த
க்காளி விதைத்தால் தக்காளி விளையும்.. கத்தரி விதைத்தால் கத்தரிதான் காய்க்கும்.. ஆனால், பாறப்பள்ளம் கிராமத்து தோட்டங்களில் எதை விதைத்தாலும் அதன் ஊடாகவே பெரிய, பெரிய நத்தைகளும் முகிழ்த்து வருகின்றன!
கோவை மாவட்டம் காரமடை, வெள்ளியங்காடு அருகே உள்ளது பாறப்பள்ளம். கோவை மாநகர் மாவட்ட கிராமங்களுக்கு வரும் பில்லூர் குடிநீரை சுத்திகரிக்கும் இரண்டு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைந்துள்ள பகுதியில் உள்ளது இந்த கிராமம். சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து வெளியேறும் உபரி நீரானது பாறப்பள்ளம் வழியாகவே தேக்கம்பட்டி பவானி ஆற்றை அடைகிறது.
நத்தைகள் முகாம்
இந்த நீர் பாயும் பகுதிகளில் உள்ள கெம்பாரம்பாளையம், பாறப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தங்களது தோட்டங்களில் தற்போது தக்காளி, கத்தரி, துவரை, அவரை என விதைப்புப் போட்டுள்ளனர். இவையெல்லாம் பூத்துக் காய்பிடித்து முற்றுவதற்குள்ளாகவே செடிகளில் ஏராளமான நத்தைகள் புகுந்து, விளைந்து நிற்கும் தக்காளி, தட்டை, துவரை போன்றவற்றை கடித்து அரித்துவிடுகின்றன. இதனால் மூன்றில் ஒருபங்கு விளைச்சல் நாசமாகிவிடுவதாகச் சொல்கிறார்கள் விவசாயிகள்.
இரவில் இப்படி விளைச்சலை சேதப்படுத்தும் நத்தைகள் பகலில் சூரிய வெளிச்சம் பட்டதும் இருட்டுப் பகுதிகளுக்குள் நுழைந்து விடுகின்றன. அப்படி, இந்த நத்தைகள் தோட்டங்களின் ஓரம் உள்ள கல்லுக் கால்கள், பிடுங்கிக் கிடக்கும் மரங்கள், பலகைகள் போன்றவற்றின் அடியில் கொத்துக் கொத்தாய் ஊர்ந்து கொண்டிருக்கின்றன. இப்போது, இவைகளைத் தேடிப்பிடித்து அழிப்பதே விவசாயிகளுக்கு ஒரு பெரும் வேலையாகிப் போய்விட்டது
உப்பைப் போட்டு அழிக்கிறோம்
தனது தோட்டத்தில் சந்து பொந்துகளுக்குள் பதுங்கிக் கிடந்த நத்தைகளை பிடித்து ஒரு இரும்புச் சட்டியில் போட்டுக் கொண்டிருந்த பாறப்பள்ளம் விவசாயி மூர்த்தி படுத்தியெடுக்கும் நத்தைகள் குறித்து நம்மிடம் பேசுகையில், “தினம் தப்பினாலும் தப்பும் தினமும் இப்படி சட்டி சட்டியாய் நத்தைகளை எடுத்துட்டுபோய் அழிப்பது மட்டும் எங்களுக்கு தவறுவதில்லை. ஒரு வருசமா விளைச்சலை அறுவடை செய்யறோமா இல்லையோ இந்த நத்தைகளை நல்லாவே தூக்கிச் செமக்கிறோம்.” என்று நொந்துகொண்டார்.
“என் வயசுக்கு இந்தப் பக்கம் இப்படி நத்தைகளை பார்த்ததே இல்லை. ரெண்டொரு வருசமாத்தான் இப்படி நத்தைகள் பெருக்கெடுக்குது. எப்படி பார்த்தாலும் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான நத்தைகளை இப்படி சட்டியில் எடுத்துட்டுப் போய் சாதாரண உப்பைப்போட்டு அழிக்கிறோம். ஆனாலும் அடுத்தடுத்த நாள்ல ஏகமா உற்பத்தியாகுது. ஒருவேளை, வானத்துலருந்தே உழுகுதோ இல்ல, நிலத்துலருந்தே வெளையுதோ என்னவோ. ஒண்ணுமே புரியலை” என்றார் தொட்டத்தம்மன் கவுடர் என்ற விவசாயி.
“எங்களுக்கு 15 ஏக்கர்ல காய்கறி தோட்டம் இருக்கு அதோட விளைச்சல்ல மூணுல ஒரு பகுதியை இந்த நத்தைகள் சேதப்படுத்திடுது. மழை பெய்ஞ்சா போதும் இப்படி நத்தைக புறப்பட்டுடுது!” என்கிறார் சவுந்தர ராஜன் என்ற விவசாயி. இந்த நத்தைகள் மீது உப்பைப் போட்டால் நுரைபொங்கி அப்படியே செத்து விடுகின்றன. இப்படி அழிக்கப்படும் நத்தைகளை குப்பையிலோ அல்லது பாழுங்கிணற்றிலோ கொண்டு போய் போடுகிறார்கள்.
சொதக்கு சொதக்குன்னு மிதிபடுது
இதுகுறித்து மீண்டும் நம்மிடம் பேசிய மூர்த்தி, “இதுக்கு முந்தி சின்னச் சின்ன நத்தைகள் வட்ட, வட்டமா இங்கே இருக்கும்; பார்த்திருக்கோம். அது அவ்வளவா பயிர் பச்சைகளை கடிக்காது. ஆனா, இப்ப வர்ற இந்த நத்தைகள் ஒவ்வொண்ணும் சங்கு வடிவத்துல 50 கிராம், 100 கிராம் எடைகூட வரும் போல இருக்கு. இதுகளால நமக்கு தோல் வியாதிகள் எதுவும் வருமோ தெரியலை. ஆனா ஒண்ணு, தோட்டத்துக்குள்ள எறங்கினா கால்ல முதல்ல சொதக்கு, சொதக்குனு மிதிபடறது இந்த நத்தைகள் தான். நத்தை ஓடு கால்ல ஏறுனா காயம் ஆற மாதக் கணக்குல ஆகுது. இதுக, கால்ல மிதிபட்டு நசுங்கிறபோது ஒரு அருவெறுப்பு, ஒரு வாசம் உண்டாகுது. அதோட புழங்கீட்டு வீட்டுக்கு வந்தா சாப்பிடக்கூட முடியறதில்லை!” என்றார்.
நத்தை தொல்லை குறித்து கடந்த ஒரு வருடம் முன்பே கோவை ஆட்சியரிடம் முறையிட்டாார்கள் விவசாயிகள். அப்போது, ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லி நத்தை மாதிரிகளை எடுத்துச் சென்ற வேளாண் அதிகாரிகள் அதன்பிறகு எட்டிக்கூடப் பார்க்கவில்லையாம்!
கருணாநிதி எடுத்த நடவடிக்கை
இதேபோல் 10 ஆண்டுகளுக்கு முன்பு, கோவை குறிச்சிக் குளக்கரை அருகே உள்ள காலனியின் வீடுகளில் லட்சக் கணக்கில் நத்தைகள் புகுந்தன. இரவானால் வீட்டுக்குள் நத்தைகள் வந்து, சாப்பாட்டு பாத்திரம், உணவுப் பண்டங்கள், காய்கறிகள் என ஏகத்துக்கும் ஊர ஆரம்பித்தன. இதனால் அங்கிருக்கும் மக்கள் படாதபாடு பட்டனர். இதுதொடர்பாக மீடியாக்களில் வெளியான செய்தியைக் கவனித்த அப்போதைய முதல்வர் கருணாநிதி, உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில், அதிகாரிகள், அந்த காலனி பகுதியில் இருந்த குப்பை கூளங்கள், நத்தைகள் புறப்பட்டு வரும் புதர்கள் உள்ளிட்டவைகளை போர்க்கால நடவடிக்கை எடுத்து அப்புறப்படுத்தினர். அதுபோல, இப்போதும் முதல்வரே தலையிட்டு அதிகாரிகளை முடுக்கிவிட்டால்தான் நத்தைகள் முகாமை நகர்த்த முடியும் போலிருக்கிறது!
முக்கிய செய்திகள்
மற்றவை
12 days ago
மற்றவை
20 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
6 months ago