ஓசிடி என்னும் மனநோய்: ஒரு பார்வை!

By க.சே.ரமணி பிரபா தேவி

ஓசிடி (Obsessive Compulsion Disorder)யைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஒரு செயலைத் திரும்பத் திரும்பச் செய்வது மட்டுமல்ல, ஒரே சிந்தனையில் ஆழ்ந்து போவதும் ஓசிடிதான்.

நகர வாழ்க்கையில் பொழுதைக் கழிக்கும் பெரும்பாலானோருக்கு, ஓசிடியைப் பற்றித் தெரியும். மனதை ஆட்டிப்படைக்கும் ஒரு வகையான நரம்பியல் குறைபாடே ஓசிடி. மூளையில் இருக்கும் செரட்டோனின் என்னும் வேதிப்பொருள் பற்றாக்குறையால் இந்தக் குறைபாடு ஏற்படுகிறது. செரட்டோனின் குறையும்போது சிந்தனையைக் கட்டுப்படுத்தும் சக்தி வெகுவாகக் குறைகிறது. சிந்தனை நரம்பியல் மண்டலத்தோடு தொடர்புடையது என்பதால், இது சிந்தனையை வெகுவாகப் பாதிக்கிறது. இதை ஒரு வகையான மனக்குறைபாடு எனலாம்.

மனதை ஊடுருவித் துளைக்கும் தேவையில்லாத எதிர்மறை எண்ணங்களால் இது ஏற்படுகிறது. மிகைப்படுத்தப்பட்ட எண்ணங்களால் உண்டாகும் ஓசிடி, பயம், கோபம், எரிச்சல், பதட்டம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்துகிறது.

இந்த நோய் குறித்தும், அதன் அறிகுறிகள் மற்றும் வகைகள் குறித்தும் நம்மிடம் பேசினார் மனநல மருத்துவர் மோகன்.

"அலுவலக இலக்கு, மேலதிகாரியின் கோபம், சத்தில்லாத உணவு, வேலை, குடும்பப் பராமரிப்பு, சம்பள பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகளால், சுமார் 65 சதவீதப் பேருக்கு, 25 வயதுக்கு முன்னாலேயே இந்த பிரச்சனை எழுகிறது. பொதுவான இயல்பான மக்களுக்கு, கோபம் பதற்றம், எரிச்சல் ஆகியவை சில நிமிடங்களுக்கே இருக்கும். ஆனால், ஓசிடி பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஒரு குறிப்பிட்ட பண்பு பல மணி நேரங்களுக்கு தொடர்ந்து நீடிக்கும். ஓசிடியின் தீவிரத்தைப் பொருத்து, மருந்துகள் கொடுக்கப்படும், கவுன்சலிங் மூலமும் சிகிச்சை அளிக்கப்படும். சில சமயங்களில் இரண்டு முறையும் பயன்படுத்தப்படும்.

ஓசிடி வருவதைப் பொருத்து, அவற்றில் பலவகைகள் உள்ளன.

செயல்கள் குறித்த பயம்

இந்த வகை ஓசிடியில், சந்தேகங்களும், கவலைகளும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். வீட்டுக் கதவைப் பூட்டினோமா, அடுப்பை அணைத்தோமா என்று யோசித்துக் கொண்டே இருப்பார்கள். பணம் சரியாக இருக்கிறதா என்று தொடர்ந்து எண்ணிக்கொண்டே இருப்பார்கள்.

சுத்தத்தைக் குறித்த பயம்

இவர்களுக்கு தூசு, புகை போன்ற மாசுக்களால் அழுக்காகிவிடும் என்ற பயம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். பொருட்களை வெறும் கையால் தொட பயப்படுவார்கள். சோப்புப் போட்டு கைகளைக் கழுவிக் கொண்டே இருப்பார்கள்.

தாக்குதல் குறித்த பயம்

இந்த வகை ஓசிடியில், குறிப்பிட்ட சில குடும்ப, அலுவலக நபர்கள் அல்லது நண்பர்கள் நம்மைத் தாக்கிவிடுவார்களோ என்ற அச்சம் இருக்கும். அடிக்கடி நாம் பத்திரமாக இருக்கிறோமா, நம் சொந்தங்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.

ஒழுங்கு குறித்த பயம்

இவர்கள், எல்லாவற்றிலுமே அதிகப்படியான ஒழுங்கை எதிர்பார்ப்பார்கள். வேலையிலும், வீட்டிலும் அவர்களின் எதிர்பார்ப்பால் தேவையில்லாத பிரச்சனைகள் உருவாகும்..

பதுக்கல் குறித்த பயம்

ஏதாவது ஒரு பொருள் பழையதாகி, பயன்படுத்த முடியாமல் போனாலும் கூட, அதைத் தூக்கிப் போட அவர்களுக்கு மனது வராது. அதை அப்புறப்படுத்த முயற்சிக்கும், மற்றவர்கள் மீதும் தேவையில்லாமல் கோபப்படுவார்கள்.

செக்ஸ் குறித்த பயம்

அடிக்கடி தனக்கு தெரிந்த நபர்களின் முகம், பாலியல் உணர்வுகளோடு மனதில் வந்துபோகும். அது தவறு என்று தெரிந்தாலும், எண்ணங்களை அவர்களால் கட்டுப்படுத்தவே முடியாது. குற்ற உணர்ச்சியால் இந்த வகையினர் அதிகம் பாதிக்கப்படுவார்கள்" என்று கூறுகிறார்.

ஓசிடிக்கான சிகிச்சை குறித்து சித்த மருத்துவர், ஜெரோம் சேவியரிடம் பேசினோம்.

"சித்த மருத்துவம் மன நோய்களை பல விதமாக வகைப்படுத்துகிறது. இதில் ஓசிடி என்பது உன்மத்தம் (உடலில் செயல்படும் இயக்கங்களான வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்புகளால் மனநிலையில் ஏற்படும் பாதிப்பு) என்ற வகைப்பாட்டில் வருகிறது. இதற்கு கவுன்சலிங் அவசியம் என்றாலும், அத்தோடு வேறு சிலவற்றையும் பார்க்க வேண்டும்,

கவுன்சலிங்குக்கு முன், உடலில் சீர்கெட்டிருக்கும் வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகியவற்றை சரியாக்க சிகிச்சை அளிக்க வேண்டும். நோயாளியின் நிலையை முதலில் கண்டறிந்து, அதற்கான மருத்துவம் செய்த பின்னர் கவுன்சிலிங் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஓசிடிக்கான சிகிச்சை முறை

1. வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சமப்படுத்த சிகிச்சை அளிக்கவேண்டும்.

2. உடலில் உள்ள தாதுக்களின் வலிமை குறைந்தாலும் கோபம், எரிச்சல், பயம் உண்டாகி, மனநிலை பலவீனமடையும். இதை வலிமைப்படுத்த வேண்டும்.

3. மனநிலையைச் சரிசெய்ய வேண்டும். இதற்கு மூச்சுப் பயிற்சி, சில யோக ஆசனங்கள், தியானம் ஆகியவை அடங்கிய எட்டு வகையான பயிற்சிகள் உள்ளன. நோயாளியின் தேவைக்கும், மனநிலைக்கும் ஏற்ற வகையில் தேவைப்படும் பயிற்சியை கற்றுக் கொடுக்க வேண்டும்.

4. கவுன்சலிங் கொடுக்க வேண்டும்.

நோய்க்கு, வெறும் கவுன்சலிங் மட்டுமே முறையான தீர்வாகாது. மேலே சொன்ன இயக்கங்களான வாதம், பித்தம், கபம் மற்றும் தாதுக்களை சமப்படுத்தி, மனப்பயிற்சி கொடுத்த பிறகே, கவுன்சலிங் கொடுக்கப்பட வேண்டும். இயந்திரமயமாகிவிட்ட இந்த சூழலில், கொஞ்சம் குடும்பத்தோடும், இயற்கையோடும் இயைந்து வாழ்ந்தாலே போதும், எந்த நோயையும் குணப்படுத்தி விடலாம்" என்கிறார் நம்பிக்கையுடன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE