இன்று உங்கள் முன்னால் நான் தலைநிமிர்ந்து நிற்பதற்குக் காரணம் ஆசிரியர்கள்! - நெப்போலியன்.
'பிளாஸ்டிக் மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு'க்கான மத்திய அரசு விருது, தன் பள்ளிக் கழிப்பறைக்காக பிளாஸ்டிக்கில் மேல்கூரை அமைத்தது, மாணவர்களைக் கொண்டே ஏராளமான புத்தகங்களை வடிவமைத்தது உள்ளிட்ட சாதனைகளை ஆற்றியவர், தன்சுத்தம் குறித்து தொடர்ந்து பேசும் கருத்தாளர், அன்பாசிரியர் சிலம்பரசி. அன்பாசிரியரின் பயணத்தை, இனி அவர் வழியாகவே தொடரலாமா?
"பள்ளிக்காலங்களில் என் திறனை வளர்த்தது ஆசிரியர்கள்தான். என்னுடைய ரோல் மாடலாக என் தலைமையாசிரியர் இருந்தார். முதல் ஆளாய் காலை 8 மணிக்கு, அவர் பள்ளிக்கு வந்துவிடுவார். நட்சத்திர மேரி என்னும் ஆசிரியரைப் பார்த்து, உடுத்தும் உடை கூட ஆசிரியர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்துகொண்டேன்.
என்னுடைய மதிப்பெண்ணுக்கு பல் மருத்துவம் படிக்க, சீட் கிடைத்தது. ஆனால் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தேன். அப்போது அப்பா படித்த பள்ளியிலேயே பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. பெருமையால் என் அப்பா கண்களில் கண்ணீரோடும், பெருமையோடும் நெகிழ்ந்த தருணம் அது. அன்று உண்மையிலேயே ஆசிரியப்பணியைத் தேர்ந்தெடுத்ததற்காக ஆனந்தப்பட்டேன். 2008-ல் வேலை கிடைத்தது. அம்மாபேட்டையில் ஒரு வருடம் வேலை பார்த்த பின்னர், 2009-ல் தஞ்சாவூர், பாபநாசத்தில் சோழங்கநத்தத்தில் மாற்றலானது.
எனக்கு எப்போதுமே ஒரு பழக்கம் உண்டு. குழந்தைகள் கல்வி, ஒழுக்கத்தோடு தன் சுத்தத்தையும் பேணுகிறார்களா என்று கவனிப்பேன். தினமும் பல் துலக்குவது, குளிப்பது, நகம் வெட்டுவது, சுத்தமான ஆடைகளை உடுத்துவது உள்ளிட்டவைகளை மாணவர்கள் தொடர்ந்து செய்கிறார்களா என்று கவனிக்க வகுப்புத் தலைவர்கள் இருக்கிறார்கள்.
பள்ளியைச் சுற்றிலும் தென்னை, வாழை மரங்களை வைத்திருக்கிறோம். அவை அனைத்துமே ஊர் மக்கள் கொடுத்தது. அதனால் தேங்காய், இளநீர், வாழைப்பழம் உள்ளிட்ட அனைத்தையும் குழந்தைகளிடமே கொடுத்துவிடுவோம். ஊர்க்காரர்களின் ஆதரவோடு, பள்ளியின் சுவர்களைச் சுற்றி ஆக்கிரமித்திருந்த குடிகாரர்களை ஒழித்தோம். 2013- ல் டிசைன் ஃபார் சேஞ்ச் நிகழ்ச்சிக்காக, செயல்பாட்டு வழிக் கற்றலுக்காக செயல் திட்டம் ஒன்றை செய்ய வேண்டியிருந்தது.
என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, பள்ளிக்கு முன்னால் இருக்கும் வாய்க்கால்களில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்த சத்தம் கேட்டது. ஓடிப் போய்ப் பார்த்தால், தண்ணீர் முழுக்க பிளாஸ்டிக், பாலித்தீன் பைகள். சட்டென மனதில் ஒரு யோசனை. ஊரில் கேட்பாரற்றுக் கிடக்கும் குளிர்பான பாட்டில்களைப் பொறுக்கினோம். அதன் மேல் பாகத்தை மட்டும் வெட்டியெடுத்து, குச்சியில் வைத்துக் கட்டி, அதை ஒட்டடைக்குச்சி ஆக்கினோம். பாட்டிலின்
அடிப்பாகத்தை வைத்து தோரணங்கள் செய்தோம்; பேனா ஸ்டேண்ட் ஆக்கினோம்; ஆக்டோபஸ் பொம்மை செய்தோம். ஒரு பாட்டிலில் தானியத்தை சேமித்து, மற்றொரு பாட்டிலின் அடிப்பாகத்தைத் துளையிட்டு, அதன் வழியாக குருவிகளுக்கு தானியம் அளிக்க ஆரம்பித்தோம். சத்துணவில் வீணாகும் நொய் அரிசி, குப்பைக்கு போகாமல் குருவிகளுக்கு இரையாக ஆரம்பித்தது.
பிளாஸ்டிக் கைவினைப் பொருட்கள்
பயன்படாமல் இருந்த பாட்டிலின் மேல் பாகத்தையும் மூடியையும் வைத்து, ஐந்து இதழ்கள் கொண்ட பூவாக மாற்றினோம். சிவப்பு, ஊதா, வெள்ளை, பச்சை என அவற்றுக்கு வண்ணம் பூசினோம். வீட்டில், தெருவில், சாலைகளில் கிடக்கும் எல்லாவிதமான பிளாஸ்டிக் பொருட்களும் திரட்டப்பட்டன.
கிடைத்த பிஸ்கட் பேப்பர்கள், சாக்லேட் கவர்கள், தின்பண்டங்களின் பாலித்தீன் பைகள் ஆகியவற்றை மாலையாக கட்டினோம். அவற்றின் உட்புறமாக இருக்கும் சில்வர் சாயில் பேப்பர்களை நீளமாக ஒட்டி வெட்டி, நடனத்தின் போது பயன்படும் கோல்களாகச் செய்தோம்.
பிளாஸ்டிக் பாத்திரங்கள் தொட்டிச்செடிகளாக மாற்றப்பட்டன. பயன்படாத சிடிக்கள், புத்தக ஸ்டேண்ட்களாகவும், விளக்கு ஸ்டேண்ட்களாகவும் உருமாறின. இதைத் தவிர பயன்படாத காகிதங்களை ஊறவைத்து, வெயிலில் காயவைத்து ஒன்றின்மேல் ஒன்றாக ஒட்டி, ட்ரேக்களாக தயார் செய்தோம்.
'பிளாஸ்டிக் மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு' என்ற தலைப்பில், 2014-ல் குஜராத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில், தலைசிறந்த 100 பள்ளிகளில் ஒன்றாகத் தேர்வானது எங்கள் தொடக்கப்பள்ளி. அந்த விழாவுக்கு, குழந்தைகளை அழைத்துச் சென்று விருதுடன் திரும்பி வந்த பிறகு, ஊர் மக்களுக்கு எங்கள் பள்ளி மீதான நம்பிக்கை அதிகமானது.
பிளாஸ்டிக் மேல்கூரை
பள்ளி கழிப்பறைக்கு அருகே மூங்கில் புதர் இருந்தது. கழிப்பறைகளுக்கு மேல் கூரை இல்லாததால், மூங்கில் இலைகள் கொட்டி, கழிப்பறை அடைத்துக் கொண்டது. கூரை அமைக்க போதிய நிதிவசதி இல்லாத நிலையில் என்ன செய்யலாம் என்று யோசித்தோம். பிளாஸ்டிக் பாட்டில்களின் நடுப்பாகத்தை வைத்து கூரை செய்யும் யோசனை வந்தது. கூரை முழுவதற்குமான பாட்டில்களுக்கு எங்கே போவது?
கல்யாண மண்டபங்களில் உபயோகித்துத் தூக்கி எறியும் 300 மி.லி. பாட்டில்களுக்கு சொல்லி வைத்தோம். சுமார் 3000 பாட்டில்கள் கிடைத்தன. ஏற்கனவே 6 அடி உயரத்துக்கு இருந்த சுவற்றை பாட்டில்கள் கொண்டு மேலும் 2 அடி உயர்த்தி, 12 அடிக்கு கூரையும் அமைத்தோம். மாணவர்களின் பெற்றோர்கள் அதற்கு தேவையான வேலைகளைச் செய்தனர். பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு கூரை அமைத்ததற்காக 2015-ம் ஆண்டில், 'இந்தியாவின் தலைசிறந்த 100 பள்ளிகளில் ஒன்று' என்ற விருது கிடைத்தது.
தன் சுத்தம்
வேலைக்கு சேர்ந்த ஆரம்பத்தில், மாணவர்கள் எப்படியாவது எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றுதான் நினைப்பேன். ஆனால் இப்போது அதையும் தாண்டி, அவர்கள் நல்ல மனிதர்களாக வளரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இப்போது கல்வியோடு அவர்களுக்கு ஒழுக்கத்தையும் சேர்த்தே போதிக்கிறேன்.
தன் சுத்தத்தைப் பேணும் மாணவர்களை வாரத்தின் ஐந்து நாட்கள் கவனித்து, ஆறாம் நாளில் வெள்ளி அட்டை ஒன்றை வழங்குகிறோம். ஐந்து வெள்ளி அட்டைகள் வாங்குபவருக்கு, ஒரு தங்க அட்டை பரிசு. மூன்று தங்க அட்டைகள் வாங்குபவருக்கு, எங்களால் முடிந்த சின்னப் பரிசுகள் உண்டு. தினமும் காலையில் எங்கள் மாணவர்கள், ''யாரையும் துன்புறுத்த மாட்டேன்; அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட மாட்டேன்; உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவேன்'' என்று உறுதிமொழி எடுப்பது வழக்கம்.
2014-ல், முதல் வகுப்பு படிக்கும் மாணவி, தன் சுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக, மாவட்டத்தில் மூன்றாம் பரிசு வென்றார். 2015-ல் இருந்து மாவட்ட அளவில், தன் சுத்தம் குறித்துப் பேசும் கருத்தாளராகப் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறேன்.
நேர்மைக்கடை
எங்களிடத்தில் நேர்மைக்கடை உண்டு. அதில் பென்சில், அழிப்பான், பென்சில்சீவி உள்ளிட்ட பொருட்கள் இருக்கும். மாணவர்கள் என்ன பொருள் வேண்டுமோ அதை எடுத்துக் கொண்டு, எவ்வளவு காசிருக்கிறதோ அதைப் போட்டுவிட்டு அங்கிருக்கும் நோட்டில் அதை எழுதிவைத்துவிடுவர். குப்பைகளைப் போட, பேப்பரைக் கொண்டு நாங்களே உருவாக்கிய வேஸ்ட் ட்ரே வைக்கப்பட்டிருக்கும்.
எழுதிவிட்டுத் தூக்கிப் போடும் பேனா மூடியை, சார்ட் பேப்பருக்குப் பயன்படுத்தும் கிளிப்களாக பயன்படுத்துகிறோம். மாலை வேளையில் பள்ளியை சுத்தப்படுத்தும் வேலைகளும் நடக்கும். ட்ரெயின் என்று சொன்னால் போதும். மாணவர்கள் எல்லாம் சேர்ந்து ரயில் போல அணிவகுத்துச் சென்று குப்பைகளை, காகிதம் தனியாக, பிளாஸ்டிக் தனியாக பிரித்து வருவார்கள்.
மாணவர்களே தயாரித்த புத்தகங்கள்
அப்போது, எங்கள் பள்ளி நூலகத்தில் 150 புத்தகங்கள் மட்டுமே இருந்தன. அவற்றில் பெரும்பாலானவை பழையதாகவும், மழையால் நைந்தும் கிடந்தன. எல்லாவற்றுக்கும் மற்றவர்களை நாடாமல், செய்ய முடியும் விஷயங்களை நாமே செய்யலாமே என்று தோன்றியது. யோசித்தோம். மாணவர்கள், ஒரு ஏ4 பேப்பரை நான்காக மடித்து, வெட்டினார்கள்.
ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு கதை எழுத முடிவு செய்தோம். உதாரணமாக, 'அ' என்றால் அம்மா என்று எழுதி, படம் வரைந்து, வண்ணம் பூசி, அதற்கு கதை எழுதினர். சுமார் 12 - 15 பக்கங்களை இணைத்து ஒரு புத்தகமாக்கினர். ஆத்திச்சூடி, திருக்குறள், விடுகதை, பொன்மொழிகள், நீதிக்கதைகள் ஆகியவற்றோடு குருவிகள், விலங்குகள், பறவைகள் பற்றிய புத்தகங்களும் உருவாக்கப்பட்டன. இவை தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், ஆங்கிலத்திலும் தயாரிக்கப்பட்டது. விழாப் பத்திரிகைகளின் அட்டைகளைக் கொண்டு புத்தகத்துக்கான அட்டைகளை தயாரிக்கப்பட்டன. இதில் சுமார் 250 புத்தகங்கள் உருவாக்கப்பட்டன. ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் உருவாக்கிய புத்தகங்கள் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு பயன்பட்டன.
பள்ளி ஆய்வுக்காக வந்திருந்த ஆய்வாளர், எங்களின் இந்த முயற்சியை வெகுவாகப் பாராட்டினார். எங்களை ஊக்கப்படுத்தும் விதமாக சுமார் 300 புத்தகங்களை இலவசமாக வழங்கினார். ஆரம்பத்தில் இருந்த 150, நாங்கள் தயாரித்த 250, பரிசாகக் கிடைத்த 300 புத்தகங்களோடு இப்போது எங்களிடம் சுமார் 700 புத்தகங்கள் உள்ளன.
மாணவர்கள், தங்கள் பெற்றோரிடமும், ஊர் மக்களிடமும் கழிப்பறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆசைப்பட்டனர். தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு கூரை, சுவர் அமைத்தது பற்றில் கையாலேயே பிரசுரங்கள் எழுதினர். அவற்றை எடுத்துக் கொண்டு ஊர்த்தலைவர் உதவியுடன், மக்களைச் சந்தித்தனர். இது மக்களிடையே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
எதிர்காலத் திட்டங்கள்
எங்கள் பள்ளியில் தேவையான கட்டமைப்பு வசதி இருக்கிறது. ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அமரும் பெஞ்ச்களை வாங்கிப் போட்டிருக்கிறோம். இப்போது பள்ளிக்கு ஒரு கணினியும், புரொஜெக்டரும் தேவைப்படுகிறது. அவை இரண்டும் இருந்தால், குறைந்தது ஒரு வகுப்பை, ஸ்மார்ட் வகுப்பறையாக மாற்ற முடியும். மாணவர்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியும்.
இந்த ஊரில் இருக்கும் 200 குடும்பங்களில் முக்கால்வாசிப் பேர், தினசரி கூலி வேலைக்கு போகிறவர்கள். வேலைக்குப் போனால்தான் அவர்களுக்கு சாப்பாடு. அவர்களிடம் பெரிய உதவியை எதிர்பார்க்க முடியாது. கேட்டதும் எங்களுக்கு உதவ பெரிய கைகள் எதுவும் இல்லை. இனிவரும் காலத்தில் யாராவது எங்களின் கணினி வழிக்கற்றலுக்கான தொடக்கத்தை விதைத்துச் செல்வார்களா என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்!"
க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in
முந்தைய அத்தியாயம்: >அன்பாசிரியர் 15 - செந்தில்: 15 கிராமங்களின் நம்பிக்கை ஆசான்!
முக்கிய செய்திகள்
மற்றவை
5 hours ago
மற்றவை
11 days ago
மற்றவை
16 days ago
மற்றவை
23 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago