கற்றது எப்போது கற்பிக்கப்படுகிறதோ, அப்போது கற்ற கல்வி உயிர்பெறும்.
ஜீ தமிழ் 'தங்க மங்கை' விருது, ஆனந்த விகடன் 'டாப் 10 மனிதர்கள்' விருது, ஆரோ கல்வியகம் சார்பில் தமிழக ஆளுநர் ரோசய்யா கையில் 'சிறந்த ஆசிரியர்' விருது, நல்லாசிரியர் விருது, மாவட்ட ஆசிரியரிடம் இருந்து கல்வி மற்றும் சேவைக்கான பாராட்டுச் சான்றிதழ், அக்னி சிறகுகள் அறக்கட்டளையின் சிறந்த ஆசிரியர் விருது ஆகியவற்றோடு, "எங்களுக்கு எந்தக் கவலையும் இல்ல; டீச்சர் எல்லாத்தையும் பாத்துப்பாங்க!" என்னும் மாணவர்களின் வார்த்தை விருதுகளைத் தாங்கி நிற்கிறார் அன்பாசிரியர் மகாலட்சுமி.
திருவண்ணாமலையின் சிறு கிராமத்தில் லட்சுமி இல்லாத வீட்டில் பிறந்தார் மகாலட்சுமி. அப்பாவுக்கு பார்வையில் கோளாறு. சில ஆண்டுகளில் அம்மாவுக்கு மனநிலை சரியில்லாமல் போனது. அக்கா கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்ற, மகாலட்சுமி பலரின் ஆதரவால் படித்தார். ஆசிரியர் பயிற்சி முடித்தவருக்கு அரசுப் பணி கிடைத்தது. ஜவ்வாது மலையில் உள்ள மலைவாழ் கிராம பழங்குடியினர் நல தொடக்கப்பள்ளியில் வேலை. ஆர்வத்துடனும், கொஞ்சம் பயத்துடனும் முதல் நாள் பள்ளிக்குச் சென்ற ஆசிரியர் மகாலட்சுமி திரும்பியது அழுகையுடன்.
தன் ஆசிரியப் பணி குறித்து என்ன சொல்கிறார்?
''மலைவாழ் மக்கள் என்பதால், அங்கே மக்களிடம் கல்வி குறித்த விழிப்புணர்வே இல்லை. பெற்றோர் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்தனர். பிள்ளைகள் வராததால் ஆசிரியர்களும் ஆர்வமில்லாமல் இருந்தனர். நான் சென்ற முதல் நாளில் பள்ளியில் ஆசிரியர் உட்பட யாருமே இல்லை. ஏமாற்றத்துடனும், அழுகையுடனும் வீடு திரும்பிய நான், அடுத்தடுத்த நாட்களில் பள்ளிக்கு அருகிலிருந்த வீடுகளுக்கு சென்று மாணவர்களை அழைத்துவர முயற்சி செய்தேன். பரிசோதனைக்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர், 'ஏழைக் குழந்தைங்க மா. கொஞ்சம் பார்த்து செய்யுங்க' என்று சொல்லிச் சென்றார். அவரின் அந்த ஒற்றை வாக்கியம் என்னை ஏதோ செய்தது.
அருகிலிருந்த வீடுகளுக்கு மட்டும் சென்று கொண்டிருந்த நான், உள்ளார்ந்த இடங்களுக்கும் செல்ல ஆரம்பித்தேன். பழம் பொறுக்கச் செல்வது, விளையாடப் போவது, வீட்டில் இருப்பது என்று பொழுதைக் கழித்த குழந்தைகள் பள்ளிக்கு வர மறுத்தனர். மேலே கட்டப்பட்டிருக்கும் பரண்களில் ஒளிந்து கொண்டனர். அத்தோடு சமதளத்தைச் சார்ந்தவர்களை மலைவாழ் மக்கள் வீட்டுக்குள் வர அனுமதிக்கவில்லை. தொடர்ந்த போராட்டங்களுக்குப் பிறகு பரண்களில் ஏறி, குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டி, பிஸ்கட்கள் கொடுத்து பள்ளிக்கு அழைத்து வர ஆரம்பித்தேன்.
தாயுமானவர்
சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு எங்கள் பள்ளியில் குழந்தைகள் சத்தம் கேட்டது. ஆனால் அவர்களுக்கு கல்வியை விடவும் உணவு முக்கியமாகத் தேவைப்பட்டது. அப்போது என் கையில் அதிக காசு இருக்காது. பஸ்ஸுக்கு எடுத்து வைக்கும் காசில், நடந்துபோய் மிச்சம் பிடித்து, அதில் குழந்தைகளுக்கு பிஸ்கட் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். மலைவாழ் குழந்தைகள் என்பதால் தன் சுத்தம் பற்றிய விழிப்புணர்வு அவர்களிடம் இல்லாமல் இருந்தது. எங்கள் பள்ளி, உண்டு உறைவிடப் பள்ளி என்பதால் விடுதியில் அவர்களை குளிக்க வைப்பது, நகம் வெட்டுவது என்று ஆர்வமாய் செய்ய ஆரம்பித்தேன்.
பெரும்பாலான குழந்தைகளின் ஆடைகள் நைந்து அழுக்கடைந்திருக்கும். அந்த சமயங்களில் அவர்களின் ஆடைகளை துவைத்துப் போட்டு விடுவேன். சமையல்காரர் வராத நேரங்களில் நானே சமைப்பேன். ஒருநாள் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, மாணவன் ஒருவன் தலையைச் சொறிந்து கொண்டிருந்தான். அருகில் சென்று பார்த்தால், தலையில் பேன். நீண்ட நாட்களாக வெட்டப்படாத தலைமுடி, திரிந்து தொங்கியது. என்ன செய்யலாம் என்று யோசித்தேன். எனக்கோ முடி வெட்டத் தெரியாது. ஒரு நாள் முடிவெட்டும் கடைக்குப் போய் அவர்கள் வெட்டுவதைப் பார்த்துவந்து வெட்டிவிட ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் ஒரு மாணவனுக்கு முடிவெட்ட 1 மணிநேரம் ஆகும். இப்போது 10 நிமிடங்கள் போதும். என் மாணவர்களுக்குத் தேவைப்படும் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள முயற்சி செய்து, பலவற்றில் வெற்றியும் பெற்றிருக்கிறேன்.
மாணவர்களின் பெற்றோரிடம் புத்தாடைகளை வழங்கும் அன்பாசிரியர் மகாலட்சுமி | (அடுத்த படம்) மாணவிக்கு முடி வெட்டிவிடுகிறார்
பெருமிதப்பட்ட தருணம்
நாளடைவில் பள்ளிக்கு வரும் குழந்தைகள், வராத பிற நண்பர்களையும் அழைத்து வர ஆரம்பித்தார்கள். மெல்ல மாணவர்களின் எண்ணிக்கை உயர ஆரம்பித்தது. சில மாதங்களுக்குப் பிறகு, பள்ளியில் மாணவர்களின் வருகை 40 ஆக உயர்ந்தது. பாட்டு, நடனம், சுத்தம், ஒழுக்கம் என ஒவ்வொன்றையும் மாணவர்கள் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள். அப்போதைய பள்ளி நிர்வாகத்தின் தலையீடு காரணமாக, எனக்கு வேறு ஊருக்கு மாற்றல் வந்தது. ஆனால் ஊர்மக்கள் ஒன்றுசேர்ந்து மறியல் செய்து, என்னை இங்கேயே இருக்க வைத்தார்கள். ஓர் ஆசிரியையாக நான் நெகிழ்ந்து, பெருமிதப்பட்ட தருணம் அது.
மாணவர்கள் வருங்காலத்தில் என்னவாக ஆசைப்படுகிறார்களோ, அதைச் சொல்லித்தான் அவர்களைக் கூப்பிடுவோம். உதாரணத்துக்கு டாக்டர், டீச்சர். அத்தோடு அந்த துறை சார்ந்த அடிப்படை விஷயங்களையும் அவர்கள் கற்றுக்கொண்டு செய்வார்கள். மருத்துவராக ஆசைப்படுபவர்கள், கிராம நலத்துறை செவிலியரிடம் இருந்து அடிப்படை மருந்துகள் குறித்துக் கற்றுக்கொள்வார்கள். எனக்கு காய்ச்சல் வந்தால்கூட என் மாணவன் எனக்கு மருந்து சொல்வான். எம்.எஸ்.டபிள்யூ. (சமூக சேவை குறித்த படிப்பு) மாணவர்கள் கூட இங்கே இருக்கிறார்கள். அவர்கள் தெருவில் புகைபிடிக்கும் மது அருந்தும் ஆண்களிடம் போய், 'தயவுசெய்து இப்படிச் செய்யாதீர்கள்' என்று கூறுவார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டு பெரும்பாலான பெற்றோர் குடிப்பதையே விட்டுவிட்டனர்.
ஒரு முறை மாணவர்களோடு ஏலகிரிக்கு சுற்றுலா சென்றிருந்தோம். அங்கே சில இளைஞர்கள் நடுரோட்டில் காரை நிறுத்தி மது அருந்தியவாறே, புகைபிடித்துக் கொண்டிருந்தார்கள். எம்.எஸ்.டபிள்யூ. மாணவர்கள் அங்கே சென்று கையெடுத்துக் கும்பிட்டு, 'இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள் அண்ணா!' என்று கூறினர். கலங்கி நின்ற இளைஞர்கள், எல்லாவற்றையும் எறிந்துவிட்டு 'இதுதான் கடைசி முறை' என்று சொல்லிச் சென்றனர். வார்த்தைகளால் வடிக்கமுடியாத தருணம் அது.
கிடைக்கும் உதவிகள்
என்னோடு கூடப்படித்தவர்கள், தெரிந்தவர்கள், உறவினர்கள், வசதியானவர்கள் என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் என் குழந்தைகளுக்கு உதவி கேட்பேன். 10 ரூபாய் என்றால் கூட, ஒரு குழந்தைக்கு இரண்டு ரிப்பன்கள் வாங்க உதவுமே? ஃபேஸ்புக் மூலமாக மட்டும் இதுவரை 13 ஆயிரம் பணம் கிடைத்திருக்கிறது. நேரில் பார்க்காமலே நிறைய பேர் உதவி இருக்கின்றனர். க்ரியா ராமகிருஷ்ணன் ஐயா, தோழி மணிமொழி, ஹேமா அம்பலவாணன் என்று உதவுபவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம். மணிமொழியின் உதவியால், விடுதிக்கு கிரைண்டர், மிக்ஸி வாங்கினேன். மாணவர்கள் அனைவருக்கும் கடந்த இரண்டு தீபாவளிக்கும் புத்தாடைகள் கிடைத்தது.
சேவை மனப்பான்மை இருந்தால்தான் இவை எல்லாவற்றையும் செய்யமுடியும் என்றில்லை. வேலையில் அர்ப்பணிப்பு இருந்தால் மட்டும்போதும். எனக்குள் இன்னும் நிறைய ஆசைகள் இருக்கிறது. குழந்தைகளை ஷவரில் குளிக்க வைக்க வேண்டும். வாஷிங் மெஷின் வாங்கி குழந்தைகள் ஆடைகளைத் துவைக்க வேண்டும். எனக்கு என்னவெல்லாம் கிடைக்கவில்லையோ, அதெல்லாம் என் மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டும். என் முதலாளி அவர்கள். அவர்கள்தான் எனக்கு சம்பளம் கொடுக்கிறார்கள்.
என்னுடைய இப்போதைய குறிக்கோள் ஒன்றுதான். எங்களுடைய தொடக்கப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக உயர்த்த வேண்டும். என் குழந்தைகள் ஐந்தாம் வகுப்பை முடித்து, நிறைய லட்சியங்களுடன் வெளியே செல்கிறார்கள். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக, பள்ளிகளில் சீட் கிடைக்காமல், கல்வித்தரம் இல்லாமல் மாணவர்கள் கற்றலை நிறுத்திவிடுகிறார்கள். எங்கள் மாணவன் ஒருவன் துறுதுறுவென இருப்பான். எந்த பொருளையும் எளிதில் சேர்த்து பிரித்து விடுவான். அவனை சயின்டிஸ்ட் என்றுதான் கூப்பிடுவோம். இன்று அவன் இடைநிற்றல் மாணவன்; பள்ளிக்கு போக முடியாமல் இருக்கிறான். இந்த நிலை மாறவேண்டாமா?''
க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in
முந்தைய அத்தியாயம்: >அன்பாசிரியர் 17 - ஆனந்த்: உளவியல் ஊக்கம் தரும் ஆசான்!
முக்கிய செய்திகள்
மற்றவை
2 days ago
மற்றவை
2 days ago
மற்றவை
4 days ago
மற்றவை
6 days ago
மற்றவை
17 days ago
மற்றவை
22 days ago
மற்றவை
29 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago