சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஆனந்த் அரவிந்தாக்ஷனுக்கு முதல் பரிசு கொடுத்தது பற்றிய சர்ச்சையைத் தொடர்ந்து, தற்போது ஆனந்த தனது பேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து பேசியுள்ளார். தான் ஏன் வெற்றி பெற்றோம் என வருத்தப்படுவதாக அதில் தெரிவித்துள்ளார்.
ஆனந்த் அரவிந்தாக்ஷன் பேஸ்புக்கில் பகிர்ந்த ஆங்கிலப் பதிவின் முழு தமிழ் வடிவம் இதோ,
"கடந்த 2 நாட்கள், என் வெற்றியை நான் கொண்டாடியிருக்க வேண்டிய அந்த இரண்டு நாட்களும் எனக்கு கெட்ட கனவு போல கடந்தன. இந்த கடினமான நேரத்தில் என்ன ஆதரித்தவர்களுக்கும், விஜய் டிவிக்கும் நன்றி. 10 மாதங்களாக போட்டியிட்டு, பாடல்கள் கற்று, வெற்றி பெற்ற பிறகு வெற்றியின் உச்சத்தைத் தொட்டுவிட்டதாக நினைத்தேன், 10 வருடங்கள் என்னுடைய நீண்ட காத்திருப்புக்குப் பிறகு கிடைத்த பெரிய மேடை அது. ஆனால் சில நல்ல உள்ளங்கள், போலியான ப்ரொஃபைல்களை உருவாக்கி, ஏற்கனவே இணையத்தில் இருக்கும் ஒரு தகவலை வைத்துக் கொண்டு அதை அவதூறாக பரப்பிவருகின்றனர்.
சூப்பர் சிங்கர் போட்டி நடந்துகொண்டிருக்கும்போதே இந்த தகவல்கள் அனைத்து தளங்களிலும், ஏன் எனது ஃபேஸ்புக் பக்கத்திலும் கூட இருந்தது. நான் எதையாவது மறைக்க வேண்டும் என நினைத்திருந்தால் அந்த தகவல்களை அழித்திருக்க முடியும், ஆனால் அதை செய்யவில்லை. ஏனென்றால் போட்டியிடுவதற்கான தகுதி எனக்கு இருந்தது. இந்த 2 நாட்களில், என்னை மிகவும் துரதிர்ஷ்டமான பாடகனாக உணர்ந்தேன். மற்றவர்களைப் போல் எனது துறையில் பெரிய கனவோ, சாதிக்க வேண்டும் என்ற எண்ணமோ எனக்கு இருந்திருக்கக் கூடாது. .
துறையில் இருந்த ஆயிரக்கணக்கான பாடகர்களில் ஒருவனாகத் தான் நானும் இவ்வளவு காலம் இருந்தேன். வாய்ப்புக்காக நான் பாடி பதிவு செய்த மாதிரி சிடிக்களை தந்து, விளம்பரங்களில் பாடி, பக்திப் பாடல்கள், ட்ராக் பாடல்கள், திரைப் பாடல்கள் என பத்து வருடங்களுக்கு மேலாக முயற்சி செய்தவன். நான் 50 பாடல்கள் பாடினால் அதில் 1 பாடல் தான் அனைவரது ஒப்புதலையும் பெற்று வெளியாகும். மற்றவை ஹீரோக்களால், இசையமைப்பாளர்களால், பாலிவுட் பாடகர்களால், சூப்பர் சிங்கர் பாடகர்களால் மீண்டும் பாடப்பட்டு வெளியாகும். எனது ஒலிப்பதிவுகள் பாடலாகாதபோது, இசை நிகழ்ச்சிகளில் கூட பாட வாய்ப்பு கிடைக்காத போது எனது துறையில் எனக்கு பயம் வர ஆரம்பித்தது.
