உடல் வளர்த்தேன்.. உயிர் வளர்த்தேனே!- 15: ஆசனங்களின் ராணி.. சர்வாங்காசனம்

By டாக்டர் புவனேஷ்வரி

பெண்கள் 40 வயதைக் கடக்கும்போது, அதாவது மெனோபாஸ் காலங்களில்தான் அதிகப்படியான படபடப்பு, மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர். இத்தனை நாள் தன்னையே சுற்றிச் சுற்றி வந்த குழந்தைகள் தங்களது படிப்பு, வேலை என்று பிஸியாகிவிட, தனக்கு யாரும் இல்லையோ என்று நினைக்கத் தொடங்குகின்றனர். இந்த நினைப்பே அவர்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கிறது. ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களின் சுரப்பு குறைவதும் இதற்குக் காரணம். இந்த சுரப்பு குறைவாக இருக்கும்போது, உடலில் ஒருவிதமான பதற்ற உணர்வு ஏற்படும். இந்த நேரத்தில்தான் அவளுக்கு கணவர் மற்றும் குடும்பத்தினரின் அரவணைப்பு தேவைப்படும். 40-50 வயதுகளில் பெண்கள் எந்த அளவுக்குத் தங்கள் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்கிறார்களோ, அந்த அளவுக்கு இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

மெனோபாஸ் நேரத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு தேய்மான பிரச்சினை வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். சிலருக்கு அதிக உதிரப்போக்கு காரணமாக கருப்பையை எடுக்கக்கூடிய நிலையும் வரலாம். மருத்துவர், யோகப் பயிற்சி நிபுணரிடம் ஆலோசனை பெற்று, யோகாப் பயிற்சிகளை மேற்கொண்டால், கருப்பையை நீக்காமல் பாதுகாத்து ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.

சூர்ய நமஸ்காரம், பவனமுக்தாசனம், புஜங்காசனம், தனுராசனம், சர்வாங்காசனம், ஹலாசனம், பச்சிமோத்தாசனம், மத்ஸ்யாசனம் ஆகியவை மெனோபாஸ் காலகட்டத்தில் செய்யக்கூடிய சிறந்த ஆசனங்கள். மூட்டு வலி இல்லாதவர்கள் சமநிலைப்படுத்தும் ஆசனங்கள் (Balancing Asanas) செய்யலாம். முத்ராக்களில் வஜ்ரொளி முத்ரா, அஸ்வினி முத்ரா, மஹா முத்ரா ஆகியவை சிறந்தது. பந்தாக்களில் (உடல் பூட்டுகள்) ஒட்டி யாண பந்தா, மூல பந்தா நல்லது. நாம் ஏற்கெனவே பார்த்த யோகா நித்ராவும் செய்யலாம்.

அதிக பலன்களைத் தரக்கூடிய, சிறந்த ஆசனங்களில் ஒன்று சர்வாங்காசனம். இதை ‘ஆசனங்களின் ராணி’ (Queen of Asanas) என்பார்கள். உடலின் அனைத்து பாகங்களையும், அதாவது சர்வ அங்கங்களையும் தோளில் தாங்குவதால் சர்வ அங்க ஆசனம் என்ற பெயர். இந்த ஆசனத்தை எல்லோராலும் எளிதில் செய்ய இயலாது. அவர்கள் விபரீதகரணி என்ற பயிற்சியில் இருந்து தொடங்கலாம்.

விபரீதகரணி எப்படி செய்வது? முதல் படத்தில் காட்டியவாறு, சுவரை ஒட்டியவாறு முடிந்தவரை நெருக்கமாகப்படுத்துக்கொள்ள வேண்டும். இரு கால்களையும் உயர்த்தி சுவரின் மேல் வைக்க வேண்டும். பிறகு உடலை நேராகக் கொண்டுவர வேண்டும். இப்படிச் செய்யும்போது, நம் கீழ் இடுப்பு பகுதிக்கும், சுவருக்கும் இடையே இடைவெளியே இருக்காது. இரு கால்களும் சுவரின் மேலே இருக்கும். இப்போது இரு கைகளையும் முதுகுக்குப் பின்னால் கொண்டுவந்து, இடுப்பை உயர்த்த வேண்டும். கைகளை இடுப்புக்கு பலமாக வைத்துக்கொண்டு, நன்றாக இடுப்பை உயர்த்த வேண்டும். ஆரம்ப நிலைகளில் கால்களை சுவரிலேயே வைத்திருக்க வேண்டும். இதே நிலையில் ஒரு வாரம் பயிற்சி செய்த பிறகு, ஒரு காலை சுவரில் வைத்து, இன்னொரு காலை மட்டும் எடுத்துப் பயிற்சி செய்யலாம்.

விபரீதகரணி ஆசனம் நன்கு பயின்ற பிறகு, சுவரின் பிடிமானம் இல்லாமலேயே சர்வாங்காசனம் செய்யலாம். மல்லாந்து படுத்துக்கொண்டு, காலில் தொடங்கி ஒவ்வொரு பாகமாக உயர்த்தி, பிறகு கைகளை இடுப்பு பகுதி யில் பலமாக வைத்துக்கொண்டு, அனைத்து பாகங்களையும் மேல்நோக்கி செங்குத்தாக உயர்த்திய நிலையில் வைத்துக்கொள்வதுதான் சர்வாங்காசனம்.

இந்த ஆசனங்கள் செய்வதால், இடுப்பு பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரித்து, மெனோபாஸால் ஏற்படக்கூடிய பல பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

- யோகம் வரும்...

எழுத்தாக்கம்:ப.கோமதி சுரேஷ்

படங்கள்: எல்.சீனிவாசன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

8 days ago

மற்றவை

16 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

5 months ago

மேலும்