத்தம் 6 எபிசோட்களை கொண்ட இத்தொடரைப் பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
1) Joan Is Awful: பெரிய மென்பொருள் நிறுவனம் ஒன்றில் உயரதிகாரியாக பணிபுரியும் ஜோன், தன் வாழ்வில் நடக்கும் அத்தனை விஷயங்களும் சில மாற்றங்களுடன் ‘ஸ்ட்ரீம்பெர்ரி’ என்ற ஓடிடி தளத்தில் ‘ஜோன் இஸ் ஆஃபுல்’ என்ற தொடராக ஒளிபரப்பாவதைக் கண்டு அதிர்கிறார். இதனால் அவரது வாழ்வில் பல சிக்கல்கள் எழுகின்றன. இதற்கான காரணம் என்ன? ஜோன் அதிலிருந்து மீண்டாரா? என்பதே இந்த எபிசோடின் கதை.
» ஓடிடி திரை அலசல் | Lust Stories 2 - நான்கு கதைகளில் நியாயம் சேர்க்கும் கொங்கனா சென் படைப்பு!
» ஓடிடி திரை அலசல் | Afwaah - வதந்‘தீ’யின் அபாயம் காட்டும் அழுத்தமான படைப்பு!
இத்தொடரின் மூலம் நெட்ஃப்ளிக்ஸ் தளம் தன்னைத் தானே சுயபகடி செய்து கொண்டிருக்கிறது எனலாம். ஓடிடி தளங்களின் காப்புரிமை விதிகள், அவை தனது ஊழியர்கள் மீதும், மற்ற நடிகர்கள் மீதும் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் பேசுகிறது இத்தொடர். Schitt's Creek வெப் தொடரின் மூலம் கவனம் ஈர்த்த Annie Murphy இத்தொடரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
2) Loch Henry: திரைப்பட கல்லூரி மாணவர்களும் காதலர்களுமான பியா மற்றும் டேவிஸ் இருவரும் டேவிஸின் சொந்த கிராமமான லோச் ஹென்றி என்ற ஊருக்கு செல்கின்றனர். முட்டைகளை பற்றி ஆவணப்படம் எடுக்க வரும் அவர்களுக்கு அங்கு வரும் சுற்றுலா பயணிகளை சித்ரவதை செய்து கொன்ற சீரியல் கில்லர் ஒருவனைப் பற்றிய தகவல் கிடைக்கிறது. அவன் குறித்த செய்திகளை சேகரிக்கச் செல்லும் அவர்களுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. ஆரம்பத்தில் மெதுவாக தொடங்கும் இந்த எபிசோட் போகப் போக த்ரில்லிங்கான காட்சியமைப்புகளால் சில்லிட வைக்கிறது.
3) Beyond the Sea: ஆண்டு 1969, விண்வெளி வீரர்களான க்ளிஃப் மற்றும் டேவிட் இருவரும் ஆறு ஆண்டு விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். பூமியில் இருக்கும் ரோபோ வடிவிலான அவர்களது பிம்பத்தின் மூலம் அவர்கள் இருவரும் விண்வெளியில் இருந்தபடியே தினமும் தங்கள் குடும்பத்துடன் நேரம் செல்வழித்து வருகின்றனர் (கூடு விட்டு கூடு பாயும் டெக்னாலஜி என்று வைத்துக் கொள்ளலாம்). ஒரு துரதிர்ஷ்டவசமான தருணத்தில் ஹிப்பிக்கள் சிலரால் டேவிட்டின் குடும்பம் கொடூரமாக கொல்லப்பட்டு, டேவிட்டின் ரோபோ உடலும் எரிக்கப்படுகிறது. விண்வெளியில் பெரும் சோகத்துக்கு ஆளாகும் டேவிட்டின் துயர் துடைக்க, க்ளிஃப் தனது ரோபோ உடலை டேவிட் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கிறார். க்ளிஃப் வீட்டுக்கு க்ளிஃப்-ன் ரோபோ உடலில் செல்லும் டேவிட், சில நாட்களில் க்ளிஃப்-ன் மனைவியுடன் காதல் வயப்படுகிறார். இதன் பிறகு என்னவானது என்பதே இந்த எபிசோட். மனித மனங்களின் உளவியல் குறித்தும் சிக்கல்கள் குறித்தும் இத்தொடரில் மிகச்சிறப்பாக அலசப்பட்டுள்ளது. ‘பிரேக்கிங் பேட்’ தொடரில் ஜெஸ்ஸி பிங்க்மேனாக வந்த ஆரோன் பாலின் நடிப்பு அபாரம். எபிசோடின் விண்வெளி தொடர்பான காட்சிகள், ஸ்டான்லி குப்ரிக்கின் ‘2001: A Space Odyssey' படக் காட்சிகளை நினைவூட்டுகின்றன.
4) Mazey Day: ஒரு கார் விபத்தை ஏற்படுத்திய பிறகு பிரபல ஹாலிவுட் நடிகை மேஸி டே காணாமல் போகிறார். அவரை பற்றிய தகவலை புகைப்படத்துடன் கொண்டு வரும் போட்டோகிராபருக்கு $30,000 பரிசுத் தொகையை ஊடகங்கள் அறிவிக்கின்றன. ஒரு டிவி நடிகரின் தற்கொலைக்கு காரணமாகி விட்டோம் என்ற குற்ற உணர்ச்சியில் இருக்கும் பெண் புகைப்பட நிருபரான போ (Bo) மேஸி டேவைத் தேடி செல்கிறார். நடிகையை போ தேடிக் கண்டுபிடித்தாரா, இறுதியில் என்னவானது என்பதே இந்த எபிசோட். பாப்பராசி புகைப்படக்காரர்களின் பரபரப்பான வாழ்க்கையை பேசிய இந்த படைப்புதான் இந்த ஐந்து எபிசோட்களில் சுமார் ரகம் என்று சொல்லலாம். எங்கேயோ தொடங்கி எங்கேயோ சென்று, வேர்வுல்ஃப் என்றெல்லாம் ஜல்லியடித்திருப்பது ஒட்டவில்லை.
5) Demon 79: தலைப்புக்கு ஏற்றார்போல் 1979ல் நடைக்கும் கதை. துணிக் கடை ஒன்றில் சேல்ஸ் கேர்ளாக வேலை பார்க்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நிடா. கடையின் கீழ்தளத்தில் கிடைக்கும் தாயத்து போன்ற ஒன்றை கண்டுபிடித்து அதன் மூலம் சாத்தானை வெளியே கொண்டுவந்து விடுகிறார். பிரபல இசைக்குழுவான Boney M-ன் பாடகர்களில் ஒருவரது தோற்றத்தில் வரும் சாத்தான், நிடாவிடம் மூன்று கொலைகளை செய்யாவிட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும் என்று சொல்கிறது. நிடா மூன்று கொலைகளையும் நிறைவேற்றினாரா இல்லையா என்பதே இந்த எபிசோடின் கதை. மற்ற எபிசோட்களை விட கலகலப்பாக எடுக்கப்பட்டுள்ள இந்த எபிசோட் நிறவெறி, முதலாளித்துவ சுரண்டல் என பல விஷயங்களை பேசுகிறது.
வழக்கமான ப்ளாக் மிரர் சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் தொழில்நுட்ப மேற்பூச்சுகளை வெகுவாக குறைத்து முழுக்க முழுக்க மனித உளவியல் சார்ந்த பிரச்சினைகளை ஆழமாக பேசியிருக்கிறார் இத்தொடரின் எழுத்தாளர் சார்லி ப்ரூக்கர். கையில் எந்நேரமும் இருக்கும் செல்போனை சில மணி நேரங்கள் தூரவைத்து விட்டு மூளைக்கு பெரிதாக வேலை கொடுக்காமல் ஒரே அமர்வில் ‘பிங்கேவாட்ச்’ செய்ய விரும்புபவர்கள் தாராளமாக பார்க்கலாம்.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
5 days ago
ஓடிடி களம்
6 days ago
ஓடிடி களம்
8 days ago
ஓடிடி களம்
11 days ago
ஓடிடி களம்
17 days ago
ஓடிடி களம்
19 days ago
ஓடிடி களம்
20 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
24 days ago
ஓடிடி களம்
26 days ago
ஓடிடி களம்
27 days ago
ஓடிடி களம்
27 days ago
ஓடிடி களம்
27 days ago
ஓடிடி களம்
27 days ago