தகிக்கும் வெயிலில் வயலில் நிற்கிறார் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான ஆறுபாதி கல்யாணம். எப்போதும் விவசாயிகள் பிரச்சினையில் களத்தில் முன்வரிசையில் நிற்கும் போராளி. ஒட்டுமொத்த தேசத்தின் விவசாயிகளுக்காகவும் சிந்திப்பவர்; பேசுபவர். இந்திய விவசாயிகளின் பின்னணியில் நம்முடைய அரசியலைப் பேசலானார்.
குறைந்தது நாட்டின் சரிபாதியினர் விவசாயம் சார்ந்திருப் பவர்கள். ஆனால், ஏன் விவசாய சமூகத்தால் அரசியலில் ஒரு சக்தியாக உருவாக முடியவில்லை?
அரசியல்வாதிகளின் பிரித்தாளும் திட்டம்தான் காரணம். முடிந்தால் கட்சியைச் சொல்லிப் பிரிப்பார்கள். இல்லா விட்டால், இருக்கவே இருக்கிறது சாதி, மதம், இனம்.
எந்தத் தொழில்காரர்களைவிடவும் விவசாயிகளிடத்தில்தான் இனப் பாகுபாடுகள் அதிகம் இருக்கின்றன. என்ன காரணம்? விடுபட வழியே இல்லையா?
விவசாயிகள் எளிய மனிதர்கள் என்பதும் அதனாலேயே அவர்கள் எளிய இலக்குகளாக மாறிவிடுகிறார்கள் என்பதும் தான் காரணம். ஒவ்வொரு விவசாயியின் கையிலும் நிலம் இருக்கும் நாளில் இனப் பாகுபாடுகள் தானே காணாமல் போகும்.
நாடு முதன்முதலில் வளர்ச்சியை முன்னிறுத்தி ஒரு தேர் தலைச் சந்தித்திருக்கும் நிலையில், விவசாயிகள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
அதாவது, 1951-ல் இந்தியாவின் மக்கள்தொகை 33 கோடி. அன்றைய உணவு உற்பத்தி 500 லட்சம் டன். இன்றைக்கு மக்கள்தொகை 120 கோடி. உணவு உற்பத்தி 2,630 லட்சம் டன். கிட்டத்தட்ட ஐந்து மடங்கு உணவு உற்பத்தியை அதிகரித்துக்கொடுத்திருக்கிறான் இந்நாட்டு விவசாயி. ஆனால், இன்றைக்கு விவசாயத்தின் நிலையும் விவசாயிகளின் நிலையும் இந்நாட்டில் என்ன? ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்கிறான். அப்படியென்றால், இது ஒரு தேசிய அவமானம் இல்லையா? ஒவ்வொரு இந்தியரும் வெட்கப்பட வேண்டிய சமாச்சாரம் இல்லையா? உணவுப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றுகிறீர்களே, விவசாயியையும் விவசாயத்தையும் பாதுகாக்க சட்டம் வேண்டாமா?
வளர்ச்சி என்கிற வார்த்தைக்கு இன்றைக்கு ஏன் மக்களிடத்தில் இவ்வளவு மவுசு? அதற்கான ஆணிவேர் விவசாயத்தின் தோல்வியில் இருக்கிறது. நகரங்களில் வளர்ச்சி என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தமோ, எனக்குத் தெரியாது. கிராமங்களில் எனக்குத் தெரிந்து ஒரே அர்த்தம்தான்... பிழைப்பு. அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்கிற கேள்விக்கான துருப்புச்சீட்டாகத்தான் வளர்ச்சி என்கிற வார்த்தையை விவசாயிகள் பார்க்கிறார்கள். ஆனால், நாட்டின் அரசியல் கட்சிகள் விவசாயிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக விளிம்புநிலையை நோக்கித் தள்ளிக்கொண்டிருக்கின்றன என்பதற்கு உதாரணம் இந்தத் தேர்தலையொட்டி வெளியிடப் பட்டிருக்கும் தேர்தல் அறிக்கைகள். விவசாயத்தை மீட்டெடுக் கும் எந்தத் திட்டமும் எந்தக் கட்சியிடமும் இல்லையே?
அரசியல் கட்சிகளிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறீர்கள்?
விவசாயத்தை அணுகும் பார்வையிலேயே மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இதுவரையிலான விவசாயக் கொள்கைகள் விவசாய உற்பத்தியையே மைய மாகக் கொண்டிருந்தன. இனி அவற்றை விவசாயிகள் நலனை மையமாகக் கொண்டவையாக மாற்ற வேண்டும்.
எப்படி?
இந்திய வேளாண் துறையை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையாக உருமாற்ற வேண்டும். நாட்டின் நிதிநிலை அறிக்கையில் 20% இத்துறைக்கென ஒதுக்கப்பட வேண்டும். அந்தத் தொகை விவசாய மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் விவசாயிகள் நலத்திட்டங்களுக்கும் சரிபாதியாய்ப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். விவசாயத்துக்கென்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யப்பட வேண்டும். இந்தியாவின் அத்தனை நதிகளைகளையும் தேசியமயமாக்க வேண்டும். ஒவ்வொரு நதியின் தொன்மையான பாசன உரிமைகளையும் பயன்பாட்டையும் உறுதிசெய்து, உபரிநீரை மாநிலங்களிடையே பகிர்ந்துகொள்ள வகைசெய்யப்பட வேண்டும். அணைகள் பாதுகாப்பு மற்றும் நிர்வாகம் ராணுவத்தின் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். தேசிய விவசாயிகள் ஆணையப் பரிந்துரைப்படி, எல்லா விவசாய விளைபொருட்களுக்கும் மொத்த உற்பத்திச் செலவுக்கு மேல் குறைந்தபட்சம் 50% கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். சிறப்பு வேளாண் பொருளாதார மண்டலங்களை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் விளை விக்கும் விளைபொருட்களை அங்கேயே மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றிடும் வகையில், வேளாண் தொழிற் சாலைகள் அமைக்கப்பட வேண்டும். விவசாயிகள் அவற்றில் பங்குதாரர்களாக்கப்பட வேண்டும். இப்படி நிறைய தேவைகள், எதிர்பார்ப்புகள் எங்களுக்கு இருக்கின்றன. முக்கியமாக விவசாயம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அரசியல் கட்சிகள் தீர யோசித்து ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும். உதாரணமாக, நதிநீர் இணைப்புத் திட்டத்தின் உண்மையான நிலை எங்களுக்கு இன்றுவரை புரியவில்லை.
உங்கள் தேவைகளில் முதலாவதும் உடனடியானதும் எது?
நதிநீர் இணைப்பையே சொல்லலாம். இந்திய நதிநீர் இணைப்புத் திட்டம் என்பது 14,900 கி.மீ. நீள இணைப்புத் திட்டம். 37 ஆற்று இணைப்புகள், 3,000 அணைகள் இத்திட்டத்தில் உருவாக்கப்படும் என்று சொல்கிறார்கள். அப்படி நடந்தால், 350 லட்சம் ஹெக்டேர் சாகுபடிக்கு அது உதவும்; 34 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்யலாம் என்கிறார்கள். இந்தியாவின் சாகுபடிப் பரப்பு 1,410 லட்சம் ஹெக்டேர். இதில் 40% பரப்புக்குத்தான் நீர்ச் சாகுபடி வசதி இருக்கிறது. மீதி எல்லாம் மானாவாரி. இத்தகைய சூழலில், நதிநீர் இணைப்பு நடந்தால் எவ்வளவு பெரிய மாற்றம் வரும் பாருங்கள். பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே தீவிரமாகப் பேசப்பட்ட விஷயம் இது. வாஜ்பாய் காலத்தில் ரொம்பவே பேசினார்கள். அப்புறம் ராகுல் காந்தி இது வேண்டாம் என்று சொன்னதும் மன்மோகன் சிங் அரசாங்கத்தில் இந்தப் பேச்சையே கிடப்பில் போட்டுவிட்டார்கள். இப்போது மீண்டும் பேச ஆரம்பிக்கிறார்கள். உள்ளபடி நிலை என்ன? எங்களுக்குத் தெரிய வேண்டும்.
ஆனால், நதிநீர் இணைப்புத் திட்டம் சுற்றுச்சூழலுக்கு மாபெரும் கேடாகும் என்று சொல்லப்படுகிறதே? மேலும், இதற்காக லட்சக் கணக்கான ஹெக்டேர் நிலங்களைக் கையகப் படுத்துவதுடன் பல லட்சம் விவசாயிகளை அவர்கள் வாழிடங் களிலிருந்து அகற்ற வேண்டும். அவர்களும் விவசாயிகள்தான் இல்லையா?
இத்திட்டத்துக்காக 7.65 லட்சம் ஹெக்டேர் நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும்; 15 லட்சம் மக்களை அந்தப் பகுதிகளிலிருந்து அகற்ற வேண்டும் என்கிறார்கள். சுதந்திரம் அடைந்த காலகட்டத்திலிருந்து இதுவரை ஆறு கோடி மக்கள் இந்நாட்டில் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். கடந்த பத்து பதினைந்தாண்டுகளில் மட்டும் பெருநிறுவனங்களின் திட்டங்களுக்காக அரசு கையகப்படுத்தியிருக்கும் நிலம் 7.3 லட்சம் ஹெக்டேர். ஆகையால், இந்தக் காரணங்களெல்லாம் சரியானவை அல்ல. உண்மையாகவே இத்திட்டம் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் என்று உறுதிசெய்யப்பட்டால் அதை நாம் கைவிடலாம். ஆனால், அப்படி யாரும் உறுதிசெய்யவில்லையே? ஒருவேளை சூழலைப் பாதிக்கும் என்றால்கூட, இத்தனை பெரிய அளவில் இல்லாமல், சூழலுக்கு உகந்த வகையில் நிச்சயம் சிறுசிறு அளவிலேனும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை நாம் நிறைவேற்ற முடியும். நாட்டின் எல்லா நதிகளையும் சேர்த்தால், நம்முடைய நீராதாரம் 65,450 டிஎம்சி. இதில் 17,500 டிஎம்சி தண்ணீரைத்தான் பயன்படுத்துகிறோம். தண்ணீர் விற்கப்படும் ஒரு நாட்டில், 70 கோடி மக்கள் விவசாயத்தைச் சார்ந்திருக்கும் ஒரு நாட்டில் இதை யோசிப்பது அவசியம் இல்லையா? இதேபோலத்தான், நதிகளைத் தேசியமயமாக்குவதும். நதிகள் தேசியமயமாக்கப்படவில்லை என்றால், இந்தியா சிதையும்.
மாநிலங்களின் உரிமைகளுக்கு உட்பட்டு நதிநீர்ப் பங்கீட்டை நியாயமாகச் செய்துகொள்ள முடியாது என்கிறீர்களா?
நிச்சயம் முடியாது. மாநிலப் பிரிவினையின்போது, முல்லைப்பெரியாறு அணை இருந்த பகுதி கேரளத்தோடு சேர்க்கப்பட்டபோது இங்கு எதிர்த்தவர்களிடம், ‘கேரளமும் இந்தியாதான்' என்று கடிந்துகொண்டார் காமராஜர். இன்றைக்கு அப்படிப்பட்ட தலைவரை இந்தியாவில் எங்காவது காட்ட முடியுமா?
சரி, உங்கள் துறை சார்ந்த, மிக அடிப்படையான ஒரு பெரும் பிரச்சினையைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறேன். விவசாயத்தின் வீழ்ச்சிக்கு அசுரத்தனமான வேளாண் முறையும் ஒரு காரணம் இல்லையா? ரசாயன உரங்கள் பூச்சிக்கொல்லிகள் என்று நிலத்தையும் அழித்து, தானும் அழிந்து, உணவையும் நஞ்சாக்கி… ஏன் இயற்கை விவசாயத்துக்கு நாம் திரும்ப முடியாதா?
எந்த விவசாயிக்கு டிஏபியும் யூரியாவும் தெரியும்? அரசாங்கம் கொடுத்துக் கெடுத்ததுதான் எல்லாம். மனிதனைப் போதைக்கு அடிமையாக்கிவிட்டு அப்புறம் நியாயம் பேசுவதில் எதாவது தர்மம் இருக்கிறதா? அதற்காக விவசாயிகளின் தரப்பை முழுமையாக நியாயப்படுத்தவில்லை. இது ஒரு சிக்கலான பிரச்சினை. இப்படி அல்லது அப்படி என்று முழுமையாக சாய்ந்து பேச முடியாது. இயற்கை வேளாண் முறைதான் ஒவ்வொரு விவசாயியின் கனவும். ஆனால் சூழல் எந்த அளவுக்குச் சாத்தியமாக இருக்கிறது? அரசாங்கம் எந்த அளவுக்கு உதவியாக இருக்கிறது? ஒரு விவசாயி ரசாயனப் பூச்சிக்கொல்லியைக் கைவிட வேண்டும் என்றால்கூட, உடனே சாத்தியம். ரசாயன உரத்தை அவ்வளவு சீக்கிரம் விட்டுவிட முடியாது. ஏனென்றால், மண் அவ்வளவு தளர்ந்திருக்கிறது. ஆகையால், படிப்படியாக இந்த மாற்றம் நடக்க வேண்டும். எல்லாமே அரசாங்கத்தின் கையில்தான் இருக்கிறது. அன்றைக்கு நேரு சொன்னார்: “விவசாயம் காத்திருக்க முடியாது” என்று. நிலைமை இன்றைக்கு இன்னும் முற்றிவிட்டது. விவசாயிகள் இனியும் காத்திருக்க முடியாது. அரசாங்கம் முழுவீச்சில் விவசாயத்தைக் கையில் எடுக்க வேண்டிய நேரம் இது!
- சமஸ், தொடர்புக்கு: samas@kslmedia.in
முக்கிய செய்திகள்
மற்றவை
2 days ago
மற்றவை
2 days ago
மற்றவை
5 days ago
மற்றவை
6 days ago
மற்றவை
17 days ago
மற்றவை
22 days ago
மற்றவை
29 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago