இ
ன்னும் நான்கு மாதங்களானால் நூற்றாண்டு கொண்டாடலாம், பாரதியின் ‘பீரங்கி சிப்பாய்’ படைப்புக்கு. எனினும் இப்படியொரு படைப்பைப் பாரதி எழுதியிருக்கிறார் என்பதையே தமிழுலகம் இதுவரை அறிந்ததில்லை.
பாரதி கடலூருக்கு அருகில் கைதாவதற்கு 10 மாதங்களுக்கு முன் எழுதிய படைப்பு இது. பாரதி யின் தனித்தன்மையான இந்த எழுத்தோவியம் முதல் உலகப் போரின் சூழல்களை எதிரொலிப்ப தாகவும் நவீனத் தமிழ் இலக்கியத்தின் புதுமுறை முன்னோடி முயற்சியான ‘தராசு’ கட்டுரைகளின் வரிசையில் நிறைவாக வைக்கத்தக்கதாகவும், கதைத்தன்மை வாய்ந்த கட்டுரையாகவும், எல்லாச் சமயங்களும் சொல்லும் கடவுள் ஒன்றுதான் என்னும் இறைமை பற்றிய பாரதியின் சிந்தனைப் போக்கைக் காட்டும் மற்றுமொரு படைப்பாகவும் அமைந்துள்ளது. விநாயகர் நான்மணிமாலை, பாரதி அறுபத்தாறு முதலியவற்றின் சில கருத்துகளோடு ஒப்பிடத்தக்கதாகவும், பாரதியின் வாழ்க்கை நிகழ்வுகளோடு இணைத்து நோக்கத்தக்கதாகவும் இந்த உரைநடைச் சித்திரம் விளங்குகின்றது. இதனைப் பாரதி 19.01.1918-ல் ‘காளிதாஸன்’ என்னும் தன் புனைபெயரில் சுதேசமித்திரனில் எழுதியுள்ளார்.
ரெனோசான்
அக்காலத்தில் இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கம் இருந்த பகுதிகளில் ‘ரெனோசான்’ என ஒரு பிரிவினர் இருந்தனர். இந்துக்களாகவும் முஸ்லிம்களாகவும் கிறித்தவர்களாகவும் இருந்த அவர்கள், பிரெஞ்சுக்காரர்களின் சட்டதிட்டங்களைப் பின்பற்றுபவர்கள். பிரெஞ்சுக்காரர்களுக்குரிய விசேஷ உரிமைகளை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்த அவர்கள், போர்க் காலங்களில் கட்டாயமாகப் போர்ப்படையிலே சேர்ந்து பிரெஞ்சுக்காரர்களுக்காகப் போர் புரிய வேண்டும் என்பதும் விதி. அத்தகைய ரெனோசான்களில் ஒருவர் பிரெஞ்சுக்காரர்களுக்காகப் புதுவை பகுதியிலிருந்து போருக்குச் சென்று வந்த நிகழ்வைச் சுவையாக எடுத்துரைக்கும் படைப்பே ‘பீரங்கி சிப்பாய்’ ஆகும்.
பாரதியால் பூணூல் அணிவிக்கப்பட்ட சீடர் ரா.கனகலிங்கம் பாரதியின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றைப் பின்வருமாறு சித்திரித்துள்ளார்:
‘பாரதியாருக்கு சாதி வித்தியாசங்களை அடியோடு தொலைத்துவிட வேண்டும் என்ற புரட்சிகரமான லட்சியம் அந்நாளிலேயே உண்டு. அரசியல் துறையில் மட்டுமல்ல, சமூகத் துறையிலும் இவர் பெரும் புரட்சிக்காரர். வாய்ச்சொல் வீரரல்லர், செயல் - திறமை வாய்ந்த தீரர். ஆகவே, இப்பெரியார் தம் வீட்டில் ஐந்து ஹரிஜன வாலிபர்களுக்கு விருந்து நடத்தினார் ஒரு சமயம்.
1914-ம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது உலக மகாயுத்தத்துக்குக் கட்டாயச் சேவகமாய்ப் புதுவையிலிருந்து ஐந்து பிரெஞ்சு இந்திய வாலிபர்கள் அனுப்பப்பட்டார்கள். இவர்களில் ஒருவர் பாரதியாருக்குப் பிரெஞ்சு தேசிய கீதங்களைக் கற்றுக்கொடுத்த அந்துவேன் அர்லோக்.
ஜேம்ஸ் ஸாமுவேல் என்ற வேறொரு வாலிபர், பாரதியார் பாடும் சமயங்களில் பிடில் வாசிப்பவர். இவர்களை உள்ளிட்ட ஐவருக்கும் பாரதியார் தாம் வசித்துவந்த ஈசுவரன் தருமராஜா வீதி இல்லத்தில் விருந்து நடத்தியது அந்நாளில் அவ்வூரில் எத்தகைய வீரதீரப் புரட்சிச் செயலாக இருந்திருக்க வேண்டும் என்பதை இந்நாளில் உணர்ந்துகொள்வது எளிதன்று.
- (ரா.கனகலிங்கம், என் குருநாதர் பாரதியார், ப.71-72)
இந்த நிகழ்ச்சி உண்மைதான் என்பதை உறுதிப்படுத்துவதாகவும் இந்த நிகழ்ச்சியோடு தொடர்புடையதாகவும் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘பீரங்கி சிப்பாய்’ அமைந்துள்ளது.
ரெனோசான் பிரிவினரில் ஓர் இளைஞன். அவன் பெயர் அல்பேர் ழக்கோலியா. காரைக்காலைச் சேர்ந்தவன். அவன் கட்டாய ராணுவ சேவைக்காக பிரான்ஸுக்குச் சென்று போரில் ஈடுபட்டு, ஆபத்துகளைத் தாண்டி மீண்டும் தாய்மண் வந்து சேர்கிறான். போர்முனைக்குச் செல்வதற்கு முன்னும் போய்வந்த பிறகும், அந்த இளைஞன் பாரதியைச் சந்திக்கிறான். பாரதி சொல்லிக் கொடுத்த ஒரு மந்திரமே அவனைக் குண்டுகளிலிருந்து தப்பும்படி செய்தது என்று சொல்லி நன்றி செலுத்துகிறான்.
இந்தப் படைப்பைப் பாரதி அழகாக இப்படித் தொடங்குகிறார்.
“இருபது வயதுப் பையன். பார்வைக்கு மிகவும் அழகு. மாநிறம். மலர்ந்த குவளைப் பூக்களைப் போலே பொன் விழியுடையவன். முகத்தில் யௌவனக் களை ததும்புகிறது. வட்ட முகம். தலையிலே ஏறக்குறைய ஒரு தோசைக்கல்லைப் போலே, கறுத்த ரோமத்திலே செய்யப்பட்ட ஒரு குல்லாய் போட்டுக்கொண்டிருந்தான். அந்தக் குல்லாவை மீறி நான்கு புறத்திலும் கன்னங்கரேலென்று கத்தரித்த மயிர்க்குஞ்சங்கள் மிகவும் அழகாகத் தொங்கிக்கொண்டிருந்தன. கனமான கோட்டும், கால்சராயும், பூட்ஸும் போட்டுக்கொண்டு வந்தான்.”
- (பீரங்கி சிப்பாய்)
ரெனோசான் பிரிவினரைப் பற்றிப் பாரதி பின் வருமாறு இந்தப் படைப்பில் அறிமுகம் செய்துள்ளார்:
“காரைக்கால், பிரான்ஸ் குடியரசுக்குச் சொந்தமான ஊர். அங்கும், இந்தியாவில் பிரான்ஸ் தேசத்துக்குச் சொந்தமான மற்ற ஊர்களிலும் ‘ரெனோஸான்’ என்ற கூட்டத்தார் இருக்கிறார்கள். இவர்கள் யாரெனில், ஹிந்து சட்டத்தை வேண்டாமென்று தள்ளித் தமது விவாகம், தாய பாகம் முதலிய ஸகல விஷயங் களையும் பிரெஞ்ச் சட்டப்படி நடத்திக்கொள்ளுகிறவர்கள். கிறிஸ்தவர்களிலேயே பலர் ‘ரெனோஸான்’ ஆசாரபடி ஹிந்து சட்டத்தைத் தழுவி ஆகாதபடி நடக்கிறார்கள். அவர்கள் தமக்கு ‘நிலை மாறாக் கிறிஸ்தவர்’ என்று பெயர் சொல்லிக்கொள்ளுகிறார்கள்.”
“ஒருவன் ‘ரெனோஸான்’ ஆகிவிட்டால் பிறகு, தமிழ்ப் பெயர் கிடையாது. ஐரோப்பிய நாமத்தையே தாரணம் செய்துகொள்வான். திருஷ்டாந்தமாக, என்னை இன்று காலையில் வந்து பார்த்த மேற்படி இளைஞனுக்கு ‘அல்பேர் ழக்கோலியோ’ என்று பெயர். நல்ல தொண்டை மண்டலத்து வேளாளன். வீட்டில் பேசுவது சுத்தமான தமிழ். பெயர் மாத்திரம் அல்பேர் ழக்கோலியோ”.
சண்டை வந்தவுடனே பிரான்ஸ் தேசத்துக்குச் சொந்தமான காரைக்கால், புதுச்சேரி முதலிய ஊர்களிலுள்ள ‘ரெனோஸான்’கள் சேனையிலே சேரும்படியாயிற்று. பிரான்ஸ் தேசத்திலும், பிற இடங்களிலும் பிரெஞ்ச் சாதியைச் சேர்ந்தோர் அத்தனை பேரும் கட்டாய ராணுவ சேவகம் பண்ண வேண்டும் என்பது விதி. பிரெஞ்ச்சுக்காரருக்குச் சொந்தமான ஹிந்து தேசத்து நகரங்களில் வசிக்கும் ஹிந்துக்களும், நிலைமாறாக் கிறிஸ்தவர்களும் இந்த விதிக்கு உட்பட்டாரல்லர். ‘ரெனோஸான்’கள் மாத்திரம் மேற்படி விதிக்கு உட்பட்டவர்.
- (பீரங்கி சிப்பாய்)
தராசுக் கட்டுரைகள்
பாரதியின் உரைநடைப் படைப்புகளுள் தனித்தன்மை வாய்ந்த படைப்புகள் ‘தராசு’ கட்டுரைகளாகும். இன்றைய இதழியலின் நவீன பத்தி எழுத்துகளுக்கு முன்னோடி என்று இதனைக் குறிப்பிடுவது மரபு. பாரதி ஒரு தராசுக் கடை வைத்திருந்ததாகவும், யார் வேண்டுமானாலும் வந்து தராசினிடம் கேள்வி கள் கேட்கலாம், தராசு தரும் பதில்களை பாரதி வெளிப்படுத்துவார் என்னும் உத்தியில் உள்ளூர் விஷயங்கள் தொடங்கி உலக விஷயங்கள் வரை பாரதி தன் பார்வைகளைத் தராசு கட்டுரைகளின் வாயிலாக வெளியிட்டுள்ளார்.
பாரதிதாசன் பாரதியைச் சந்தித்த புகழ்பெற்ற சந்திப்பு தராசுக் கடையில் நடந்ததாகவே வெளிப் பட்டுள்ளது. இந்தத் தராசுக் கடைக்குக் காரைக்காலிலிருந்து போர் முனைக்குச் செல்ல இருந்த அல்பேர் ழக்கோலியா என்னும் ரெனோசான் இளைஞன் வந்து ஆலோசனையைக் கேட்டுச் சென்றானாம். அதனைப் பாரதி இப்படிக் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த அல்பேர் ழக்கோலியோ என்ற பிள்ளையாண்டான் சண்டைக்குப் போகு முன்பு நான் வைத்திருந்த தராசுக் கடைக்கு வந்து நமது மந்திரத் தராசினிடம் சில புத்திகள் கேட்டுக்கொண்டு போனான். ‘சண்டையில் செத்தால் வீர சொர்க்கம் உண்டென்று சொல்லுகிறார்களே மெய்தானா? ‘பீரங்கிக் குண்டு நம் மேலே அடிக்காமல் இருக்க மந்திரமுண்டா?’ எனப் பல கேள்விகள் கேட்டான். அதற்கு மந்திரத் தராசைக் கலந்து நான் உத்தரங்கள் கொடுத்தேன்.
- (பீரங்கி சிப்பாய்)
பாரதியிடம் உபதேசங்கள் பெற்றுக்கொண்ட அந்த இளைஞன் 1915-ம் ஆண்டு புதுச்சேரியிலேயே ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டு, பின்னர் பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பப்பட்டான். எட்டு மாதங்கள் போர் முனையிலிருந்த அவன், ஜெர்மானியர்கள் வீசிய பெரிய பீரங்கிக் குண்டுகளையெல்லாம் சந்தித்து ஒருவாறு உயிர் தப்பினான். அல்ஸாஸ் மலைகளின் மேலே அவன் போரில் ஈடுபட்டிருந்தான்.
‘அவனோடு பாரிஸ் நகரத்துக் கவிஞர் ஒருவரின் மகன், போன்ஜான் என்னும் பெயருடையவன் போரில் ஈடுபட்டிருந்தான். அவன் நெருங்கிய நண்பனாகவும் ஆகிவிட்டான். நன்றாகப் பாடும் திறமையுடையவன் அவன். அவன் பாடக் கேட்கும்போது ஏற்படும் நிலையை, “போன்ஜானுடைய வாயினால் பாடக் கேட்டால் ஐயோ கல்லும் உருகும்; இரும்பும் கண்ணீர் உதிர்க்கும்” என்று அல்பேர் ழக்கோலியோ பாரதியிடம் கூறுகிறான்.
பாரதி சொல்லிக்கொடுத்த மந்திரம்
போர் முனையிலேயே நண்பன் போன்ஜான் பீரங்கிக் குண்டுகளுக்குப் பலியாக, பாரதியின் நண்பன் ழக்கோலியா உயிர் தப்புகிறான். பிரான்ஸ் நாட்டின் கத்தோலிக்க மடத்தார் அளித்த ஜபமாலையையும் சொல்லிக்கொடுத்த ஜபமந்திரங்களையும் போர்முனையில் நாள்தோறும் ழக்கோலியோ சொல்லிக் கொண்டிருப்பானாம்.
ஆனால், தலைக்கு மேலே பீரங்கிக் குண்டு வரும்போது மட்டும் பாரதி சொல்லிக்கொடுத்த உபதேச மந்திரத்தைச் சொல்வானாம். போர் முனை யிலிருந்து மீண்டுவந்த அந்த இளைஞன் பாரதியைச் சந்தித்து அவர் சொல்லிக்கொடுத்த மந்திரத்தால்தான் தான் தப்பித்ததாகக் குறிப்பிடுகின்றான்.
அப்படி உயிர் தப்பும்படி பாரதி சொல்லிக்கொடுத்த மந்திரம் என்ன தெரியுமா?
ஆங்கிலத்தில் கடிதம் எழுதும்போதுகூடக் கடிதத் தின் தலைப் பகுதியில் அவர் தமிழில் எழுதிய மந்திரம், ‘கணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்’ எனத் தொடங்கும் பாடலுக்கு முன் பல்லவியாகப் படைத்த மந்திரம்தான். ஆம்! பாரதியை இடைவிடாமல் இயக்கிக்கொண்டிருந்த ‘ஓம் சக்தி’ என்னும் மந்திரம் தான் அது.
“ஆனால், தலைமேல் பீரங்கிக் குண்டு வரும்போது ‘ஓம் சக்தி’ என்பேன். தாங்கள் கற்றுக்கொடுத்த ‘சக்தி மந்திரமே’ என்னைக் குண்டுகளிலிருந்து தப்பும்படி செய்தது” என்று அந்த இளைஞன் ழக்கோலியோ சொல்லிவிட்டு, முத்தாய்ப்பாக உடன்பாட்டு நோக்கில் ஒரு கேள்வியைக் கேட்கிறான், “யேஹோவா, மரியா, ஈசன், மாரி எல்லாம் ஒன்றுதானே?” என.
விநாயகர் நான்மணிமாலையில்,
“விநாயக தேவனாய், வேலுடைக் குமரனாய்
நாரா யணனாய், நதிச்சடை முடியனாய்,
பிறநாட் டிருப்போர் பெயர்பல கூறி
அல்லா, யெஹோவா எனத்தொழு தன்புறும்
தேவருந் தானாய், திருமகள், பாரதி,
உமையெனுந் தேவிய ருகந்தவான் பொருளாய்,
உலகெலாங் காக்கு மொருவனைப் போற்றுதல்.”
என்றும், பாரதி அறுபத்தாறில்
“பேருயர்ந்த ஏஹோவா, அல்லா நாமம்
பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும்
பூமியிலே கண்டமைந்து, மதங்கள் கோடி
புத்தமதம், சமணமதம், பார்ஸி மார்க்கம்
சாமியென யேசுபதம் போற்று மார்க்கம்,
ஸநாதனமாம் ஹிந்து மதம்; இஸ்லாம்; யூதம்
நாமமுயர் சீனத்துத் ‘தாவு’ மார்க்கம்;
நல்லகண் பூசிமத முதலாப் பார்மேல்;
யாமறிந்த மதங்கள்பல வுளவா மன்றே;
யாவினுக்கு முட்புதைந்த கருத்திங் கொன்றே.’’
என்றும் பாடிய, ஏஹோவா, மரியா, அல்லா, ஈசன் எல்லாவற்றிலும் ஒரே கடவுளைக் கண்ட, புதிய ஆத்திசூடியில் “உருவகத்தாலே உணர்ந்து உணராது பலவகையாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே” என்றும் பாடிய பாரதி உணர்த்திய உபதேசத்தைத் தான் இளைஞன் ழக்கோலியோ அந்தப் படைப்பில் வினாத் தொனியில் எதிரொலிக்கிறான்.
அதைக் கேட்டதும் பாரதி “சபாஷ், பீரங்கி சிப்பாய்” என்றாராம். இந்தப் படைப்பைப் படித்து முடித்ததும் நமக்கும் அதைத்தான் சொல்லத் தோன்றுகிறது. பாரதியின் பீரங்கி சிப்பாயைக் கண்டு கைகுலுக்க ஒரு நூற்றாண்டு தேவைப்பட்டிருக்கிறது. அவரது முழுமை யைக் கண்டு கைகூப்ப இன்னும் எத்தனை காலம் தேவைப்படுமோ?
- ய.மணிகண்டன்,
பேராசிரியர் - தலைவர்,
தமிழ் மொழித் துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்.
தொடர்புக்கு: v.y.manikandan@gmail.com
இன்று பாரதியாரின் நினைவு தினம்
முக்கிய செய்திகள்
மற்றவை
11 days ago
மற்றவை
19 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
6 months ago