5.2 கிலோ எடையில் பிறந்த ஆண் குழந்தை

By சி.கண்ணன்

தமிழகத்திலேயே முதன் முறை யாக 5.2 கிலோ எடை கொண்ட ஆண் குழந்தை சென்னை மேடவாக்கம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் வியாழக் கிழமை பிறந்தது.

மேடவாக்கம் அடுத்துள்ள நன்மங்கலம் பொன்னியம்மன் காலடி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (33) ஒரு கூலித் தொழிலாளி. இவரின் மனைவி சுதா (29). இவர்களுக்கு ஏற்கெனவே 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இரண்டாவது முறை கருவுற்ற சுதா, பிரசவத்திற்காக மேடவாக்கத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்கிழமை மதியம் சேர்க்கப் பட்டார். அவருக்கு இரவுவரை சுகப்பிரசவம் ஆகவில்லை.

இதையடுத்து அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதன்படி வியாழக்கிழமை மதியம் 1 மணியளவில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தனர். அந்தக் குழந்தையை எடை போட்டுப் பார்த்த போது 5.20 கிலோ எடை இருந்தது. எடை அதிகமாக இருந்தாலும் நல்ல உடல் நலத்துடன் குழந்தை இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக வட்டார மருத்துவ அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுரேஷ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்திலேயே முதன் முறையாக 5.20 கிலோ எடை கொண்ட குழந்தை பிறந்துள்ளது. குழந்தை நலமாக உள்ளது. அதிக எடையுடன் இருந்ததால் சுகப்பிரசவம் ஆகவில்லை. பொதுவாக குழந்தைகள் 2.50 கிலோ முதல் 3 கிலோ வரை எடையுடன் பிறக்கும்.

அதிக எடைக்கு காரணம்

பொதுவாக தாய்மார்களுக்கு பிரசவ காலத்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும். அதனால் சில குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் பாதித்து, பிறக்கும்போதே அதிக எடையுடன் பிறக்க வாய்ப்புள்ளது. ஆனால் சுதாவின் குழந்தைக்கு அந்த பிரச்சினைகள் ஏற்படவில்லை.

முதல் குழந்தை யும் 4 கிலோ எடையுடன் பிறந்திருப்பதால் இந்த குழந்தையின் எடை குறித்து பயம் தேவையில்லை. பெற்றோர் அதிக எடையுடன் இருந்தாலோ அல்லது மரபுவழி காரணமாகவோ குழந்தைகள் அதிக எடையுடன் பிறக்க வாய்ப்புள்ளது என்று கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE