மணிகண்டன் நடித்துள்ள ‘குட் நைட்’ திரைப்படம் ஜூலை 3-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன் நடித்துள்ள திரைப்படம் ‘குட் நைட்’. படத்தில் மீத்தா ரகுநாத் நாயகியாக நடித்துள்ளார். தவிர, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை தமிழகத்தில் சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிட்டது.
ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.20 கோடி வசூலை நெருங்கியதாக தகவல் வெளியானது. கடந்த மேமாதம் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் குறட்டையால் ஒருவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ‘குட் நைட்’ வரும் ஜூலை 3-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் காண முடியும்.