அன்பாசிரியர் 14 - பார்வதி ஸ்ரீ: இணையத்தில் தமிழ் வளர்க்கும் ஆசிரியர்!

By க.சே.ரமணி பிரபா தேவி

ஆசிரியர் அதிகாரிகளுக்காக வேலை செய்கிறார்; நல்ல ஆசிரியர் மாணவர்களுக்காக வேலை பார்க்கிறார்; சிறந்த ஆசிரியரோ, அவர்களின் பெற்றோர்களுக்காக பணிபுரிகிறார்.

இரண்டு முறை சிகரம் தொட்ட ஆசிரியர் விருது, 2012-ல் விக்கிப்பீடியாவின் தொடர் பங்களிப்பாளர் விருது, இணையத்தில் தமிழைப் பரப்பியதற்காக, இணையத்தில் தமிழ் வளர்த்த ஆசிரியர் விருது உள்ளிட்ட புகழுக்கு சொந்தக்காரர்; தன்னம்பிக்கை பேச்சாளர்; கட்டுரையாளர்; குடும்பத்தலைவி என்று பல்வேறு தளங்களில் சுற்றிச் சுழல்கிறார் அன்பாசிரியர் பார்வதி ஸ்ரீ.

''ஆசிரியப்பணியில் சேர்ந்து 20 வருடங்கள் முடிந்துவிட்டது. ஆனால், இன்னும் அதிக வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசை கூடிக்கொண்டே செல்கிறது. இப்போது நான் வேலை பார்க்கும் சேலம் கந்தம்பட்டி பள்ளி, அப்போது திறந்தவெளியில் இயங்கிக் கொண்டிருந்தது.

ஐந்து வகுப்புகள் ஓட்டிலும், ஒன்று டார்ஸ் கட்டடத்திலும் இயங்க, மற்ற வகுப்புகள் திறந்தவெளியில் இயங்கின. பக்கத்தில் இருந்த கோவில் சாவடியிலும், மரத்தடியிலும் மாணவர்களை அமர்த்தி, பாடம் சொல்லிக் கொடுத்தோம். நாட்கள் ஓடின. மாநகராட்சி மற்றும் எம்.எல்.ஏ. நிதி மூலம் கட்டிட உதவி பெற்றோம். வெள்ளிப்பட்டறையில் வேலை செய்பவர்கள், ஜவ்வரிசி மில்லில் இருக்கும் கூலித்தொழிலாளிகளின் குழந்தைகள்தான் இங்கே படிக்கிறார்கள்.

மற்ற பள்ளிகளைப் பார்க்கும்போதெல்லாம் மின்விசிறி, மேசை, நாற்காலி உள்ளிட்ட வசதிகள் நம்மிடம் இல்லையே என்ற ஏக்கம் பிறக்கும். ஒரு முறை பதிப்பகம் ஒன்றுக்கு உரை எழுதும் வாய்ப்பு கிடைத்தது. பள்ளியை முடித்துவிட்டு வீட்டுக்குப் போய் தினமும் உரை எழுதுவேன். அதில் கிடைத்த சன்மானத்தை வைத்து பள்ளிக்கு அலமாரியும், இரண்டு மின்விசிறிகளையும் வாங்கினோம். ஊர்மக்கள், மின்விளக்கு, பீரோக்கள் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்தனர். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் மோட்டார் ஒன்றை வாங்கிக்கொடுத்தார்.

கற்பித்தலில் தனித்திறன்

செயல்வழிக்கற்றல் செயல்பாட்டுக்கு வரும் முன்னரே, அன்பாசிரியர் பார்வதி ஸ்ரீ, கற்றல் அட்டைகள் தயாரித்து பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறார். கற்றலில் இனிமை சேர்க்கும் விதமாக, செய்யுள்களுக்கு இசையமைத்து பாட்டுப் பாடி பாடம் கற்பிக்கிறார். சுமார் ஐந்து வருடங்களாக தொடர்ந்து அறிவியல் கண்காட்சியை நடத்தி வருகிறார்.

மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும், மேலாண்மைப் பண்பையும் வளர்க்கும் விதமாக குறிப்பிட்ட பண்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு நிதியமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட பதவிகள் அளிக்கப்படுகின்றன. துறுதுறுப்பாக இருக்கும் குழந்தைகளுக்கு ஸ்மைலி பேட்ச் ஒட்டப்படுகிறது. படிப்பு, செயல்பாடு மற்றும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு நட்சத்திரப்பரிசு உண்டு. ஒவ்வொரு பத்து நட்சத்திரத்துக்கும் ஒரு பரிசு. பரிசுகளைத் தன் பெட்டியில் எப்போதும் கையோடு வைத்திருக்கிறார். அதில் மொழி அகராதி, பாட்டில், பேனா, நோட்டுகள் ஆகியவை நிறைந்திருக்கின்றன.

என்னுடைய ஓய்வு நேரங்களில், பெரும்பாலும் இணையத்தில்தான் இருப்பேன். வகுப்பை எப்படி டிஜிட்டல் வகுப்பறையாக மாற்றலாம் என்று திட்டமிடுவது வழக்கம். கற்றல் அணுகுமுறைகளில் வித்தியாசம் இருக்க வேண்டும். இதனால் பொம்மலாட்டம், பாடல், வில்லுப்பாட்டு உள்ளிட்டவைகளைக் கொண்டு பாடம் நடத்துகிறேன். யோகா தெரியும் என்பதால், பிள்ளைகளுக்கு யோகா சொல்லிக் கொடுக்கிறேன். மாணவர்களிடையே தொழில்நுட்பம் வளர்க்க தினமும் கடைசி வகுப்பு கணிப்பொறி சார்ந்ததாக இருக்குமாறு பார்த்துக் கொள்வேன்.

பள்ளியில் இணைய வசதி இல்லாததால், மாணவர்கள் என்னுடைய வீட்டுக்கு வந்துவிடுவார்கள். எழுதுவதில் ஆர்வம் கொண்ட மாணவர்கள், இங்கிருந்தே எழுதுகிறார்கள். இதுவரை விக்கிபீடியாவில் என்னுடைய மாணவர்கள், 15 கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள். பள்ளி மாணவர்கள் என்னை அம்மா என்றுதான் கூப்பிடுவார்கள்.

விக்கிபீடியா பயணம்

உலகம் முழுக்க 285 மொழிகளில் விக்கிபீடியா பரந்து விரிந்திருக்கிறது. விக்கிபீடியாவின் வளர்ச்சி குறித்து நடத்தப்படும் மாநாட்டுக்கு சுமார் 2500 பேர் உலகம் முழுக்க இருந்து அழைக்கப்பட்டிருந்தனர். இந்தியாவில் இருந்து 11 பேரும், தமிழ்நாட்டில் இருந்து இருவரும் அழைக்கப்பட்டிருந்தனர். அந்த இருவரில் அன்பாசிரியர் பார்வதி ஸ்ரீயும் ஒருவர். அப்படி என்ன செய்தார் அவர்?

தமிழ் இணைய கல்விக் கழகத்தில் மின்மயமாக்கல் குறித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அதில், பள்ளிகளில் விக்கிபீடியாவைப் பயன்படுத்துவது குறித்துப் பேசினேன். தகவல் மற்றும் தொலைதொடர்புக்கான ஐ.சி.டி. மூலம், கிட்டத்தட்ட 20 மாவட்டங்களை ஒருங்கிணைக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதன்மூலம், சுமார் 1600 ஆசிரியர்கள் விக்கிபீடியாவில் இணைந்தார்கள். அதன்வழியாக தமிழ்க் கட்டுரைகளின் எண்ணிக்கையும் உயர்ந்தது. விழாவுக்கு முன்னர் 1400 ஆக இருந்த கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. 400க்கும் அதிகமான கட்டுரைகள் புதிதாக எழுதப்பட்டு இணைக்கப்பட்டன.

2010 முதல் விக்கிபீடியாவில் கட்டுரைகள் எழுதி வருகிறேன். இதுவரை அவர் எழுதிய கட்டுரைகளின் எண்ணிக்கை சுமார் 600. அதனைப் பாராட்டி, விக்கிமீடியாவின் உதவித் தொகை கிடைத்திருக்கிறது. அத்தோடு 13 நாட்கள் ஹாங்காங்கை சுற்றிப்பார்க்கவும், விக்கிமேனியா மாநாட்டில் கலந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய அன்பாசிரியர் பார்வதி ஸ்ரீ, "விக்கிபீடியா மற்றும் ஃபேஸ்புக் நண்பர்கள் தொடர்ந்து பள்ளிக்கு உதவுகிறார்கள். இதனால் பள்ளித் தேவைகளுக்கான பணத்தட்டுப்பாடு ஓரளவு நீங்கியுள்ளது. கலிஃபோர்னியா ஐக்கிய நாடுகள் தமிழர் சங்கம், எய்ம்ஸ் இந்தியா (AIMS- Activity in Mother Land) என்ற திட்டத்தின் கீழ் எங்களுக்கு 2500 டாலர்களை வழங்கியுள்ளனர். இதைக் கொண்டு பள்ளியைச் சுற்றிலும் கிரில்கேட் போட்டிருக்கிறோம். ஒரு நண்பர், சுவர்களுக்கு வண்ணமடித்து, குழந்தை நேய வகுப்பறைகளை உருவாக்கவும், புத்தகங்கள் மற்றும் தமிழ் அகராதிகளை வாங்கவும் உதவி செய்தார். ஓய்வு நேரங்களில் மாணவர்களுக்கு கணினியும் கற்றுத் தருகிறார்.

பலம்

மாணவர்களின் நிலையை உயர்த்த வேண்டும் என்ற எண்ணமே என்னுடைய உந்துதலாக இருக்கிறது. சோர்ந்து போகும்போதெல்லாம், 'நடப்பது எல்லாம் நல்லதுக்குத்தான்' என்று தேற்றிக் கொள்வேன். ஓர் ஆசிரியராக என்னை உணராமல், ஒரு தாயாகவே உணர்வதையே பெரிய பலமாக நினைக்கிறேன்.

எதிர்கால திட்டங்கள்

பள்ளிக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்து, தண்ணீர் வசதியைக் கொண்டு வர வேண்டும். வகுப்புகளை தொடுதிரையாக மாற்ற வேண்டும். மாணவர்களுக்கான செயல்வழிக்கற்றலை புதுமைப்படுத்த வேண்டும். எங்களின் கிராமப்பள்ளியை உலகளாவிய தரத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.

மனதை வருத்திய சம்பவங்கள்

அதெல்லாம் நிறைய இருக்கிறது. முக்கியமாக பள்ளிக்கு நிதி கேட்கப் போகும்போது. அந்த நேரங்களில் நிறைய அவமானப்பட்டிருக்கிறோம். 25,000 ரூபாய் தேவைக்கு அவர்களை அணுகினால், நிறைய பேசிவிட்டு 250 ரூபாய் கொடுப்பார்கள். சுவரில் அடித்த பந்து போலத் திரும்பி வந்திருக்கிறோம். சில இடங்களில் பிச்சைக்காரர்களைப் போல விரட்டப்பட்டிருக்கிறோம். ஆனால் அதைக் கண்டு ஒரு நாளும் சோர்ந்ததில்லை; வெட்கப்பட்டதில்லை. 'என் ஏழைக் குழந்தைகளுக்காகத்தானே கேட்கிறேன்' என்று நினைத்துக் கொள்வேன்.

நம்பி வரும் குழந்தைகளை, நாம்தான் நல்லபடியாக உருவாக்க வேண்டும். மாணவர்களின் உருவாக்கத்தில் பங்கு கொள்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு விதையாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்'' என்கிறார்.

க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

முந்தைய அத்தியாயம்: >அன்பாசிரியர் 13 - தாமஸ்: பிஞ்சு விரல்களுக்கு கலைத்திறன் புகட்டும் ஓவிய ஆசிரியர்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

3 days ago

மற்றவை

11 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

5 months ago

மேலும்