கற்பனை வளம் மிகுந்த ஆனந்திக்கு எத்தனையோ வாய்ப்புகள் இருப்பதைக் கடந்த வாரம் பார்த்தோம். இனி, தர்க்க அறிவு அதிகம் கொண்ட பிரவீணால் பிற்காலத்தில் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்ப்போம்.
தகவல்களை அலசும் திறன், தர்க்கபூர்வமாக யோசித்தல், திட்டமிடுதல், அலசுதல், ஏன் - எதற்கு - எப்படி என்ற கேள்விகளை எழுப்பிக்கொள்ளுதல். இவற்றின் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வருதல்.
இதுதான் பிரவீணைப் போன்றவர்களின் இயல்பு. இதுவே அவர்களது திறமை. தர்க்க ரீதியான சிந்தனை நமது வாழ்வுக்கு மிகவும் முக்கியம். ஓரிடத்துக்குச் செல்ல வேண்டும். ஏழு மணிக்கு அங்கே இருக்க வேண்டும். அப்படியானால் எத்தனை மணிக்குக் கிளம்ப வேண்டும்? அந்த இடம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது, எப்படிச் செல்கிறோம், போக்குவரத்துச் சிக்கல்கள், வண்டியில் சென்றால் வண்டி ஓட்டும் திறமை ஆகியவற்றைப் பொறுத்தே தீர்மானிக்க இயலும். இதே விஷயத்தை வாடகைக்கு வீடு பார்ப்பதிலிருந்து கல்யாண ஏற்பாடுகள்வரை எல்லாவற்றுக்கும் பொருத்திப் பார்க்கலாம்.
ஒரு பொருள் காணாமல்போனாலும் இதுபோன்ற தர்க்க ரீதியான கேள்விகளின் மூலம் அதைக் கண்டுபிடிக்க முயலலாம். ஏன் உங்கள் வண்டி மட்டும் எப்போதும் ரிப்பேர் ஆகிறது? ஏன் சிலருக்கு மட்டும் அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கிறது? ஏன் சிலர் மட்டும் சுலபத்தில் தங்கள் பொருளைத் தொலைத்துவிடுகிறார்கள்? ஏன் சென்னையின் சில இடங்களில் ரவுடிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது? ஏன் சில இடங்களில் மட்டும் வீடுகளின் வாடகையும் விலையும் அதிகமாக இருக்கின்றன?
இந்த எல்லாக் கேள்விகளுக்கும் தர்க்க ரீதியாக விடை தேடலாம். என்ன, ஏன், எப்படி, எப்போது, யாரால் என்பன போன்ற தர்க்க ரீதியான கேள்விகள் வாழ்வின் அனைத்து அம்சங்களுக்கும் அடிப்படையாக உள்ளன. ஒரு பிரச்சினையின் அடிப்படையைப் புரிந்துகொள்ளுவது, அதன் பல்வேறு தன்மைகளுக்கு இடையே இருக்கும் தொடர்பை அறிவது, தீர்வுகளை அடையாளம் காண்பது ஆகிய அனைத்துமே தர்க்க அறிவைப் பயன்படுத்தி அலசும் திறனை அடிப்படையாகக் கொண்டவை.
வெறும் கேள்விகள் மட்டுமல்ல. அந்தக் கேள்விகளின் அடிப்படையில் தேடல் நடத்துவது முக்கியம். பல்வேறு புள்ளிவிவரங்களிலிருந்து தகவல்களைத் தேர்ந்தெடுப்பது, அவற்றிலிருந்து பல்வேறு போக்குகளை அறிந்து, சில முடிவுகளுக்கு வருவது – இப்படித்தான் இது செயல்படுகிறது.
இந்தத் திறமை கணிதத்துடனும் அறிவியலுடனும் தொடர்புடையது. ஒருவர் சிக்கலான கணக்குகளைப் போடுகிறார். இன்னொருவர் ஒரு கல்வெட்டில் உள்ள சித்திரத்தை ஆராய்ந்து சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களைப் பற்றிய சில முடிவுகளைக் கண்டுபிடிக்கிறார். இன்னொருவர் ஏன் குறிப்பிட்ட சில மதங்களில் விற்பனை குறைவாக இருக்கிறது என்பதை ஆராய்ந்து சில தகவல்களைக் கண்டுபிடிக்கிறார். எல்லாமே தர்க்க அறிவுதான்.
இதற்கான தொழில்கள் எவை?
ஆய்வை அடிப்படையாகக் கொண்ட தொழில்கள் பல உள்ளன. இந்தத் திறமை தேவை. ஆய்வாளர் ஏதேனும் ஒரு கேள்வியிலிருந்து தன் பணியைத் தொடங்குகிறார். “போன தேர்தலைவிட இந்தத் தேர்தலில் அதிக வாக்குகள் பதிவானது ஏன்?’’ என்ற கேள்வியாக இருக்கலாம். பல்வேறு விதமான சோதனைகள், கேள்விகளின் மூலம் புள்ளிவிவரங்களை அவர். சேகரிக்கிறார். அவற்றை அலசி ஆராய்ந்து தனது கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிக்கிறார்.
தொழில் துறை, பொருளியல், சமூக சேவை என எந்தத் துறையாக இருந்தாலும் சரி; அந்தத் துறையில் பலரும் அறியாத விவரங்களைத் தோண்டி எடுத்து வெளியே கொண்டுவருவதற்குத் தர்க்க ரீதியான அணுகுமுறைதான் உதவுகிறது.
கம்ப்யூட்டர் ப்ரோகிராமருக்குத் தர்க்க அறிவு தேவை. சிறப்பான ப்ரோகிராம்களை மிகவும் குறைந்த செலவில் உருவாக்குவதற்குத் தர்க்க அறிவையே அவர் பெருமளவில் சார்ந்திருக்கிறார்.
ஒரு புதிய பொருளை எப்படிச் சந்தையில் கொண்டுவருவது?
சந்தையில் எவ்வளவோ விதமான டூத் பிரஷ்கள் இருக்கின்றன. இதில் இன்னொரு பிரஷ் நுழைய இடம் இருக்கிறதா? இப்போது இருக்கும் பிரஷ்களில் இல்லாத அம்சம் ஏதேனும் இருக்கிறதா? அப்படி ஏதேனும் ஒன்றை அடையாளம் காண முடியுமா?
காபி என்றால் சூடான காபிதானா? குளிர்ந்த காபியை யாரும் குடிக்க மாட்டார்களா?
இவை எல்லாம் தர்க்க ரீதியான கேள்விகள். இவற்றின் அடிப்படையில்தான் பல விதமான புதிய தயாரிப்புகள் வந்தன. கை விரலைப் போன்ற பிரஷ், கோல்ட் காபி, உப்பும் இனிப்பும் கலந்த பிஸ்கெட் என்று பல பொருட்களை உதாரணம் காட்டலாம்.
சுரிதாரில் புதிய டிசைன் ஒன்றை ஒரு நிறுவனம் உருவாக்குகிறது. அதை எப்படி விற்பது? யார் அதை விரும்புவார்? டீன் - ஏஜ் பெண்களா? கல்லூரி மாணவிகளா? பெரியவர்களா?
இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களை வைத்துக்கொண்டு ஒரு நிறுவனம் தனது தயாரிப்பு, விளம்பரம், விநியோகம், விலை ஆகியவற்றைத் தீர்மானிக்க முடியும்.
இந்தப் பணிகளுக்குத் தர்க்க ரீதியான சிந்தனையில் திறமை பெற்றவர்கள் தேவை.
பொறியியல், புள்ளிவிவரவியல், தூய அறிவியல், நிர்வாகம், ஆய்வுப் பணிகள், வங்கித் துறை, செயலாளர் பணி எனப் பல துறைகளில் இந்தத் திறமைக்கு வேலைகள் காத்திருக்கின்றன.
நிதித் துறையிலும் இது தேவை. எவ்வளவு பணம் வருகிறது? எப்படி வருகிறது? எப்படிச் செலவாகிறது? இப்படியாகத் துருவித் துருவித் தகவல்களைத் திரட்டுவது. பிறகு அந்தத் தகவல்களை அலசி ஆராய்ந்து பல உண்மைகளைக் கண்டறிவது. இதுபோன்ற பணிகள் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தேவைப்படுகின்றன.
துப்பறியும் துறையும் இப்படித்தான். குற்றம்…என்ன நடந்தது? எப்படி? ஏன்? யார் இதில் சம்பந்தப்பட்டிருக்கக்கூடும்? எல்லாமே தர்க்க ரீதியான கேள்விகள். இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேட ஆரம்பித்தால் உண்மைகள் வெளியாக ஆரம்பிக்கும். சரியான கேள்வி எழுப்புவதற்கும் அவற்றுக்கான தகவல்களைத் திரட்டுவதற்கும் தர்க்க ரீதியான திறன் தேவை. உங்களுக்கு அந்தத் திறமை இருக்கிறதா? திட்டமிடுதல், அலசுதல், தகவல்களை வைத்துக்கொண்டு துருவி ஆராய்தல் ஆகியவற்றில் உங்களுக்கு விருப்பமும் திறமையும் உள்ளனவா? மேலே கூறிய துறைகளில் உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.
முக்கிய செய்திகள்
மற்றவை
10 days ago
மற்றவை
18 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
6 months ago