ஒரு முழு நேர இசைக்கலைஞனாக இருந்து கொண்டு, அடுத்த 40-50 வருடங்களும், வருடத்துக்கு ஒரே ஒரு பாடல் பாடிவிட்டு, அந்த வருடம் முழுவதும் அடுத்த பாடல் வாய்ப்புக்காக காத்திருப்பவனாக நான் வாழ விரும்பவில்லை. அனைவருக்கும் தெரிந்த பிரபலமான எஸ்பிபி சார் போலவோ, சங்கர் மஹாதேவன் சார் போலவோ, கார்த்திக் சார் போலவோ நான் இல்லை. அப்படிப்பட்டவர்களில் ஒருவனாக இருந்தால் நான் ஆயிரக்கணக்கானவர்களுடன் இந்த சூப்பர்சிங்கர் போட்டியில் கலந்துகொண்டிருக்க மாட்டேன், ஒரு வருடம் இதற்காக செலவிட்டிருக்க மாட்டேன்.
என்னைப் பற்றியோ, நான் பாடிய பாடல்களைப் பற்றியோ இதுநாள் வரை இணையத்தில் இருந்த தகவல்கள் பற்றி யாருக்குமே தெரியாது. அதுதான் நான் சூப்பர் சிங்கரில் கலந்து கொள்ள முதல் காரணம். உங்களுக்கு என்னை தெரிந்திருக்க வேண்டும் என நினைத்தேன். எல்லாரும் ஒரு அடையாளத்துக்காகத் தான் ஏங்குகிறார்கள். நான் மட்டும் ஏன் அதில் விதிவிலக்காக நடத்தப்படவேண்டும்? பிரபல பாடகர் வாங்கும் பணத்தில் பத்தில் ஒரு பங்கு பணத்துக்காக நான் பாட முன்வந்தபோது கூட, ஒரு நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் என்னை பாடவைக்க விரும்பவில்லை. நான் பல நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அணுகி இலவசமாக பாடுகிறேன் என்று கூட வாய்ப்பு கேட்டிருக்கிறேன். அப்படியாவது என்னை சிலர் கவனிப்பார்கள், என் திறமைகளை எடுத்துக்காட்ட ஒரு மேடை கிடைக்காதா என்று நினைத்தேன்.
ஆனால் அதை நான் எவ்வளவு நாட்கள் செய்யமுடியும்? எனக்கு பெரிய கனவுகள் இருந்தன, ஆனால் என் சக பாடகர்களின் வெற்றிக் கதையைக் கேட்டு, என்னால் சாதிக்க முடியவில்லை என்ற தாழ்வு மனப்பான்மையோட வருத்தம் கொள்வேன். நான் மற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து அதில் சில வெற்றியும் பெற்றுள்ளேன். ஆனால் அதன் மூலமாக இசைத்துறையில் எனக்கு எந்த ஏற்றமும் வரவில்லை. அப்போதுதான் பல பாடகர்களுக்கு வாழ்வும், இசைத்துறையில் அடையாளமும் தந்த பிரபலமான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கெடுக்க முடிவு செய்தேன்.
பாடகராக முயற்சித்து முடியாமல் போன, அடையாளம் கிடைக்காத என் நண்பர்கள் பலர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு வெற்றிகரமான பாடகர்களாக உருவாகியிருக்கிறார்கள். எனக்கு இது உந்துதல் அளித்தது. மேடையில், ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன்னால் தைரியமாகப் பாடும் அந்த திறமையைப் பெற வேண்டும் என நினைத்தேன்.
இன்று, போட்டியில் பங்குபெறுவதற்கான தகுதிகளைக் கடந்து, 10,000 போட்டியாளர்களுடன் போட்டியிட்டு, எனது நண்பர்கள், சக பாடகர்கள், என்னை விட இளையவர்கள் என பலரால் மதிப்பிடப்பட்டு, அதில் எந்த சங்கடமும் கொள்ளாமல், அதையும் தாண்டி வந்து, ஒவ்வொரு சுற்றிலும் வெளியேற்றப்பட்டும் அபாயத்தைத் தாண்டி, சானலிடமிருந்தோ, நடுவரகளிடமிருந்தோ எந்த கரிசனமும் பெறாமல், எனது முழுத் திறமையைக் காண்பித்து வெற்றி பெற்ற பிறகும் கூட, தேவையே இல்லாத பல அவமானங்களை சந்தித்து வருகிறேன்.
