திருப்பூரில் அதிகரிக்கும் நாய் தொந்தரவால் மக்கள் அச்சம்

By செய்திப்பிரிவு

திருப்பூர் நகரில் பல்வேறு பகுதிகளில் நாய்கள் கூட்டமாக அலைவதுடன், சாலையில் செல்லும் சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட பலரை கடித்து வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, திருப்பூரைச் சேர்ந்த பெயர் தெரிவிக்க விரும்பாத வாசகர் ‘தி இந்து’ ‘உங்கள் குரல்’ பதிவில் கூறியிருப்பதாவது:

திருப்பூர் 13-வது வார்டுக்கு உட்பட்ட மாஸ்கோ நகர் அருகே பாத்திமாநகர் பகுதியில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு 6 வயது சிறுவன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அப்பகுதியில் நாய்கள் கூட்டமாக திரிந்து கொண்டிருந்தன. அதில் ஒரு நாய், அந்த சிறுவனை திடீரென கடித்துக் குதறியது. இதில் கால் பகுதியில் சதை கிழிந்து படுகாயம் ஏற்பட்டது. பரிசோதனை செய்த மருத்துவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிறுவனை பதிவு செய்து, தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பாத்திமாநகர் பகுதியில் இரவு நேரத்தில் மட்டுமின்றி பகல் நேரத்திலேயே சாலையில் நடந்து செல்வோர், இருசக்கர வாகனங்களில் செல்வோர் மீதும் நாய்கள் விரட்டி விரட்டிக் கடிக்கின்றன என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அது மட்டுமின்றி 12-வது வார்டுக்கு உட்பட்ட முருங்கப்பாளையம் பூந்தோட்டம் பகுதியிலும் நாய்கள் கூட்டம் கூட்டமாக அலைகின்றன என்று அப்பகுதியைச் சேர்ந்தோர் கூறினர். 14-வது வார்டுக்கு உட்பட்ட அம்மன் நகர், அமர்ஜோதி கார்டன் உள்ளிட்ட பகுதிகளிலும் இதே நிலை உள்ளது. இது போல் நகரின் பல பகுதிகளிலும் நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து, பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

நகரெங்கும் பரவலாக பல நாட்கள், வாரக்கணக்கில் குப்பை அகற்றப்படாமல் அப்படியே கிடக்கின்றன. சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பையில் உணவு தேடி நாய்கள் வருகின்றன. அதிலும், கோழிக்கழிவுகளை ஆங்காங்கே கோழிக்கடை விற்பனையாளர்கள் கொட்டிச் செல்வதும் நடைபெறுகிறது. முறையாக அள்ளப்படாமல் தேங்கியிருக்கும் குப்பை இருக்கும் இடங்களில் எல்லாம் நாய்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இரவு, அதிகாலை நேரங்களில் மட்டுமின்றி பகல் பொழுதுகளிலும் நாய்கள் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. நாய் கடியால் நடந்து செல்வோர் காயமடைவதும், சாலைகளில் குறுக்கும், நெடுக்குமாக அலைந்து இருசக்கர வாகனங்களில் செல்வோரை நிலை தடுமாற வைப்பதும் தொடர்கிறது.

எனவே நாய்த் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வழக்கமாக மாநகராட்சி நிர்வாகத்தார், தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து மீண்டும் விட்டு விடுகின்றனர்.

அதுவும் தற்போது நடைபெறுவதாகத் தெரியவில்லை. இந்த நடவடிக்கையால் நாய்கள் எண்ணிக்கை கட்டுப்பட்டதாகவும் கூற முடியாது. எனவே தெரு நாய்களைக் கட்டுப்படுத்த உரிய முறையில் ஆலோசித்து சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நோய்வாய்ப்பட்ட நிலையில் மாநகரில் ஏராளமான நாய்கள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பும்...

திருப்பூர் மாநகராட்சி நகர் நல அலுவலர் பூபதி ‘தி இந்து’விடம் கூறியதாவது:

திருப்பூர் மாநகரில் சுற்றித்திரியும் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையை, தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறோம். கடந்த 3 மாதங்களாக பணிகள் நடைபெறவில்லை. நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்து, அடுத்த ஒருவார காலத்துக்குள் அதன் வாழ்விடத்திலேயே விட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு உள்ளது.

ஆகவே, நாய்களை ஒருவார கால சிகிச்சைக்குப்பின் மீண்டும் அங்கு கொண்டு போய் விடுகிறோம்.

இதனால் நாய்களின் எண்ணிக்கை குறையாமல் இருப்பது போல், பொதுமக்களுக்கு தெரியும். முன்பெல்லாம் நாய்களைப் பிடித்தால், கொன்று அப்புறப்படுத்துவோம். ஆனால், புளுகிராஸ் அமைப்பின் முறையீட்டால் தற்போது நாய்களைக் கொல்வது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. அதேபோல், சாலையில் சுற்றித்திரியும் ஏராளமான நோய்வாய்ப்பட்ட நாய்களுக்கும், கருத்தடை அறுவை சிகிச்சையின்போது பிரத்யேக சிகிச்சை வழங்குகிறோம் என்றார்.

நகரெங்கும் பரவலாக பல நாட்கள், வாரக்கணக்கில் குப்பை அகற்றப் படாமல் அப்படியே கிடக்கின்றன. சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பையில் உணவு தேடி நாய்கள் கூட்டமாக வருகின்றன.

************

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

உங்கள் குரல் தொலைபேசி எண்கள்

சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE