வகுப்பறையில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த ஏன் அனுமதிக்க வேண்டும்?

By திண்ணை வாத்தியர்

சமீபத்தில் ஆசிரியர் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, கற்பித்தல் முறையில் புதிய கருவியாகச் செல்போன் அமைந்திருப்பதை அறிந்தேன். செல்போன் என்பது வெறும் தகவல்தொடர்புச் சாதனமாக இல்லாமல், கல்வித்துறையில், முக்கியமாகக் கற்பித்தலில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பற்றிய நீண்ட உரையாடல் புதிய உத்வேகத்தை அளித்தது என்றுதான் சொல்லவேண்டும். அதில் ’வகுப்பறையில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்துவது எப்படி?’ என்ற வரிதான் மீண்டும் மீண்டும் உரையாடலில் எழுந்த ஒரு தேடல்.

முதலில் வகுப்பறை என்றால் என்ன என்பதைப் பற்றி அறிந்துகொள்வோம். வகுப்பறை என்பது நான்கு சுவர்களால் சூழ்ந்த, இருக்கைகள் வரிசையாக அமைந்த, கவனிக்கும் மாணவர்களால் நிரம்பிய, கற்பிக்கும் ஆசிரியரால் அமைந்த அறை என்பது மரபான ஒன்று. தற்போது அப்படி இல்லை என்பதுதான் நிஜம். உண்மையில் தற்போதைய வகுப்பறை என்பது கற்பித்தல்-கற்றலுக்கிடையிலான இடைவெளியைக் குறைக்கும் முயற்சியை மேற்கொண்டுவருகிறது. அதரப்பழசான கல்விக் கற்பித்தல் செயல்பாடுகள் மறந்துவிட்டு, ப்ரொக்ஜடரில், கணினியில் பாடம் கற்பிக்கும் ஸ்மார்ட் க்ளாஸ் திட்டம் பல்வேறு தனியார் பள்ளிகளில் மட்டுமல்லாமல், அரசுப் பள்ளிகளில் சிறுபான்மையாக நடைமுறையில் உள்ளது. இது இரண்டும் இல்லாமல், செல்போன் வழியாகப் பாடம் சம்பந்தமான விளக்கங்களைத் தேடிக் கற்கும் கற்பிக்கும் தன்மையும் நடக்கிறது. எனவே வகுப்பறை என்பது தேடலுக்கான வழி என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இரண்டாவதாக ஆசிரியர் என்பவர் வெறும் புத்தகத்தை வாசித்துவிட்டு, கரும்பலகையில் எழுதிக் கற்பிப்பவராக இன்றைய நடைமுறையில் தொடர்வது என்பது அதரப் பழமையானது. தற்போது தனியார் பள்ளிக்கு இணையாகப், பல அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பவர்பாயின்ட், ஃப்ளாஷ் கொண்டு பாடம் நடத்துபவர்களாக மாறிவிட்டனர். இன்னும் சொல்லப்போனால் தோல்பாவையை, பொம்மலாட்டத்தை வைத்துப் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

செல்போன் என்பது கற்பித்தலுக்கு எதிரான, பள்ளிக்கு எதிரான ஒரு கருவி அல்ல. அது ஒரு கத்தி. பழம் நறுக்கவும் பயன்படும், ஆளைக் கொல்லவும் பயன்படும். பள்ளிக்கூடத்தில் அது பழம் நறுக்கவே பயன்படுத்தப்படுகிறது. அதற்காகச் செல்போனையே பயன்படுத்தக்கூடாது என்பது, ஒரு கற்பித்தல் கருவியை நாம் கண்மூடித்தனமாகத் தடை செய்கிறோம் என்பதாக அமைகிறது. ஏன் ஒரு செல்போனைப் பயன்படுத்துகிறோம் என்பதற்குச் சில உதாரணங்கள்….

எனது ஆங்கில ஆசிரிய நண்பர் ஒருவர் அமெரிக்கன் இங்கிலிஷ் வேர்ட்ஸ், பிரிட்டன் இங்கிலிஷ் வேர்ட்ஸ் பற்றிப் பாடம் நடத்தும்போது, மாணவர் கேட்டது – “இரண்டையும் நாம் ஏன் கம்பேர் பண்ணவேணும்?“. பிறகு ஆசிரியர் தன் செல்போனை எடுத்து இரண்டு நாட்டு ஆங்கிலமும் நம்மில் எவ்வாறு கலந்து இருக்கிறது என்பதையும், அதற்கான செய்திகளையும் காட்டியுள்ளார். அதில் ஒரு வார்த்தைக்கான அமெரிக்க இங்கிலிஷ், பிரிட்டன் இங்கிலிஷ் வேர்ட்ஸ் உச்சரிப்பைச் செல்போனில், கூகுள் தேடுபொறிவழியாகக் காட்டியுள்ளார். அந்த மாணவனுக்கு இந்த விஷயத்தில் ஆர்வம் கூடிவிட்டதாம். அடுத்த பாடவேளையில் மாணவனிடம் அவர் கேள்விகள்கேட்க, பதில் சரியாக வந்ததாம். இப்படி பலவிதமான கற்பித்தலுக்கான கல்விசார் கற்பித்தல் கருவிகள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. இதைத் தரவிறக்கம் செய்து, தயாரித்து, செல்போனில் பதிவுசெய்து மாணவர்களுக்குக் காட்ட, செயல்படுத்த செல்போன் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கண்கூடாகப் பார்க்கலாம். இதை மறுக்கலாமா? இன்னொரு கணித ஆசிரியர் கணிதச் சூத்திரத்தை மாணவர்களுக்குக் காட்ட, அதன் செயல்பாட்டினைப் பவர்பாயின்ட் ப்ரசென்டேஷனில் அமைந்த வீடியோவை (ஆபிஸ் 2013)க் காட்டியுள்ளார். இப்படி பல கணித வகைகளைக் காட்டிவருகிறார்.

இதற்காக அவர் பயன்படுத்தியது செல்போன். மற்றொரு அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியர் மிதக்கும் காந்தம் பற்றி நடத்துவதற்குமுன், அதன் ஆங்கில வீடியோவை டவுன்லோட் செய்து, அதனைத் தமிழ்ப்படுத்தி, அதனைத் தன் செல்போனில் ஏற்றி, மாணவர்களுக்குக் காட்டினார். தற்போது அவர் பலவித அறிவியல் சோதனைகளைப் பாடமாக நடத்துவதற்குப் பதிலாக, சொற்களால் விளக்குவதற்குப் பதிலாக வீடியோவைச் செல்போன் வழியாகக் காட்டி வருகிறார். அதற்குப் பிறகு அவர் தெளிவாக மாணவர்களுக்குப் புரிய வைக்கிறார். எனவே அவர் இனிமேல் செல்போன் பயன்படுத்துவதைத் தடைசெய்யலாமா? இன்னொரு ஆசிரியர் சற்று வித்தியாசமானர். அவர் ஒரு வரலாற்று ஆசிரியர். அவரிடம் அக்பர் பற்றிய பாடம் நடத்துங்கள் என்றால், அதற்கான ப்லொ சார்ட்டை தயாரித்து, வீடியோவாக்கித் தந்துவிடுவார். தன் ஆசிரிய நண்பர்களுக்கு ஷேர் செய்வார். அவருடைய பாட அறையில், ஹிஸ்டிரி சேனலில் இருந்து டவுன்லோட் செய்யப்பட்ட, தாஜ்மகால் பற்றிய செய்தியைக் காட்டினார். அதைத் தமிழாக்கம் செய்திருந்தார். இனிமேல் அவர் என்ன செய்யப்போகிறாரோ? இன்னொரு தமிழாசிரியர்., இலக்கணப் பகுதியைப் புதிய தலைமுறை டிவியில் வெளியாகும் அறிவோம் தமிழ்ப் பகுதியில், நிரஞ்சன் பாரதி கற்பிக்கும் இலக்கணத்தைத் தன் செல்போனில் தரவிறக்கம் செய்து, மாணவர்களுக்குக் காட்டித் தெளிய வைக்கிறார். இன்னொரு ஆசிரியர், தன்னுடைய செல்போனில் உள்ள ப்ரொஜக்டர் வழியாகச் சுவரில் பாடம் சம்பந்தமான (பாடத்தைப் புரிய வைக்க) வீடியோ ஒன்றை வீழ்த்திப் பாடம் நடத்துகிறார்.

இன்னும் சொல்லப்போனால் இன்றைய தலைமுறை கணினி தலைமுறை என்றுதான் சொல்லவேண்டும். வயிற்றுக்குச் சோறு இருக்கிறதோ இல்லையோ, செல்போன் இருக்கிறது. தகவல் தொடர்புச் சாதனமாக மட்டும் அமையாமல், பொழுபோக்குச் சாதனமாகவும் அமைந்துவிட்டது. இதைக் கற்பித்தலில் பயன்படுத்துவது என்பது ஆசிரியரின் கற்பித்தல் பணியைச் செம்மையாக்கும் ஒன்றாகவே உள்ளது. மாணவர்கள் எளிதில் கற்கும் வழியாகவும் அமைகிறது.

நீங்கள் தயவு செய்து கூகுள் தேடுபொறியில் சென்று, “Free Education Teaching Tools” என்று டைப் செய்யுங்கள். ஏறத்தாழ 100க்கும் அதிகமான கற்பித்தல் கருவிகள் இலவசமாகக் கிடைக்கின்றன. இவை அனைத்தும் ஆசிரியர்களுக்கானது அல்ல. மாணவர்களுக்கானவை. அதாவது ஆசிரியர்கள் தயாரித்து, மாணவர்கள் பயன்படுத்தவேண்டியவை. பல்வேறு கல்வி மென்பொருட்கள் செல்போன் வழியாகக் கற்பிக்க எளிமையாக அமைகின்றன. மாணவர்களுக்கு எளிதில் புரிய வைக்கும் மென்பொருட்கள் இவை. இவற்றைத்தான் நாம் மேலே பார்த்தோம்.

சரி……இவை எல்லாம் எதற்காக? என்ற கேள்வி எழலாம். விஷயத்திற்கு வருகிறேன்.

ஆசிரியர்கள் வகுப்பறையில் எக்காரணம்கொண்டும் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இதனால் அதிக நஷ்டம் அடையப்போகிறவர்கள் மாணவர்கள்தான். இந்த நஷ்டத்தை இரண்டு விதத்தில் பார்க்கலாம். ஒருவர் ஆசிரியர். இன்னொருவர் மாணவர்கள். எப்படி?

1. ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தத் தடை (கல்வித்துறை தவிர, எந்த அரசுத் துறையிலும் செல்போன் தடைசெய்யப்படவில்லை) என்றால், நவீன கல்வி கற்பித்தலுக்கான கருவியை நாம் இழக்கிறோம் என்பதுதான் உண்மை. இதன்வழியாக மாணவர்களின் அறிவு, பரந்துபட்ட சந்தேகத்திற்கான விளக்கம் தடை செய்யப்படுகிறது. கற்பித்தல் கடினமாக்கப் படுகிறது.

2. மற்றொன்று ஆசிரியர்கள் வீட்டில் ஏற்படும் திடீர் துக்க சம்பவங்களை, அல்லது ஆசிரியருக்கு ஏற்படும் அசௌகரியங்களை, அல்லது வகுப்பறையில் மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைச் செல்போன் இல்லாமல் எப்படி சொல்வது? ஆசிரியருக்கு வகுப்பறையில் மட்டும்தான் துக்கம் ஏற்படுகிறது என்பதும், எப்போதும் அழைப்பு வந்து கொண்டே இருக்கிறது என்பதும் உண்மையில்லை. அது கற்பிதம் மட்டுமே. அவர் பாடம் எடுக்கும் எல்லா வேளையிலும் செல்போன் பேசிக்கோண்டே இருக்கிறார் என்பது மிகைக் கற்பனையான ஒன்று.

3. வகுப்பறையில் ஆசிரியர் செல்போன் பயன்படுத்தாவிட்டாலும், அவருக்கு வரும் கல்வித்துறை சார்ந்த அழைப்புகளை என்ன என்று சொல்வது? வகுப்பில் பாடம் நடத்துவதைவிட்டு, தொடர்ந்து செல்போனில் பேசும் அநாகரிக ஆசிரியர்கள் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார். அதற்காக ஒட்டுமொத்தமாக வகுப்பறையில் செல்போன் பயன்படுத்துவதைத் தடை செய்வது சரியல்ல. தவறாகப் பயன்படுத்துபவர்களைத் தலைமை அதிகாரிகளால் அறிவுரைக்கப்படவேண்டும்.

4. உண்மையில் ஆசிரியர்கள் வகுப்பறையில் வரும் அழைப்பை ஏற்பதில்லை. தொடர்ந்து வரும் அழைப்பை, அதன் தீவிரம் கருதியே ஏற்கிறார்கள்… பதில் அளிக்கிறார்கள். அரட்டைக்காக அல்ல. வகுப்பறை என்பது என்ன? மாணவர்கள் எதற்காக அமர்ந்திருக்கிறார்கள்? என் பணி என்ன? என்பதை ஒவ்வொரு ஆசிரியர்களும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். பாடத்தை நடத்தும்போது தனக்கு ஏற்படும் சிறிய சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள, மற்ற ஆசிரியரை இனிமேல் செல்போன் இல்லாமல் எப்படி அழைப்பார்?

5. மாணவர்கள் ஆசிரியரால் மட்டுமே இனிமேல் விளக்கம் பெற இயலும். அறிவியல் பாடத்தையோ, வரலாற்றையோ, கணிதத்தையோ இனிமேல் செல்போன்வழியாக அறிந்துகொள்ள இயலாது. அதாவது வழக்கமான கற்பித்தல் கருவியான சார்ட், மாடல்ஸ், மின் அட்டை என்கிற மொன்னையான, அதரப் பழசான (கிட்டத்தட்ட 25 வருடமாகப் பின்பற்றப்படும் மரபான கற்பித்தல் கருவிகள் இவை) கற்றல் கருவிகளைத்தான் மாணவர்கள் பார்க்கவேண்டும். அவனால் செல்போன் வழியாக கூகுள் மேப் வழியாக, ஒரு மாவட்டத்தை, ஒரு நகரத்தை, ஒரு ஊரை, ஒரு ஆற்றை, ஏன் தாஜ்மஹாலை 3 டியில் பார்க்கமுடியாது. தாவரத்தின் வளர்ச்சியை செல்போன் மூலமாக யு-டியுப்பில் பார்க்க இயலாது. ஒரு மதிப்பெண் பகுதியைத் தன் குரலால் பதிவு செய்து, செல்போன்வழியாகக் கேட்க (கேட்டல்திறன்) முடியாது. ஆசிரியரால் பாடம் சம்பந்தமான உரையாடலை மாணவர்களுக்குச் செல்போன் வழியாகக் கேட்கவைக்கமுடியாது. இப்படி முடியாதுகள் அடுக்கிக்கொண்டே போகலாம்.

6. ஓர் ஆசிரியர் வகுப்பறையில் செல்போனைக் கற்பித்தலுக்காகப் பயன்படுத்துவது தார்மீக உரிமை. அதை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக்கூடாது என மறுப்பது என்பது கண்மூடித்தனமானது. ஓர் ஆசிரியரின் தார்மீக உரிமையை, மாணவர்களுக்காகப் பயன்படும் உரிமையை மறுக்கலாமா?

7. அரசுப் பள்ளிகளில் கனெக்டிங் கிளாஸ், ஸ்மார்ட் க்ளாஸ் ஆகியவை நடைமுறையாக்கப்பட்டு வருகிறது. ஒரு செல்போன் வழியாக ஸ்மார்ட் க்ளாஸ் நடத்தியாகவேண்டிய சூழலில், செல்போனை வகுப்பறையில் பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவு உள்ளபோது, ஸ்மார்ட் க்ளாஸ் என்ன கதியாகும்?

ஒரு கோரிக்கை

வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தினால் கல்விக் கற்பித்தலில் சங்கடம் ஏற்படும் என்பதும், கற்பித்தல் முழுமையாகாது என்பதும், கற்றல்-கற்பித்தலின் தீவிரம் தடைபடும் என்பதும் பள்ளிக்கல்வித் துறையின் எண்ணம். மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்பது நிதர்சனம். ஆனால், ஆசிரியர்கள் யாரும் இதை மறுக்கவில்லை.

எக்காரணம்கொண்டும் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்பதற்குப் பதிலாக, “கற்பித்தல் பாதிக்காதவண்ணம் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தலாம்” என்று உத்தரவைப் பிறப்பித்து இருக்கலாம். எக்காரணம் கொண்டும் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவு வந்திருக்காவிட்டால், இந்தக்கட்டுரை எழுதப்பட்டிருக்கப்படாது. செல்போன் வழியாக எவ்வளவு விதமான கற்பித்தல் நிகழ்கிறது என்பதைத் தெரிந்திருக்க வாய்ப்பும் ஏற்பட்டிருக்காது.

தயவு செய்து, கற்பித்தல்-கற்றலுக்காகச் செல்போனை அனுமதியுங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

2 days ago

மற்றவை

10 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

5 months ago

மேலும்