மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஏழை இளம் பெண் வைஷாலி, குஜராத்தில் கட்டிட விபத்தில் சிக்கி சென்னையில் தன் வாழ்க்கையை மீட்டெடுத்திருக்கிறாள். அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது வைஷாலியால் எல்லோரையும் போல இயல்பாக சாப்பிட முடிகிறது. தன் தாய், சகோதரருடன் பேசிச் சிரிக்க முடிகிறது. கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பழைய நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறாள் வைஷாலி!
விபத்தால் வைஷாலிக்கு நேர்ந்த குறைபாடுகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோரி, சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்துக்கு எதிராக வைஷாலி குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். வழக்கு விசாரணை தொடர்பாக செப்டம்பர் 1-ம் தேதி ஆஜராகுமாறு ராஜ்கோட் நீதிமன்றத்தில் இருந்து வைஷாலிக்கு அழைப்பு வந்தது.
இதனால் கண் சிகிச்சைக்கு முன்னர் குஜராத் செல்ல அவர்கள் முடிவெடுத்தனர். சென்னையில் இருந்து ராஜ்கோட் செல்வதற்கு முன்பு, ‘தி இந்து’ அலுவலகம் வந்து ஆசிரியர் குழுவைக் காண வேண்டும் என்று வைஷாலி குடும்பத்தினர் எண்ணினர்.
ஆகஸ்ட் 28, திங்கள்கிழமை மாலை.
மழையால் மண்ணும் மனமும் நெகிழ்ந்திருந்த மாலை வேளை.. அலுவலகத்தில் பரபரப்பாக வேலை ஓடிக்கொண்டிருந்தது.
வைஷாலி குடும்பத்தினர் ‘தி இந்து’ தமிழ் அலுவலகத்துக்குள் நுழையும்போதே, முன்னெப்போதும் இல்லாத மகிழ்வும் தெளிவும் அவர்கள் முகத்தில் தெரிந்தது. வந்தவுடன் வைஷாலி குடும்பத்தினர் தங்கள் மொழியில், ‘‘வைஷாலி சார்பாக ‘தி இந்து’வுக்கு நன்றி’’ என்றனர். நெடு நாட்களுக்குப் பிறகு, வைஷாலியின் முகத்தில் புன்னகையைக் காண முடிந்தது. அவரது சகோதரர் கூறிய சில வார்த்தைகளுக்கு நீண்ட நேரம் சிரித்துக்கொண்டிருந்தார் வைஷாலி.
அலுவலகம் வந்த வைஷாலி, அவரது தாய் மற்றும் சகோதரருக்கு டீ, வடை அளிக்கப்பட்டது. வைஷாலி திரவ உணவு மட்டுமே உட்கொண்டு வந்ததைப் பார்த்திருந்த நாம், அன்று அவளாகவே தன் வாய் வழியாகச் சாப்பிட்டதை முதல்முறையாகப் பார்த்தோம்.
கலகலத்துச் சிரித்த வைஷாலியால் அந்த இடமே உணர்வுபூர்வமாக மாறியது. மகிழ்ச்சியுடன் ‘தி இந்து’ தமிழ் அலுவலகம் வந்த வைஷாலி குடும்பத்தினர், நெகிழ்ச்சியுடன் இருப்பிடம் திரும்பினர்.
ஆகஸ்ட் 29, செவ்வாய்க்கிழமை காலை.
கிட்டத்தட்ட மூன்று மாத சென்னைவாசத்துக்குப் பிறகு வைஷாலி குடும்பத்தினர் குஜராத் கிளம்பினர். அவர்களை வழியனுப்ப குஜராத்தி மண்டலைச் சேர்ந்த நரேந்திராவும் உடன் சென்றார். சென்ட்ரல் ரயில் நிலையம். சொந்த ஊருக்குச் செல்லும் உற்சாகத்தில் இருந்தாள் வைஷாலி. கைச்செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று 1,000 ரூபாயை வைஷாலியின் அண்ணன் கையில் வைத்தார் நரேந்திரா. அவர்கள் தயங்க.. ‘நானும் உங்கள் குடும்பத்தில் ஒருவன்தான்’ என்று சொல்லித் திரும்பிய நரேந்திராவின் கண்கள் குளமாகியிருந்தன.
ரயில் ஒலியெழுப்பித் தன் புறப்பாட்டைத் தெரிவித்தது.
‘‘மீண்டும் கண் சிகிச்சைக்காக வைஷாலி வருவாள். பார்வை பெறுவாள்!’’ என நம்பிக்கையோடு சொல்லிவிட்டுப் புறப்பட்டார் வைஷாலியின் தாய்.
- பயணம் இலக்கை அடைந்தது
உதவும் உள்ளங்களே!
திக்கற்று நின்ற வைஷாலி குடும்பத்தினரை ‘தி இந்து’ அலுவலகம் கொண்டுவந்து சேர்த்த ஆட்டோ ஓட்டுநர் கரீம், ‘தி இந்து’ ஆசிரியர், மருத்துவர் எஸ்.எம்.பாலாஜி, குஜராத்தி மண்டல் உறுப்பினர் நரேந்திரா, அவர்கள் உண்ணவும் உறங்கவும் வழிசெய்த குஜராத்தி மண்டல், இரைப்பை மற்றும் குடலியல் சிகிச்சை நிபுணர் பிரேம்குமார் என பல்வேறு நல்ல உள்ளங்களின் கூட்டுமுயற்சியால்தான் இது சாத்தியமாகி இருக்கிறது.
இந்த உண்மைக் கதையை நாங்கள் பிரசுரிக்கக் காரணம், ‘தி இந்து’ வாசகர்களாகிய உங்களாலும் இவர்கள் மாதிரியான லட்சக்கணக்கான மக்களுக்கு உதவமுடியும் என்று உணர்த்தவே!
இதுபோன்ற காரியங்களை பத்திரிகைகள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்பதில்லை. தவிர, தேவையுள்ள அனைவருக்கும் பத்திரிகை சார்பில் உதவுவது நடைமுறையில் சாத்தியமும் இல்லை.
ஆனால் மனதும், நேரமும், வசதியும் கொண்ட நல்ல உள்ளங்கள் ஒன்றுசேர்ந்தால் இத்தகைய உதவிகளை அவர்களாகவே செய்ய முடியும்.. ஆமாம்தானே!
வைஷாலிக்கு உதவ விரும்புபவர்களுக்காக.. அவர்களது வங்கிக் கணக்கு குறித்த விவரம்:
Acc Name: VAISALI MANOHAR PAWAR
Acc No: 916010031591536
AXIS BANK (METODA, GIDC)
IFSC Code- UTIB0000809
முக்கிய செய்திகள்
மற்றவை
16 hours ago
மற்றவை
8 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
5 months ago