உடல் வளர்த்தேன்.. உயிர் வளர்த்தேனே 22:இதயத்துக்கு நன்மை தரும் ஆசனங்கள்

By டாக்டர் புவனேஷ்வரி

இதயம்தான் உயிரின் ஜீவ நாடி என்பது சுமார் 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்டுள்ளது. இதயவியல் துறையின் தந்தை என போற்றப்படும் வில்லியம் ஹார்வி, ‘எந்த அறிவியலாலும் உருவாக்கப்பட முடியாத பேரதிசயம் நம் இதயம்’ என்கிறார். ஆண் இதயத்தின் எடை சராசரியாக 325 - 400 கிராமும், பெண் இதயத்தின் எடை 275 - 300 கிராமும் உள்ளது. நம் உடல் இயக்கங்களுக்கான உத்தரவை இடும் மூளையைவிட இதயம் முக்கியமானது. மூளைச்சாவு ஏற்பட்ட பிறகும் இதயம் இயங்குவதால்தான் உடல் உறுப்பு தானங்கள் சாத்தியமாகிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இதயத்தை நாம் ஆரோக்கியமாக வைத்திருக்கிறோமா? 3 முக்கியமான காரணங்கள் இதயத்தை சிரமப்படுத்துகின்றன. 1.அதீத உடல் பருமன் 2. நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ளும் அதீத மன உளைச்சல் 3.எந்த உடற்பயிற்சி யும் செய்யாமல் இருப்பது. இந்த மூன்றும் இதயத்தை முடக்கிப் போட முயற்சிக்கும்.

பெண்களுக்கு அதிக பாதிப்பு

சமீபத்தில் எடுக்கப்பட்ட மருத்துவ ஆய்வுகளின்படி, சென்னை உள்ளிட்ட இந்தியப் பெரு நகரங்களில் மாரடைப்புக்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இயற்கையிலேயே, பெண்களுக்கு சுரக்கின்ற ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கும்வரை மாரடைப்பு ஏற்படுவதை பெருமளவில் தடுக்கிறது. அடிப்படையில் இந்த ஹார்மோன் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கிறது என்கிறது மருத்துவ அறிவியல். ஆனால், தற்போது உணவுப் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள், சுற்றுச்சூழல் மாற்றங்களால் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு வெகுவாகக் குறைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஆணோ, பெண்ணோ இரு பாலரும் தங்கள் வாழ்வை இனிதாக்கிக்கொள்ள முறையான ஓய்வு, சுற்றுலா, விடுப்பு, குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுதல் போன்ற செயல்பாடுகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். இவை மன அழுத்தத்தைக் குறைப்பதுடன் மாரடைப்பின் பாதிப்பில் இருந்தும் காக்கும். தினந்தோறும் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்வது அவசியம்.

வெர்டிகோ, முதுகு, கழுத்து வலி, குடலிறக்கப் பிரச்சினை இல்லாதவர்கள் சூர்ய நமஸ்காரம் செய்யலாம். தனுராசனம், சலபாசனம், புஜங்காசனம், உஷ்ட்ராசனம், ஆக்கிரன தனுராசனமும் செய்யலாம். இவற்றைவிட, இதயத்துக்கு மிகவும் நன்மை தரக்கூடியது மத்ஸ்யாசனம்.

மத்ஸ்யாசனம்

முதலில், இந்த ஆசனம் செய்வதற்கு உடலை சற்று தயார்படுத்துவோம். நேராக படுத்துக்கொண்டு, கை, கால்களை தளர்வாக வைத்துக்கொள்ளவும். கை, கால்கள் உடலோடு ஒட்டியிருக்கட்டும். மெதுவாக மூச்சை இழுத்துக்கொண்டே பொறுமையாக தலையைத் தூக்கி, கால்களின் பெரு விரல்களைப் பார்க்க வேண்டும். இப்போது வலது கை முட்டியை வலது இடுப்பு பக்கமும், இடது கை முட்டியை இடது பக்க இடுப்பு பக்கமும் வைத்துக்கொண்டு, மார்புப் பகுதியை நிமிர்த்தி, உச்சந்தலை தரையில் இருப்பது போல வைக்கவேண்டும். இந்த நிலையில் சிறிது நேரம் இருப்பதால், மார்புக்கூடு நன்றாக விரியும். இதனால், இதயம், நுரையீரலுக்கு நன்றாக ரத்த ஓட்டம் பாயும். 10 எண்ணிக்கையில் இந்த நிலையில் இருந்துவிட்டு, தலையை பொறுமையாக கீழே இறக்கவேண்டும். இதுபோல 3-5 முறை செய்யலாம்.

இவ்வாறு செய்து பழகிய பிறகு, மத்ஸ்யாசனம் செய்யலாம். வசதியாக உட்கார்ந்த பிறகு, வலது காலை மடித்து இடது தொடையிலும், இடது காலை மடித்து வலது தொடையிலும் வைத்து, பத்மாசனத்தில் அமரவேண்டும். பத்மாசனத்தில் அமர முடியாதவர்கள், சாதாரணமாக சுகாசனத்தில் அமரலாம். பின்னர், இடது கால் பெரு விரலை வலது கையாலும், வலது கால் பெரு விரலை இடது கையாலும் பிடித்துக்கொண்டு, பொறுமையாக படுக்க வேண்டும். இப்போது, மார்புப் பகுதியை உயர்த்தி, உச்சந்தலை தரையில் இருப்பதுபோல வைக்க வேண்டும். இரு கை முட்டிகளும் தரையில் இருக்க வேண்டும். தரையில் வைக்க முடியாவிட்டால், கால்களைப் பிடித்துக் கொள்ளலாம். பின்னர், இயன்ற வரை மார்புப் பகுதியை உயர்த்த வேண்டும். இந்த நிலையில் பொறுமையாக மூச்சை 3 முறை இழுத்து விடவேண்டும். பிறகு பொறுமையாக தலையை கீழே இறக்கி, கைகளையும் கீழே இறக்கி, கால்களைப் பிரித்து பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இதை 3-5 முறை செய்த பிறகு, கை, கால்களை தளர்வாக வைத்துக்கொண்டு ரிலாக்ஸ் செய்ய வேண்டும்.

நாம் இத்தொடரில் ஏற்கெனவே பார்த்த பவனமுக்தாசனம், இதற்கு மாற்று ஆசனமாகும். மல்லாந்து படுத்துக்கொண்டு, வலது காலை மடித்து, முட்டியை மார்புக்கு அருகே கொண்டுவந்து, இரு கைகளால் கோர்த்துக்கொண்டு, நன்றாக 3 முறை மூச்சை இழுத்து விடவேண்டும். பிறகு இடது காலை இவ்வாறு செய்ய வேண்டும்.

பின்னர், இரு கால்களையும் சேர்த்து மடித்து செய்ய வேண்டும்.

பரம்பரையில் யாருக்காவது இதயநோய் இருந்தால், 35 வயதுமுதல், ஆண்டுக்கு ஒருமுறை இதயப் பரிசோதனை செய்துகொண்டு, வருமுன் இதயத்தைக் காத்துக்கொள்வது நலம்!

- யோகம் வரும்...

எழுத்து: ப.கோமதி சுரேஷ்

படங்கள்: எல்.சீனிவாசன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

2 days ago

மற்றவை

3 days ago

மற்றவை

14 days ago

மற்றவை

19 days ago

மற்றவை

26 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மேலும்