தென்னை வளர்க்கலாம் வாங்க என்பது போல் ஒலிக்கிறது தலைப்பு. தரையில் தண்ணீர் ஊற்றினால் தலையில் இளநீர் சுமக்கும் தென்னை போன்று பிள்ளை வளர்ப்பு எளிதல்ல குழந்தை வளர்ப்பு எனப் புலம்புகிறோம் நாம். ஆனால் வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், ` குழந்தையை வளர்க்காதீர்கள் வளரவிடுங்கள்` என்கிறார்.
செடியாக இருக்கும்பொழுது, கிளையை வெட்டி விட்டால் செடி `போன்சாய்` ரகமாக மாறும். மரமான பின் சீர்படுத்தினாலும், சீர்படுத்தாவிட்டாலும் மரம் அழகுதான். ’படுத்தறான் பையன’் என்றால் உங்களை சீர்படுத்தச் சொல்லுகிறான் என்று அர்த்தம். அதற்காக அவர்களின் செயல்களை வெட்டி கொண்டே இருந்தால், முழுதாய் சீராய் வளர்வது எப்படி?
முதலில் பிள்ளை சொன்ன பேச்சைக் கேட்க வேண்டுமானால், அவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். அதற்கு முதலில் தாய் எப்போதும் தூய்மையாகவும், சிரித்த முகத்துடனும் இருக்க வேண்டும். அதாவது இருபத்திநாலு மணி நேரமும்.
உடைத்துச் சொல்ல வேண்டுமென்றால், தாய் குளிக்காமல் சமைத்தால், பிள்ளை குளிக்காமல்தானே சாப்பிடும். தாய் இப்படி இருந்து கொண்டு, பிள்ளை குளித்து முழுகி சீருடை அணிந்து, கடவுளை வணங்கி, சாப்பிட கை நனைக்கும்பொழுது, தாயைப் பார்க்கும் அம்மா முகம் பார்த்து பால் குடித்த ஞாபகத்தில். அன்று புன்னகை பூத்து சுத்தமாக இருந்த அம்மாவின் முகம் இன்று சமையலறை போராட்டத்தினால், வாடி வதங்கி எண்ணெய் கரை படிந்து, மிரட்டும் விழிகளுடன் காண்பது பழகிவிட்டாலும் தினம் தினம் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் பிள்ளைக்கு ஏற்படுத்திவிடுகிறது. இந்த சொல்லத் தெரியாத வேதனையை விழுங்குவதா? அல்லது அந்தச் சோற்றை விழுங்குவதா? பரிதவித்துப் போகிறது பிள்ளையின் அம்மா பாசம்.
உங்கள் கவலைகளை யாரும் தூக்கிக் கொண்டு போய்விடமாட்டார்கள். அது உங்களின் நீங்காத சொத்துதான். ஒன்று போனால் ஒன்று வந்து ஒட்டிக் கொள்வது சகஜம்தான். பிள்ளைகள் பள்ளிக்கு செல்லும் வரையிலாவது நடியுங்கள். உங்களுக்கு கவலையே இல்லாதது போல் முகத்தை மலர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
பிள்ளை வளர்ப்பதில் அவர்கள் அன்னையின் சொல்லைக் கேட்ட வேண்டுமானால், வாழ்வின் முடிவு வரை தொடர வேண்டிய முக மலர்ச்சி எப்போதும் முகத்தில் குடி கொண்டு இருந்துதான் ஆக வேண்டும். நீங்கள் அழகாய் இருந்து பாருங்கள், பிள்ளைகளின் ஆனந்தச் சிரிப்பை காணலாம். அமிர்தவல்லி அம்மா சொல்வார்கள் "தாய் இறக்கும் தருவாயிலும், இறந்த பின்னும் கூட அழகாய் தோற்றமளிக்க வேண்டும் பிள்ளைக்காக. ஏனெனில் தாயின் கடைசி முக முழி கூட பிள்ளைக்கு மனதில் அமைதியை ஏற்படுத்த வேண்டும். அழகாய் இருப்போம், பிள்ளைகளின் ஆனந்த வாழ்வுக்காக."
இதுவே பிள்ளைகளுக்கு தாய் தரும் மிகப் பெரிய சொத்து.
இப்போது பிள்ளை வளர்ப்புக்கு வந்து விடலாம். தெலுங்கு மொழி தோழி அவள். தன் ஒரு வயது மகளைப் பார்த்து, `கூவக்கா` என்பாள். அப்படி என்றால் கத்தாதே என்று அர்த்தம். உடனே அந்தப் பெண் குழந்தை கத்தும். இதனை பார்த்து குடும்பமே கை கொட்டிச் சிரிக்கும். குழந்தைதானே என்று. சொன்னால் நம்ப மாட்டீர்கள் முப்பது வயதான அந்த பெண் இன்றும் எது சொன்னாலும் கேட்பதில்லை. தனக்காகவும் தெரியவில்லை. சிறு வயது நிகழ்ச்சிதான் காரணம் என்று உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், ஏதோ தொடர்பு இருப்பது போலவே தோன்றுகிறது. தோற்ற மாயையாக இருக்கலாம்.
தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல் சேலை என்பார்கள். தந்தை போல் என்று எந்தப் பழமொழியும் இருப்பதாகத் தெரியவில்லை. பிள்ளை எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அது போல தாய் இருந்தாலே போதும். தானே பிள்ளை, தங்கக் கம்பி ஆகிவிடுவான். பின்னர் அதுவே தங்கக் குடமாக மாறிவிடும். இதுபோதாது சொல்லிக் கொடுத்துதான் வளர்க்க வேண்டும் என்று தாய் விரும்பினால், முதலில் 'டிவி'யை அணைத்து விடுங்கள்.
நீங்கள் முதலில் சொல் பேச்சு கேட்கிறீர்களாக என்பதை 'டெஸ்ட்' செய்யத்தான் இந்த சும்மா ஆணை. 'டிவி' போடலாம் தப்பில்லை. தற்போது உங்களிடம் இருப்பது ஆறு மாதக் குழந்தை என்று வைத்துக் கொள்ளுங்கள். மடியில் இருந்த குழந்தை பாலுக்கு அழுகிறது.
நீங்களோ பிரபல 'சிங்கர்' நிகழ்ச்சியில் ஒன்றி இருக்கிறீர்கள். குழந்தைக்கு அப்படி ஒன்றும் கொலைப் பசி இல்லை என்பது தாய்க்குத் தெரியும். அப்போது குழந்தையிடம் சொல்லுங்கள், "இந்த நிகழ்ச்சி முடியும் வரை பொறுத்திரு, இன்னும் ஐந்து நிமிடம்தான் இருக்கு" என்று சிரித்தபடி.
அதிசயம் என்னவென்றால் வயிற்றுக்குள் இருந்தே தாய் குரலைக் கேட்டுக் கொண்டிருந்த குழந்தைக்கு, தாயின் இந்த ஆணை புரியும். அமைதியாக இருக்கும் குழந்தை. நிகழ்ச்சி முடிந்த அடுத்த கணம் வீறிட்டு கத்தி தன் இருப்பை அறிவிக்கும். சொல் பேச்சு கேட்கவும், தன் உரிமை கோரவும் கற்றுக் கொண்டுவிட்டான் பிள்ளை. இதனைப் போல் இயல்பாகச் செய்ய வேண்டும். வலிந்து செய்தால் பலனற்றுப் போகும்.
பழங்காலத்தில் சொல்வார்கள் பெரியவர்களை எதிர்த்துப் பேசாதே என்று. பெரியவர்களை எதிர்த்துப் பேசுதல் என்ன இது கெட்ட பழக்கம் என்று கூட அதட்டிச் சொல்வார்கள். ஆனால் இக்காலத்தில் பிள்ளைகளை எதிர்த்துப் பேசாதீர்கள் என்பதுதான் சரி. ஆமாம், அது என்ன கெட்டப் பழக்கம் பிள்ளைகளை எதிர்த்துப் பேசுவது? இயல்பாக எடுத்துச் சொல்லுங்கள் அவர்கள் நம் பிள்ளைகள். ஒரு நாள் இல்லாவிட்டால், வேறொரு நாள் புரிந்து கொள்வார்கள்.
ஊதுகின்ற சங்கை மென்மையாகவும், இனிமையாகவும் ஊதிவிட்டால் போதும். ஒருபோதும் பிறர் முன்னிலையில் அவர்களை குறை கூறாதீர்கள். எதிர்காற்றில் எச்சில் உமிழ்ந்த கதை ஆகிவிடும். உங்களைப் போலவே உங்கள் பிள்ளை இருந்தால் அது 'போர்'. விதவிதமான ஆடைகள் போல, ஒவ்வொருவரும் விதவிதமாக இருத்தலே இயல்பு. உங்களைப் போல் இயல்பாகவே பிள்ளைகள் இருந்துவிட்டால் பரவாயில்லை. வேறு விதமான விருப்பங்கள் கொண்டிருந்தால் நல்லது. என்னைப் போல் ஆக்குகிறேன் என்றோ, உங்கள் ஆசையை அவர்கள் மேல் திணிக்கிறீர்கள் என்றாலோ என்ன தெரியுமா? அவர்களை வளைத்து, முறுக்கி, இழுக்கிறீர்கள் என்று அர்த்தம். பின்னர் 'சிக்கல் விழுந்து' சிக்கலாகிவிடும்.
நல்ல படிப்பைத் தவிர உலகில் நன்கு வாழ இரண்டு குணங்கள் மட்டுமே முக்கியம். ஒன்று சிக்கனம். இரண்டு உண்மை கூறுதல். முதலில் சிக்கனம் கற்றுத் தரலாம். ரொம்ப செலவு வைக்கிறார்கள் என்பதே பிள்ளைகள் குறித்த முதல் புகாராக இருக்கிறது. சின்ன விஷயமாகவே இதைக் கற்றுக் கொடுத்து விடலாம். வீட்டில் உள்ள வேண்டாத இடத்தில் எரியும் விளக்குகளையும், மின் விசிறியையும் 'சுவிட்ச் ஆஃப்' செய்தால், ஒரு தடவைக்கு ஒரு பாயின்ட் என்ற கணக்கில் நூறு பாயிண்ட் எடுத்தால் ஒரு பரிசு என்று பிள்ளையிடம் அறிவியுங்கள். பரிசுத் தொகை குறைந்தபட்சம் நூறு ரூபாயாக இருக்க வேண்டும். தினந்தோறும் எத்தனை 'பாயின்டு'கள் என்று குறிக்க வேண்டும். இதனால் அடுத்த மாதம் மின்சார பில் வரும்போது பதினைந்து ரூபாயாவது குறைந்து இருக்கும். இதனை மறவாமல் பிள்ளைக்குச் சுட்டிக்காட்ட வேண்டும்.
இது போல் தொடர்ந்து பழக்கிய பிறகு, மாதாந்திர காய்கறி மற்றும் பழச் செலவை செய்யச் சொல்லி, அம்மாதத்திற்கான மொத்தப் பணத்தையும் ஒரு டைரியில் வைத்து, அன்றன்றைக்கு ஆன செலவை எழுதச் சொல்லவேண்டும். இதனால் அவர்கள் மூன்று விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள். ஒன்று, சரியான மீத சில்லறை பெறுதல். இரண்டு, பருவ பண்டங்கள் வாங்கினால் விலை குறைவு என்ற சமூகப் பொருளாதாரம். மூன்று, கூச்சம் விலகித் தன்னம்பிக்கை பெறுதல். பிள்ளைகள் அறியாமல் இவை அனைத்தும் உங்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
இவற்றைச் சரியாகக் கற்றுத் தந்துவிட்டீர்கள் என்றால் பிள்ளைக்கு 'ஊதாரி' என்ற அவப்பெயர் ஒருபோதும் ஏற்படாது.
அடுத்தது உண்மை பேசுதல். இதற்கு உங்களைத்தான் முன்னுதாரணமாக கொள்கிறார்கள் பிள்ளைகள். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பார்கள். இதைப் போலத்தான் உங்களது உண்மை பேசும் குணம், பிள்ளையிடம் பரிமளிக்கும்.
பிள்ளைகளுக்கான வாழ்க்கையை நல்ல பண்புகளைக் கொண்டு 'ரிசர்வ்' பண்ணுங்க, பயணம் சுகமாக இருக்கும்.
முக்கிய செய்திகள்
மற்றவை
2 days ago
மற்றவை
3 days ago
மற்றவை
14 days ago
மற்றவை
19 days ago
மற்றவை
26 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago