ஓடிடி திரை அலசல் | Lust Stories 2 - நான்கு கதைகளில் நியாயம் சேர்க்கும் கொங்கனா சென் படைப்பு!

By கலிலுல்லா

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ (Lust Stories) ஆந்தாலஜியின் சீக்வலாக வெளியாகியிருக்கிறது ‘Lust Stories 2’. பாலியல் உணர்வுகளை பெண்களின் பார்வையிலிருந்து அணுகும் இந்தப் படைப்பை ஆர்.பால்கி, கொங்கனா சென் சர்மா, சுஜோய் கோஷ் மற்றும் அமித் ரவீந்தர்நாத் சர்மா ஆகிய 4 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். இந்த ஆந்தாலஜி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

‘கார் வாங்குவதற்கு முன் டெஸ்ட் ட்ரைவ் செய்கிறீர்கள் தானே... அப்படியிருக்கும்போது கல்யாணத்துக்கு முன் டெஸ்ட் ட்ரைவ் வேண்டாமா?’ என்ற அதிரடியான கேள்வியுடன் தொடங்கும் இயக்குநர் பால்கியின் படம் தொடக்கத்தில் மேற்கண்ட வசனத்தால் ஆர்வத்தை தூண்டுகிறது. திருமணத்துக்கு முன்பான தம்பதிகளின் பாலியல் உறவுநிலை குறித்து பேசும் இப்படைப்பு மிருணாள் தாக்கூர் மற்றும் அவரது பாட்டி நீனா குப்தா ஆகிய இரண்டு பெண்களின் உரையாடலின் வழியே விரிகிறது.

உடைத்து பேசும் நீனா குப்தா கதாபாத்திரமும், அவருக்கான வசனங்களும் கவனம் பெறுகின்றன. இத்தனை முற்போக்கான பாட்டி பாலிவுட்டில் மட்டுமே சாத்தியம். மிருணாள் தாக்கூர் - அங்கத்பேடி வழியே திருமணத்துக்கு முன்பும், அவர்களின் பெற்றோர்களின் வழியே திருமணத்துக்கு பின்பும் என இரு நிலைகளில் நின்று ஆரோக்கியமான பாலியல் உறவுக்கான தேவை குறித்து பேசும் படம் அதற்கான அழுத்தமில்லாமல் கடக்கிறது. அங்கொன்றும், இங்கொன்றும் சில வசனங்களாக சில டெம்ப்ளேட் நடைமுறைகளை கேள்விகேட்கும் படம் ஒட்டுமொத்தமாக ‘டெஸ்ட்’ ட்ரைவில் சொதப்பியிருக்கிறது.

ஆந்தாலஜியின் இரண்டாவது படத்தை கொங்கனா சென் சர்மா இயக்கியிருக்கிறார். அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனிமையிலிருக்கும் டிசைனர் இஷீதா (திலோத்தமா ஷோம்). அவர் வீட்டின் பணிப்பெண் சீமா (அம்ருதா சுபாஷ்). இஷீதாவின் அறையில் தனது கணவருடன் சீமா பாலியல் உறவில் ஈடுபடுகிறார். அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை. ‘voyeurism’ பற்றி இந்திய சினிமாக்கள் பேசியது மிகவும் அரிது. அப்படியான ஒரு கதைக்களத்தை இரண்டு பெண்களை மையப்படுத்தி சொல்லிருக்கும் இந்தப் படைப்பு தொடக்கம் முதலே அழுத்தத்தை கூட்டுகிறது.

திலோத்தமா ஷோம் மற்றும் அம்ருதா சுபாஷ் அட்டகாசமான நடிப்பால் காட்சிகளுக்கேற்ற உணர்வை கச்சிதமாக வெளிப்படுத்துகின்றனர். திலோத்தாமாவின் உலகம் அதைச்சுற்றி நடக்கும் சம்பவங்கள் என காட்சியின் கோர்வையும், தன் மீதான குற்றத்தை அம்ருதா சுபாஷ் எதிர்கொள்ளும் விதமும் படத்தை சுவாரஸ்யமாக்குகிறது. இருவருக்கும் இடையில் அதுவரை நீடித்திருந்த கோபம் கரையும் க்ளைமாக்ஸ் காட்சி மொத்த படத்தின் சூட்டையும் தணித்து நிதானப்படுத்துகிறது. ‘காமம் சார்ந்த பேரார்வங்களுக்கு வர்க்க பேதமில்லை’ என்ற புள்ளியில் மொத்தப் படமும் தனித்து நிற்கிறது.

இந்த சீக்வலின் மூன்றாவது படத்தை இயக்கியிருக்கிறார் சுஜோய் கோஷ். விஜய் வர்மாவின் கார் மரத்தில் மோதி விபத்தாக, மெக்கானிக்கை தேடி அலைகிறார். அப்போது பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டதாக நினைத்த தனது முன்னாள் மனைவி சாந்தியை (தமன்னா) நேரில் பார்க்கிறார். அதைத்தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதை கற்பனை கலந்துசொல்லியிருக்கிறார் இயக்குநர். ஆந்தாலஜி கோரும் கருத்துக்கு நியாயம் சேர்க்காத படைப்பாக உருவாகியிருக்கிறது இந்த எபிசோட்.

விஜய் வர்மா, தமன்னா இருவருக்குமிடையிலான கெமிஸ்ட்ரி கைகொடுக்கிறது. வசனங்கள் மட்டுமே நீளும் கதையில் அதற்கான அழுத்தமான காட்சியமைப்பு கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்படவில்லை. ட்விஸ்ட் மற்றும் அதற்கு நியாயம் சேர்க்கும் வகையிலான கிராபிக்ஸ்கள் பெரிய அளவில் கைகொடுக்காமல் நழுவியிருக்கிறது.

ஆந்தாலஜியின் இறுதி கதையை ‘பதாய் ஹோ’ படத்தின் இயக்குநர் அமித் ரவீந்தர்நாத் சர்மா இயக்கியிருக்கிறார். இருள் சூழ்ந்த வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார் கஜோல். மேற்படிப்புக்காக தனது மகனை எப்படியாவது இங்கிலாந்து அனுப்பிவிட வேண்டும் என போராடுகிறார். இத அவரது கணவர் குமுத் மிஸ்ரா எதிர்க்க இறுதியில் என்ன நடந்தது என்பது மீதிக்கதை.

தன் உலகின் இருண்மையின் சூழலை உணர்ச்சிகளின் வழி கடத்தி மூத்த நடிகையென கஜோல் நிரூபிக்கிறார். ஆனால் அவரது நடிப்புக்கான தீனிக்கு திரைக்கதை போதிய நியாயம் சேர்க்கவில்லை. போகிற போக்கில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை பேசும் படம், குடும்ப வன்முறையையும் பதிவுசெய்கிறது. குறிப்பாக தொற்றுநோயை இயக்குநர் அணுகியிருக்கும் விதம் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. பெரிய அளவில் அழுத்தம் சேர்க்காத படம் பாலியல் துஷ்பிரயோகம் குறித்து பேச முயற்சித்து தடுமாறியிருக்கிறது. மொத்தமாக 4 கதைகளிலும் கொங்கோனா சென் சர்மாவின் கதை டைட்டிலுக்கு நியாயம் சேர்க்க முயன்றிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE