| மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும் அர்ப்பணிப்புடன் தனித்துவமாக கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் நல் அடையாள அணிவகுப்புத் தொடர் இது. |
நீலகிரி மாவட்டத்தின் மூலையொன்றில் இருக்கும் தேனாடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் ஆசிரியர் ஒருவர், தேசிய அளவில் புதுமையான கற்பித்தல் முறை போட்டியில் பரிசு பெற்றிருக்கிறார். மத்திய மனிதவள அமைச்சகம் நடத்திய அப்போட்டியில் கலந்து கொள்ளத் தமிழகத்தில் இருந்து தேர்வான ஆறு பேரில் ஆசிரியர் தர்மராஜும் ஒருவர். தகவல் தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறையில், புதுமையான முறையில் கற்பித்ததற்கான பரிசு அது. தொழில்நுட்பம் வழியாக மட்டுமே பயணிக்காமல் பழங்குடி இன மக்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும் பாடுபடுபவர்.
ஆசிரியர் தர்மராஜின் பயணத்தை, அவர் வழியாகவே கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமா?
"என்னுடைய சொந்த ஊர் கோத்தகிரி. படித்து முடித்து புதுக்கோட்டை மாவட்டத்தில், முதுகுளம் என்ற ஊரில் ஓர் அரசு நடுநிலைப்பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தேன். ஆரம்பத்தில் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில், கிராமத்திலிருக்கும் பள்ளியில் சேர்ந்துவிட்டோமே என்ற ஆதங்கம் இருந்தது. ஆனால் அங்கு படித்த மாணவர்களின் ஆர்வம், என் ஆதங்கத்தைத் தூக்கியெறிந்தது.
வழக்கமான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களைப் புதுமையான முறையில் கற்பிக்க எண்ணினேன். தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்தித்தாள்கள் வாங்கப்பட்டன. மாணவர்கள் தினமும் படித்துவிட்டு, காலை பிரேயரில் அதனை வாசிக்க வேண்டும். இதனால் அவர்கள் நாட்டு நடப்புகளை அறிந்து கொண்டதோடு, மொழியறிவும் வளர்ந்தது. ஓவிய வகுப்புகளின்போது, பத்திரிகைகளில் வரும் கேலிச் சித்திரங்களை மாணவர்கள் கரும்பலகைகளில் வரைய வேண்டும்.
வேதியியல் பாடத்தில் தனிம அட்டவணைகளில் இருக்கும் தனிமங்களின் அணு எண், நிறை எண், அணு எடை ஆகியவற்றை எண் வரிசை அடிப்படையில் கற்றுக்கொடுத்தேன். ஆர்வமாய்க் கற்றவர்கள், நாட்கள் செல்லச் செல்ல, அப்படியே அதை ஒப்பிக்க ஆரம்பித்தனர்.
விளையாட்டு மைதானத்தில் சமூக அறிவியல்
அதுபோக சமூக அறிவியலையும் ஆர்வத்துடன் படிக்க, செயல்முறைகளோடு கற்பிக்கலாம் என்று தோன்றியது. இந்திய வரைபடத்தைக் கருப்பொருளாக எடுத்து, பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் வரையும் எண்ணம் வந்தது. ஊருக்குப் போகும்போது, ஊட்டியில் இருந்து புல் கொண்டு வந்தேன்; அதை மைதானத்தில் வளர்க்கத் தொடங்கினோம். புற்கள் புல்வெளியாய் மாறத் தொடங்கியதும், இந்திய எல்லைகளுக்கு ஏற்றவாறு, புல்வெளியைச் சீர்ப்படுத்தினோம்.
இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா ஆகிய நீர்நிலைப் பகுதிகளை ஏற்படுத்த, சுமார் நான்கரை அடிக்குப் பள்ளம் தோண்டினோம். தண்ணீர் வற்றாதவாறு அதில் கான்கிரீட் தளம் போட்டு, தண்ணீர் பாய்ச்சினோம். மேலே இமயமலை, பர்வதை மலைகளுக்குக் கற்கள் இட்டு நிரப்பினோம். வெளியிலிருந்து யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல், ஆசிரியர்களும் மாணவர்களுமே இதை செய்து முடித்தோம். மாநில எல்லைகள், தலைநகரங்கள், தொழில்பேட்டைகள் ஆகியவற்றையும் அதில் குறித்தோம். மாணவர்கள் சலிக்காமல் இந்தியா குறித்த கேள்வி- பதில்களைக் கற்றுக்கொண்டே இருந்தனர்.
2002- 2003-ம் ஆண்டுவாக்கில், தமிழகத்தில் மழைநீர் சேகரிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. எங்கள் பள்ளியிலே முதல்முறையாக அதை ஏற்படுத்தினோம்.
பாடம் தாண்டி...
வழக்கமான பாடத்திட்டங்களோடு நின்றுவிடாமல், கல்வி தாண்டி, வேறு தளங்களிலும் பயணிக்கத் தோன்றியது. கூடுதல் கல்விசார் நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தோம். மாவட்ட அளவில் நடக்கும் பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டையில் இருக்கும் அனைத்துப் பள்ளிகளிலும் எங்கள் பள்ளி தனித்துப் பேசப்பட்டது. அனைத்துப் பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொள்ளும் கருத்தரங்குகள் நடைபெறும் இடங்களில் மாணவர்களால் வரையப்பட்ட ஓவியக் கண்காட்சிகளை நடத்தினோம்.
ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை இலக்கியக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நாடகம், விவாத மேடை, சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், மேடைப்பேச்சு ஆகியவை நடத்தப்பட்டன. மாணவர்கள் வெகு விரைவிலேயே எல்லாத் துறைகளிலும் கற்றுத்தேர்ந்தனர். எட்டாம் வகுப்பு முடித்து, உயர்நிலைப் பள்ளிகளுக்குச் செல்லும்போது, அங்குள்ள மாணவர்கள் இவர்களைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.
இயற்கை மீதான அக்கறையை வளர்த்தெடுக்கும் பொருட்டு, மொட்டை மாடித் தோட்டத்தை வைத்தோம். தொட்டிகளில் செடிகள் வைக்காமல், மண் கொண்டுபோய், பாத்தி கட்டினோம். ஊட்டியில் இருந்து பூச்செடிகள் எடுத்து வந்து, மாடியில் நட்டோம். மாணவர்களின் முறையான பராமரிப்புக்குப் பிறகு, பள்ளியே நந்தவனமாகப் பூத்துக் குலுங்கியது" என்கிறார்.
மாணவர்களே இல்லாத பள்ளிக்கு வந்த மாற்றல்
கோத்தகிரி மாவட்டத்தில் தேனாடு என்னும் ஊரில் இருந்த ஆரம்பப்பள்ளி ஒன்று, 4 மாணவர்களுடன் மூடப்படும் நிலையில் இருந்தது. அங்கிருந்த ஆசிரியர், 4 மாணவர்களுக்கும் டிசி கொடுத்து, வேறு பள்ளிக்கு மாறச் சொல்லிவிட்டார். இந்நிலையில் மாற்றலாகி, தேனாடு வந்து சேர்ந்தார் ஆசிரியர் தர்மராஜ்.
அங்கிருந்த பள்ளியின் சுவர்களில் விலங்குகள், தாவர வகைகள், நிலங்களின் வேறுபாடுகள் உள்ளிட்ட ஏராளமான தகவல்களை ஓவியங்களாக வரைந்தார். அந்த நான்கு மாணவர்களையும் அழைத்துக் கொண்டு, வீடு வீடாகச் சென்று, கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மெல்ல மெல்ல அப்பள்ளியின் மீது மக்களுக்கு ஈடுபாடு வர ஆரம்பித்தது. மாணவர்கள் சேர ஆரம்பித்து, கல்வியும் கற்கத் தொடங்கினர்.
முளைத்த கணிப்பொறி ஆர்வம்
ஆசிரியர் தர்மராஜ், 2005-ம் ஆண்டு வரைக்கும் கணிப்பொறி என்றால் என்னவென்றே தெரியாமல்தான் இருந்திருக்கிறார். பாடப் புத்தகங்களை வைத்து மட்டுமே கற்பித்தார். 2006-ல் சென்னையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் கணிப்பொறி குறித்த பயிற்சி எடுத்தவர், அங்குதான் முதன்முதலில் மடிக்கணினியையே கண்டிருக்கிறார்.
அது குறித்து ஆர்வமாகப் பேசுபவர், "அப்போதுதான் முதன்முதலாக அந்தக் கறுப்பு நிறத் தோஷிபாவைப் பார்த்தேன். அபூர்வப் பொருளாகக் காட்சி கொடுத்தது அது. அங்கிருந்த அதிகாரியிடம், இதைத் தொட்டுப் பார்க்கலாமா என்று கேட்டேன். உடனே அவர், அதை உயிர்ப்பித்து, அடிப்படைச் செயல்பாடுகளைக் கற்றுக் கொடுத்தார்" என்கிறார்.
சென்னையில் இருந்து கோயம்புத்தூர் வந்திறங்கிய ஆசிரியர் தர்மராஜ், நண்பர்கள் சிலரின் உதவியுடன் மடிக்கணினி ஒன்றை வாங்கிய பின்னரே, வீடு திரும்பினார். மறுநாள் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகூட இல்லாத தேனாடு பள்ளிக்கு, அக்கணினியை எடுத்துச் சென்றார். காலையில் வீட்டிலேயே சார்ஜ் செய்து பள்ளிக்கு எடுத்து வந்து, மதியம் வரை தனக்குத் தெரிந்த அடிப்படை விஷயங்களை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். மதிய உணவு இடைவேளைகளில் அருகிலிருக்கும் வீடுகளில் சார்ஜ் செய்து, திரும்பவும் கற்பிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தேசிய அளவில் தேனாடு பள்ளி
2009-ம் ஆண்டு இந்திய அரசின் எரிசக்தி அமைச்சகம் தொடங்கிய ஓவியப் போட்டியில், மாணவர்களைக் கலந்துகொள்ள வைத்தார். எரிசக்தியின் பயன்பாடுகள் என்ன? அவற்றை எப்படி மிச்சப்படுத்துவது? இயற்கை வளங்களின் முக்கியத்துவம் உள்ளிட்டவைகளைத் தன் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்து மாணவர்களைத் தயார் செய்தார். 2009-ல் இருந்து, 12 வருடங்களாகத் தேசிய அளவில் நடந்து வரும் இப்போட்டியில், ஆயிரக்கணக்கான மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்சி பள்ளிகளுடன் போட்டி போட்டு, 7 முறை முதல் 10 இடங்களுக்குள் வந்திருக்கிறது தேனாடு பள்ளி.
பள்ளிக் கல்வித்துறையின் வழிகாட்டுதலோடு, செயல்வழிக் கற்றல் முறையைக் கணிணிவழிப்படுத்தி இருக்கிறார். ஆறாம் வகுப்பில் தொடங்கி பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான பாடவகைகளுக்கு அது தொடர்பான இடங்களுக்குச் சென்று படம்பிடித்து, காணொளியாக்கி, அதன் பின்னணியில் தமிழில் குரல் விளக்கங்களையும் கொடுத்திருக்கிறார்.
உதாரணமாக, காடு மற்றும் விலங்கு வகைகள் என்னும் தலைப்பில் இருக்கும் காணொளியில் இந்தியா முழுக்க உள்ள காடுகள், அதன் வகைகள், இருப்பிடங்கள், பயன்பாடுகள், மழைப்பொழிவுகள், வளர்ச்சி, காடுகளின் பரப்பளவு உள்ளிட்ட தகவல்களை, நேரடியாகச் சென்று படம்படித்து, தொகுப்பாக்கி, பின்னணி இசை சேர்த்து, உள்ளடக்கத்துக்கான குரல் கொடுத்திருக்கிறார். மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் தமிழக பள்ளிக் கல்வித் துறையின் ஒப்புதலுக்குப் பின்னரான வெளியீட்டுக்காகக் காணொளித் தொகுப்புகள் காத்து நிற்கின்றன.
காண: >http://denadschool.blogspot.in/
சமூக சேவையிலும் சாதனை
கற்பித்தல் தாண்டி, சமூக ரீதியான செயல்பாடுகளிலும், ஆசிரியர் தர்மராஜ் அதிக அக்கறை காட்டி வருகிறார். வருடந்தோறும் எய்ட்ஸ் ஒழிப்பு தினத்தில் விழிப்புணர்வுப் பேரணி நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர், பழங்குடி மக்களுக்காக ஹெச்ஐவி எதிர்ப்பு, இரத்த தானம், கண் தானம், உடல்நலம் தொடர்பான முகாம்களையும் நடத்தி வருகிறார்.
அத்தோடு பழங்குடி இன மக்களின் குழந்தைகளுக்காகவே, தனியாக பள்ளியொன்றையும் நிர்வகித்து வருகிறார் ஆசிரியர் தர்மராஜ். அரசின் உதவியோடு 13 வருடங்களாக இயங்கும் இப்பள்ளியில் இருந்து, இதுவரை 824 பழங்குடி மாணவர்கள் கல்வி கற்று அடுத்த நிலைக்கு உயர்ந்திருக்கின்றனர்.
எதிர்காலச் செயல்பாடுகள் குறித்தும் ஆர்வமாய்ப் பேசுகிறார். " எங்களின் ஆரம்பப் பள்ளி மாணவர்களை வைத்து, ஒரு படம் எடுக்கும் முயற்சியில் இருக்கிறோம். பத்தாண்டுகளுக்கு முன்பு நீலகிரியின் நிலை என்ன, இன்னும் இருபது ஆண்டுகள் கழித்து நீலகிரி எப்படி இருக்கும் என்பதைப் பற்றிப் பேசும் படமாக அது இருக்கும். அதற்காக மாணவர்களுக்கு கேமரா பயிற்சியளித்து வருகிறோம். அரசுப் பள்ளி மாணவர்களால் எடுக்கப்படும் அப்படம், மாறி வரும் நீலகிரி மாவட்டம் குறித்த வேதனையை உரக்கப்பேசும். நிலத்தடி நீர்க் குறைவு, மழைநீர்ப் பற்றாக்குறை, நிலச்சரிவு உள்ளிட்ட முக்கியப் பிரச்சனைகளை வலிமையாக எடுத்துரைக்கும்.
ஆசிரியப்பணி குறித்து என்றுமே எனக்குப் பெருமிதம்தான். ஒரு முறை, கோவையில் இருந்து கோத்தகிரி திரும்பிக் கொண்டிருந்தேன். எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டதில், இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் இருக்க நேரிட்டது. அப்போது எனக்கு அடிபட்ட சம்பவம், தேனாடு மக்களுக்குத் தெரிந்திருக்கிறது. கோவிலில் எனக்காகச் சிறப்பு பூஜைகள் செய்து, நான் குணமாக வேண்டுமென்று பலவித வேண்டுதல்களை வைத்திருக்கின்றனர். எதையும் அறியாமலே, குணமானவுடன் பள்ளிக்குச் சென்றேன். அங்கே நான் கண்டது அழுகையோடு கூடிய ஆனந்தக் கண்ணீரை உதிர்த்த அன்புள்ளங்களை!
கல்வியை கற்றுக் கொடுத்ததற்காக, ஓர் ஊரே அழுது புலம்பி, பிரார்த்தனைகள் செய்தது. இதைவிட ஒரு ஆசிரியனுக்கு, வேறு என்ன தேவைப்பட்டுவிடும்?
க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in
| முந்தைய அத்தியாயம்:>அன்பாசிரியர் 1 - சித்ரா: அஞ்சல் அட்டை முதல் யூடியூப் வரை அசத்தும் ஆசிரியை!|
முக்கிய செய்திகள்
மற்றவை
10 days ago
மற்றவை
15 days ago
மற்றவை
22 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
5 months ago