சிறந்த பாடகராக உருவாக நினைக்கும் எவருக்கும் நல்ல தளத்தை கொடுத்து, அவர்களுக்கு முறையான குரல் பயிற்சியை, ஒத்திகையை, பெரிய இசைக்கலைஞர்களுடன் இணைந்து பாடும் அனுபவத்தை, சிறந்த நடுவரகளால் திருத்தப்படும் வாய்ப்பை சூப்பர் சிங்கர் தருகிறது. ஆரோக்கியமான, நேர்மையான போட்டியாக இருக்க வேண்டும் என்பதால் தான் அனைவருக்கும் சரிசமமான பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் அனுபவமில்லாத பாடகர்களுடன் போட்டியிட்டேன் என்ற கேள்வி எங்கு வருகிறது? மேடையில் பாடுவதற்கும், ஒலிப்பதிவில் பாடுவதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன.
மேடையில் பாடும்போது தவறு செய்தால் இரண்டாவது வாய்ப்பு கிடையாது. என்னைப்போன்ற போட்டியாளர்களுக்கு இது வாழ்வா சாவா என்பது போன்ற சூழல் தான் ஒவ்வொரு முறையும்.அதிலும், என்னைப் போல பாட்டுப் பாடுவதையே தொழிலாக வைத்திருக்கும் ஒருவருக்கு அடுத்து என்ன நடக்கும் எனத் தெரியாமல் இருப்பது பாதுகாப்பின்மையே. எனது சக போட்டியாளருக்காவது ஐடி வேலை போல ஒன்று இருந்து மாதாமாதம் சம்பளம் வரும். அவர் ஒரு அனுபவத்துக்காக மட்டுமே பாட வந்திருப்பார். இந்த வெற்றிக்காக ஆத்மார்த்தமாக உழைத்திருக்கிறேன், மற்ற போட்டியாளர்களுக்கு சரிசமமாக, ஏன் சிலரை விட அதிகமாகவே போராட்டத்தைக் கடந்துள்ளேன்.
இப்போது, எனது வெற்றி பலரை பாதித்து, போட்டி விதிகள் மாற்றப்பட்ட 5 வருடங்களுக்குப் பிறகு அதைப் பற்றி பேசுவதை பார்க்கும்போது கடினமாக இருக்கிறது. இதில் பலர் இந்த நிகழ்ச்சியை ஒழுங்காக பார்க்காதவர்கள், தாங்கள் நினைத்ததைப் பகிர்ந்துவிட்டு அதில் மகிழ்ச்சிகொண்டு தங்கள் ப்ரொஃபைல்களை நீக்கியவர்கள். இவர்களில் பலருக்கு வாய்ப்பு கிடைக்காத பின்னணிப் பாடகர்களின் போராட்டங்கள் பற்றி எதுவும் தெரிந்திருக்காது. நான் இந்த போட்டிக்கு வந்தது பரிசுத்தொகைக்கோ, பரிசாக வரும் வீட்டுக்காகவோ அல்ல.
நான் வந்தது என்னை ஓரளவுக்காவது முன்னேற்றிக் கொள்ள. குறைந்தது கடைசி 20 அல்லது 10 பாடகர்களுக்குள் வர மாட்டோமா, அதன் மூலம் எனக்கு இசை நிகழ்ச்சி வாய்ப்புகளும், பின்னணி பாடும் வாய்ப்புகளு வந்து என் வாழ்வை நடத்த மாட்டோமா என்ற எண்ணத்தால். நான் எந்த விதியையும் மீறவில்லை. நான் பங்கேற்பதை தடுக்கும் வகையில் எந்த விதியும் இருக்கவும் இல்லை. சேனல் மாற்றிய ஒரே விதி, பாடுபவர்கள் 14 வயதுக்கு மேலிருக்க வேண்டும் என்பது மட்டுமே.
வீடும், மற்ற பரிசுகளுமே வெற்றியாளர்களுக்கு கிடைக்கும் என ஒவ்வொரு சுற்றிலும் அறிவிக்கப்பட்டது. முந்தைய சீஸன்களைப் போல பின்னணிப் பாடும் வாய்ப்பு தரப்படும் என்பது அறிவிக்கப்படவில்லை. பின்னணிப் பாடகனாக முயற்சிப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் நிகழ்ச்சி இது என சிலர் யூகித்தால் அது எங்களது தவறா? பிரம்மாண்ட குரல் தேடல் என்றால் சினிமாவில் பாடாத குரல் என்று அர்த்தமா? அப்படிப்பட்ட யூகங்களுக்கு என்னையோ, விஜய் டிவியையோ யாரும் பொறுப்பாளர்களாக ஆக்க முடியாது. தயவு செய்து எந்த யூகமும் வேண்டாம். உண்மையையும், போட்டி விதிகளையும் கண்டறிந்து எழுத உங்களுக்கு எந்த செலவும் ஆகிடாது. ஆனால் உங்கள் யூகங்களால் எங்களைப் போன்ற பாடகர்களுக்கு களங்கமே ஏற்படும், வாழ்வை பாதிக்கும்.
இதையெல்லாம் தாண்டி, என்னுடன் போட்டியிட்ட சக போட்டியாளர்கள் அனைவருக்கும் நான் பின்னணி பாடகன் என்பது தெரியும். அவர்கள் அதை பிரச்சினையாகப் பார்க்கவில்லை. நான், எனது சக போட்டியாளர்கள் மட்டுமல்ல, இதற்கு முந்தைய சூபப்ர் சிங்கர் சீஸனில் போட்டியிட்ட்வர்கள் பலரும் மற்ற ரியாலிட்டி இசை நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்கள், பின்னணிப் பாடியவர்கள். பின்னணிப் பாடகன் என்பது பொதுவான சொல். ஒரே ஒரு பாடல் பாடியவர் கூட பின்னணிப் பாடகர் தான். எஸ்.பி.பி அவர்களைப் போல 50,000 பாடல்களுக்கு மேல் பாடியவரும் பின்னணிப் பாடகர் தான். எனது சொந்த தொழில்முறை வாழ்க்கைக்காக பல பாடு பட்டும், வேதனையாக, மன அழுத்தமாக, எதிர்மறையாக உணர்கிறேன். 10 வருட போராட்டத்துக்குப் பிறகு, இந்த நிகழ்ச்சியின் மூலமாக எனக்கு ஒரு நம்பிக்கை கீற்று கிடைத்தது, அதை அடைய நான் கடுமையாக உழைத்திருந்தேன். அதை பெற்றுவிட்டேன் என்றே நினைத்தேன்.
ஆனால் இந்த சர்ச்சை, 10 வருடங்களுக்கு முன்னால் நான் இருந்த நிலைக்கு என்னை தள்ளிவிட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏன் வெற்றி பெற்றேன் என இப்போது வருந்துகிறேன். ஸ்டூடியோக்களுக்கு வெளியே நின்று, இசையமைப்பாளர்களின் ஒரு பார்வைக்காக காத்திருந்ததே சரியோ என நினைக்கிறேன். நான் நினைப்பது சரியா என எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று தெரியும், அப்போது என் வாழ்வில் அமைதி இருந்தது.
ஆம், அப்போது என்னை இவ்வளவு பேர் நேசிக்கவில்லை, ஆனால் என்னை இவ்வளவு பேர் வெறுக்கவும் இல்லை".
முக்கிய செய்திகள்
மற்றவை
2 days ago
மற்றவை
3 days ago
மற்றவை
14 days ago
மற்றவை
19 days ago
மற்றவை
26 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago