‘எனக்குள் தமிழை விதைத்தது இலங்கை வானொலி’: பூரிக்கிறார் பூவரசி மக்கள் விருதாளர்!

By ஆர்.டி.சிவசங்கர்

மிழாசிரியர், எழுத்தாளர், பதிப்பாளர், குறும்பட இயக்குநர் - உதகை அரசு கலைக்கல்லூரி தமிழ் துறையின் உதவிப் பேராசிரியர் போ.மணிவண்ணனுக்குத்தான் இத்தனை முகங்கள்!

நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே வசிக்கும் படுகர் இனத்தில் பிறந்தவர் மணிவண்ணன். தாய்மொழியைவிட தமிழ் மீது தீராப்பற்று கொண்ட இவர், தமது இல்லத்துக்கு தமிழாலயம் என்று பெயர் வைத்திருக்கிறார். தந்தை, தாய், மனைவி, இரண்டு சகோதரர்கள் என ஒட்டுமொத்த இவரது குடும்பமே ஆசான் குடும்பம்தான்!

பல தளங்களில் தமிழ் பணி

தந்தை போஜன் வழியில் தமிழில் தடம்பதித்த மணிவண்ணன், பதிப்பாளராகவும் தன்னை பட்டைதீட்டிக் கொண்டார். 15 ஆண்டுகளுக்கு முன்பு, தனியார் கல்லூரியில் பணியாற்றியபோது தகிதா எனும் தனது பதிப்பகத்தைத் தொடங்கிய இவர், அதன் மூலமாக இதுவரை 75-க்கும் மேற்பட்ட படைப்பாளர்களின் நூல்களை பதிப்பித்து வெளியிட்டுள்ளார். அத்துடன், தானும் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.

கவிதை, கட்டுரை, ஆய்வு மற்றும் மொழிபெயர்ப்பு என தனது தமிழ் பணியை பல தளங்களில் தொடர்கிறார் மணிவண்ணன். இவர் எழுதிய ‘பெய்த நூல்’ கவிதை தொகுப்பிலுள்ள ‘அமைதி யுத்தம்’ என்ற கவிதையை பாலக்காடு மாவட்ட தமிழ்வழிப் பாடத்திட்டத்தில் 8-ம் வகுப்புப் பாடத்தில் சேர்த்துள்ளது கேரள அரசு. அடுத்ததாக, ஊடகத்துறையின் மீது கவனத்தைத் திருப்பியிருக்கும் இவர், மூன்று குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.

குறும்படங்களின் இயக்குநர்

தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘புனிதா’, பிளாஸ்டிக் அச்சுறுத்தலைச் சொல்லும் ‘முனை’, விவசாயத்தைப் பாதுகாக்க வலியுறுத்தும் ‘மருதக் குட்டியும் மகாலட்சுமி என்ற எருமையும்’ ஆகிய அந்த மூன்று குறும்படங்களில், ‘புனிதா’ மும்பையில் நடந்த அரசு திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடதக்கது.

இடையில், கருணாநிதியின் பராசக்தி வசனத்தை கவிதையாக வடித்து கருணாநிதியிடமே பாராட்டை பெற்ற இவர், எட்டாவது உலக தமிழ் மாநாட்டில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் சிறந்த கவிஞருக்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் கின்னஸ் சாதனைக்காக ஒரே மேடையில் 350 நூல்களை வெளியிட்டது. அதில், மணிவண்ணனைப் பற்றிய நூலும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. எழுத்து, கலை, இலக்கியம் மற்றும் ஊடகத்துறைகளில் சமூக அக்கறையுடன் செயல்படுவோருக்காக வழங்கப்படும் சர்வதேச அளவிலான ‘பூவரசி மக்கள் விருது’க்கும் மணிவண்ணன் தேர்வுசெய்யப் பட்டுள்ளார்.

இலங்கை வானொலியால்..

பன்முகத்தன்மை கொண்ட தனது பயணம் குறித்து நம்மிடம் பேசிய மணிவண்ணன், “நீலகிரி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமமான அட்டு மண்ணில் பிறந்த என்னை தமிழ்தான் உயரத் தூக்கிப் பிடித்தது. இலங்கை வானொலிதான் எனக்குள்ளே தமிழை விதைத்தது எனச் சொல்லலாம்.

இலங்கை வானொலியின் தமிழ்சேவை ஒலிபரப்பின் மூலம் தமிழால் ஈர்க்கப்பட்ட நான், தமிழ் படிக்க வேண்டும் என்பதற்காகவே புதுக்கோட்டை செந்தமிழ் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கு மூன்றாண்டுகள் வனவாசம் இருந்து தமிழ் படித்தேன். அதன்பிறகு கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் முதுகலை பயின்ற போது, அங்கு சிந்தனை மன்றம் எனது தமிழை மேம்படுத்தியது. காட்சி ஊடகமானது மக்களிடம் மின்னல் வேகத்தில் செய்திகளைக் கொண்டுபோய் சேர்த்துவிடுகிறது. அதனால்தான் இப்போது, காட்சி ஊடகத்தின் மீதும் கவனம் செலுத்துகிறேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

2 days ago

மற்றவை

3 days ago

மற்றவை

14 days ago

மற்றவை

19 days ago

மற்றவை

26 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மேலும்