தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியரிடம் கருணைக் கொலைக்கு மனு கொடுத்த சிறுவனுக்கு, சென்னை பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. சிறுவனின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபட வேடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். சுமை தூக்கும் கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுகுணா. இவர்களின் கடைசி மகன் சக்திவேல் (17), தொண்டையில் ஏற்பட்ட புற்றுநோய் கட்டியால் சாப்பிட முடியாமலும், மூச்சுவிட முடியாமலும் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில், கடந்த 30-ம் தேதி தாய் சுகுணாவுடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னுவை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். ‘நான் ஒவ்வொரு நொடியும் மரணத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு வாழப் பிடிக்க வில்லை. என்னை கருணை கொலை செய்ய வேண்டும்’ என மனுவில் கூறியிருந்தார்.
சிகிச்சைக்கு ஏற்பாடு
இதையடுத்து, சென்னை அண்ணா சாலையில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சக்திவேலுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஆட்சியர் ராஜேந்திர ரத்னு ஏற்பாடு செய்தார். அன்றிரவே சென்னைக்கு அழைத்து வரப்பட்ட சக்திவேல், பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரை புற்றுநோய் அறுவைச் சிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் டி.ஜெயக்குமார் தலைமையிலான குழு வினர் பரிசோதனை செய்தனர். அறுவைச் சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டியை அகற்ற முடிவு செய்தனர். முதல்கட்டமாக, சிறுவனின் வயிற்றுப் பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்து குடலில் துளையிட்டு பெரிய அளவிலான ஒரு டியூபை பொருத்தினர். அந்த டியூப் வழியாக திரவ உணவுகள் மற்றும் முட்டைகளை உள்ளே செலுத்தி வருகின்றனர். இதன்மூலம், சிறுவனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து புற்றுநோய் அறுவைச் சிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:
சிறுவனின் தொண்டையில் ஏற்பட்டுள்ள புற்றுநோய்க் கட்டி, மூச்சுக் குழாய் மற்றும் உணவுக்குழாயை முழுவதுமாக அடைத்துவிட்டது. அதனால்தான் மூச்சுவிட முடியாமலும், சாப்பிட முடியாமலும் அவதிப்பட்டு வந்துள்ளான். முதல்கட்டமாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிறுவனின் தொண்டைப் பகுதியில் உள்ள மூச்சுக்குழாயில் துளையிட்டு, மூச்சுவிடு வதற்காக ஒரு டியூப் பொருத்தப்பட்டது.
சிறுவன் உடல் மெலிந்து காணப்பட்டது. அதனால், அவனை தேற்றுவதற்காக, வயிற்றில் அறுவைச் சிகிச்சை செய்து குடலில் டியூப் வைத்துள்ளோம். அந்த டியூப் மூலமாக திரவ உணவுகளை உள்ளே செலுத்தி வருகிறோம். சிறுவனின் உடல் நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் எழுந்து நன்றாக நடக்கத் தொடங்கிவிடுவான்.
புற்றுநோய் கட்டி அகற்றம்
இதையடுத்து புற்றுநோய் மருந்து சிகிச்சை மூலம் தொண்டையில் உள்ள புற்றுநோய் கட்டியின் அளவு குறைக்கப்படும். பின்னர் அறுவைச் சிகிச்சை செய்து புற்றுநோய் கட்டியை முழுவது மாக அகற்றுவோம். இந்த அனைத்து சிகிச்சைகளும் ஒரு மாதத்தில் முடிந்துவிடும். அதன்பின், சிறுவன் பூரணமாக குணமடைந்து வீட்டுக்கு சென்று விடுவான். ஏற்கெனவே, சிறுவனுக்கு தொண்டை புற்றுநோய்க்காக புற்றுநோய் கதிரியக்கச் சிகிச்சை போதுமான அளவு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், இங்கு மீண்டும் கதிரியக்கச் சிகிச்சை கொடுக்க மாட்டோம்.
17 வயதில் புற்றுநோய்
இந்த அரிய வகை தொண்டை புற்றுநோய் (HYPOPHARYNX) வழக்கமாக 50 அல்லது 60 வயதில்தான் வரும். அதுவும் அதிகமாக புகை மற்றும் மது அருந்துபவர்களுக்கே தொண்டையில் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால், 17 வயது சிறுவனுக்கு தொண் டையில் புற்றுநோய்க் கட்டி வந்தது எப்படி என தெரியவில்லை.
இவ்வாறு டாக்டர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சிறுவனின் தாய் சுகுணா கண்ணீர் மல்க கூறியதாவது:
எங்களுக்கு மொத்தம் 5 குழந்தைகள். கடைசி மகன் சக்திவேல், கடந்த ஆண்டு மார்ச்சில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு விடுமுறையில் இருந்தான். அப்போது முதலே சாப்பிட முடியவில்லை. மூச்சுவிட முடியவில்லை என சொல்லி வந்தான். மருத்துவமனையில் சேர்த்தபோது, தொண்டையில் புற்றுநோய் கட்டி இருப்பதாக தெரிவித்தனர். பல மருத்துவமனைகளுக்கு அவனை அழைத்துச் சென்றேன்.
‘புற்றுநோய் முற்றிவிட்டது, உங்கள் மகனைக் காப்பாற்ற முடியாது’ என திருப்பி அனுப்பிவிட்டனர். அதனால்தான் கடைசியாக கலெக்டரிடம் மனு கொடுத்தோம். இந்த மருத்துவமனையில் நன்றாக சிகிச்சை அளிக்கின்றனர். மகனின் உடல் நிலையிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. என்னைப் பார்த்து சிரிக்கிறான். என் மகன் உயிர் பிழைத்து விடுவான் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
மற்றவை
11 days ago
மற்றவை
18 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
6 months ago