ந
வம்பர் 10-ல் வரும் திப்பு சுல்தான் பிறந்த நாளை திப்பு ஜெயந்தியாக கொண்டாடுகிறது கர்நாடக அரசு. ஆனால், திப்புவுக்கு அரசு சார்பில் விழா கொண்டாடக் கூடாது என்கிறார் மத்திய இணை அமைச்சர் அனந்த் குமார் ஹெக்டே. இதற்கு அவர் சொல்லியிருக்கும் காரணம் திப்பு சுல்தான் ஏராளமான இந்துக் கோயில்களையும் இந்துக்களையும் அழித்தவர் என்பது! கர்நாடகத்தில் இப்படி களேபரங்கள் நடந்து கொண்டிருக்க, தமிழகத்தில் கோவை அருகே பேரூர் பட்டீஸ்வரர் கோயில் சிவனுக்கு திப்பு சுல்தான் உத்தரவுப்படியே இன்றைக்கும் தினமும் தீவட்டி சலாம் வைக்கப்படுவதாகச் சொல்லப் படுகிறது!
சரியாக மாலை ஐந்து மணி. திருச்சிற்றம்பலம் என எழுதப்பட்ட கோயிலின் முன் மண்டபத்துக்கு வரு கிறார் கோயில் ஊழியர். அங்கே துணியால் சுற்றப்பட்டு தயாராய் வைத்திருக்கும் பந்தத்தை எடுத்து எண்ணெயில் தோய்த்து தீவட்டி கொளுத்துகிறார். பற்றவைத்த தீவட்டியை கையில் எடுத்துக் கொண்டு அந்த மண்டபத்தைக் கடந்து பிரகாரத்தில் இருக்கும் கம்பப் தொழுவு சுற்றுகிறார். அப்படியே கொடி மரத்தையும் சுற்றிவந்து, கொடி மர மண்டப வாசலில் தீவட்டியை தலைகுப்புறச் சாய்த்து ஒரு சலாம் வைக்கிறார். அடுத்து, கோயிலின் பிரதான வாயிலிலும் நின்று மும்முறை அதேபோல் தீவட்டி சாய்த்துச் சலாம் வைக்கிறார் கோயில் ஊழியர். அதன்பிறகு, மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து நந்திக்கும் மூன்று சலாம் வைத்து தீவட்டியை அணைக்கிறார்.
இந்த தீவட்டி சலாம் வைபவம் முடிந்த பிறகு மண்டபத்தின் முகப்பில் இருக்கும் விநாயகருக்கு பூஜை நடக்கிறது. அதன் பிறகுதான் கோயிலின் பிரதான மூர்த்திக்கு பூஜைகள் தொடங்குகின்றன. சோழர் காலத்தில் கட்டப்பட்ட பேரூர் பட்டீஸ்வரர் கோயிலின் ஈஸ்வரனுக்கு தினமும் இப்படி தீவட்டி சலாம் செய்ய உத்தரவிட்டதும் திப்பு சுல்தான் என்று சொல்லப்படுவதே இதிலுள்ள தனிச்சிறப்பு!
சிவனுக்கு சலாம் வைத்தது ஏன்?
1790-களில் மைசூரிலிருந்து கோவை, பாலக்காடு மார்க்கமாக கள்ளிக்கோட்டை வரை படையெடுத்தார் திப்பு சுல்தான். அப்படி வருகையில், வழிநெடுகிலும் இருந்த கோயில்களை பரிபாலனம் செய்தவர்களும் ஊழியம் செய்தவர்களும் திப்புவின் படைகளுக்கு பயந்து ஊரை விட்டே ஓடினார்கள் என்பது வரலாற்றுப் பதிவு. அதேபோல், படையெடுப்பின் போது பல்வேறு கோயில்களுக்கும் மதமாச்சர்யங்களைக் கடந்து தானங்களையும் வெகுமதிகளையும் அளித்தார் திப்பு என்ற வரலாற்றுக் குறிப்புகளும் உள்ளன.
அந்த வகையில், பேரூர் பகுதியில் திப்புவின் படைகள் பலமுறை தடம் பதிக்க முயற்சித்ததாகவும் அப்போதெல்லாம் பல இடர்பாடுகள் ஏற்பட்டு படைகள் பின்வாங்கியதாகவும் ஒரு தகவல் சொல்கிறார்கள். ஒருமுறை, பேரூரை படைகள் நெருங்கி விட்ட சமயத்தில் திடீரென திப்பு சுல்தானுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாம். அப்போது, பேரூர் கோயிலில் உள்ள ஏதோவொரு சக்திதான் இத்தனைக்கும் காரணம் என்பதை திப்பு உணர்ந்து கொண்டதாகவும், அதுமுதல், பேரூர் கோயிலில் தனது பெயரில் தினமும் தீவட்டி சலாம் செய்ய உத்தரவிட்டதாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. அன்றிலிருந்து பட்டீஸ்வரருக்கு தினமும் திப்புவின் பெயரால் இந்த தீவட்டி சலாம் வைக்கப்படுவதாகச் சொல்கிறார்கள் கோயில் ஊழியர்கள். இப்படி தீவட்டி சலாம் வைத்து ஊழியம் செய்பவரின் குடும்பத்துக்கு நிலங்களை மானியமாக கொடுத்திருக்கிறார் திப்புசுல்தான்.
தமிழ்நாட்டில் இங்கு மட்டும்தான்!
நாம் போயிருந்த சமயம் பட்டீஸ்வரருக்கு தீவட்டி சலாம் செய்து கொண்டிருந்தார் ஊழியர் ஜி.மூர்த்தி. அவரிடம் பேசினோம். “எனக்குத் தெரிஞ்சு எங்க தாத்தா காலத்துலருந்து எங்க குடும்பத்து ஆட்கள் இந்த தீவட்டி சலாம் செய்யுறோம். எனக்கும் பதினேழு வருசம் கடந்துருச்சு. இந்த ஊழியத்துக்காக இப்ப எங்களுக்கு கோயில் தரப்பிலிருந்து தினமும் 400 கிராம் அரிசியை பிரசாதமா தர்றாங்க. இந்து சமயக் கோயிலில் முஸ்லிம் மன்னர் ஒருவரின் பெயரால் சாமிக்கு மரியாதை செய்யப்படும் வழக்கம் தமிழ்நாட்டில் இங்கு மட்டும் தான் இருக்கு. இதை எங்க தாத்தாவும் அப்பாவும் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன்” என்றார்.
பேரூர் கோயிலின் அறநிலையத்துறை அலுவலர் ஒருவர் நம்மிடம் பேசுகையில், “பிரிட்டீஷார் காலத்தில் இங்கு இதுபோல 86 வகையான ஊழி யங்கள் இருந்தன. அவற்றைச் செய்துவந்த குடும்பங்கள் அனைத்துக்கும் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டிருக்கு. தீவட்டி சலாம் செய்யும் குடும்பத்தினருக்கும் அப்படித்தான் வழங்கப்பட்டிருக்கு” என்றார்.
முக்கிய செய்திகள்
மற்றவை
12 days ago
மற்றவை
20 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
6 months ago