கடந்த ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி அன்று பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரப்ஜித் சிங் கைதிகளால் தாக்கப்பட்டு, மே 2-ம் தேதி உயிரிழந்தார். 'சரப்ஜித் சிங் சாமானியர்' என்று கடைசி வரை உறுதியாகச் சொன்னது இந்திய அரசு. ஆனால், அந்த 'சாமானியர்' கொல்லப்பட்ட பிறகு, முப்படைத் துப்பாக்கிகள் முழங்கின. இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் பல்வேறு நாடுகளுக் காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள், இப்படி நூற்றுக் கணக்கான 'சாமானிய' சரப்ஜித் சிங்குகள்.
யார் இவர்கள்? இவர்களை இயக்குவது யார்? இவர்களின் இன்னோர் உலகம் எப்படி இருக்கும்? வாருங்கள்... உளவாளிகள் உலகின் உள்ளே செல்வோம்!
உளவு அமைப்பு உருவானது எப்படி?
இந்திய உளவுத் துறையை (இன்டெலிஜென்ஸ் பீரோ) 1933-ல் உருவாக்கியது பிரிட்டிஷ் அரசாங்கம். 1968-ல் உளவுத் துறையின் ஓர் அங்கமாக வெளிநாட்டு விவகாரங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் ஆய்வுப் பிரிவான ‘ரா' (ரிசர்ச் அண்ட் அனலிஸிஸ் விங்) தொடங்கப்பட்டது. இரண்டு கோடி ரூபாய் பட்ஜெட்டில் 250 பணியாளர்களுடன் தொடங்கப்பட்ட ரா-வின் இன்றைய ஆண்டு பட்ஜெட் சுமார் 900 கோடி ரூபாய். அதிகாரபூர்வமாக 25,000 பேர் வேலைபார்க்கிறார்கள். இவர்களில் 3,500 பேர் கள உளவாளிகள். அதிகாரபூர்வமாக அல்லாமல் எத்தனை பேர் வேலை பார்க்கிறார்கள் என்பது நம்முடைய பிரதமருக்கு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம்?
ரா-வின் பணி என்ன?
சில பல வெளிநாட்டு அரசுகளின் கொள்கைகளையும் கோப்பு களையும் கண்காணிப்பது. அந்நாடுகளின் அமைச்சரவை எடுக்கும் முடிவுகளையும் கண்காணிப்பது. இந்தியாவின் நலன் களுக்கு ஏற்ப அரசின் வியூகங்களுக்குக் களம் அமைப்பது.
பஞ்ச பாண்டவர்கள்
ராவின் முக்கியமான அதிகாரிகள், அதன் ஐந்து இணை இயக்குநர்கள். பாகிஸ்தானுக்கு ஒருவர்; சீனா மற்றும் தெற்கு ஆசியாவுக்கு ஒருவர்; மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவுக்கு ஒருவர்; இதர நாடுகளுக்கு ஒருவர்; இவர்களுக்குக் கீழேதான் ஏஜென்ட்டுகள், டபுள் ஏஜென்ட்டுகள், டிரிபிள் ஏஜென்ட்டுகள், புரோக்கர்கள் என இன்ன பிற ஊழியர்கள்.
ரா-வில் நீங்களும் சேரலாம்
‘ரா' அதிகாரபூர்வமாக அதிகாரிகளையும் பணியாளர்களை யும் தேர்வுசெய்வதாகச் சொல்கிறது. தனது இணையதளத்திலும் வேலைவாய்ப்பு விவரங்களை வெளியிடுகிறது. எல்லாமே முறைப்படி நடப்பதாகத்தான் தோன்றும். ஆனால், நாம் அப்படிப் புரிந்துகொண்டால் அதற்குப் பொறுப்பு ரா அல்ல. ரா வெளியுலகுக்குக் காட்டும் முகம் வேறு; அதன் உண்மையான முகம் வேறு.
இது ‘ரா' பயிற்சி
ராணுவப் பயிற்சி என்பார்களே... ரா-வின் பயிற்சிக்கு முன்பாக அதெல்லாம் ஒன்றுமே இல்லை. முதல் கட்டப் பயிற்சி ‘பெப் டாக்ஸ்' பயிற்சி. உலகில் இருக்கும் அத்தனை உளவு அமைப்புகளின் மொத்தக் குறியீட்டுச் சொற்களின் அகராதி இது. அடுத்து, உளவு அமைப்புகளின் பிரத்யேக பாஷைகள் மற்றும் வாக்கி டாக்கி, கணினி உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களின் அடிப்படைத் தொழில்நுட்பங்கள், வயர்லஸ் வாய்ஸை வழிமறித்துக் கேட்டல், சங்கேத பாஷைகளின் முடிச்சுகளை அவிழ்ப்பது, எண், எழுத்து, வரைபடங்கள், ஓவியங்கள், கிறுக்கல்கள் என அத்தனையிலும் ஒளிந்திருக்கும் ரகசியங்களைக் கண்டுபிடிப்பது கற்றுத்தரப்படும்.
அடுத்து, களப் பயிற்சி. ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை பயிற்சிக் காலம். இந்தக் காலகட்டத்தில் எந்தப் பணி வேண்டுமானாலும் பயிற்சியாகத் தரப்படும். தீவிரவாதக் கும்பலுக்குள் ஊடுருவவைத்து கொஞ்சகாலம் தீவிரவாதியாகவே மாற்றிவிடுவார்கள். அல்லது பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தின் சி.இ.ஓ. ஆக்குவார்கள். இல்லை, பத்திரிகை அலுவலகத்தில் கழிப்பறையைச் சுத்தம் செய்ய வைப்பார்கள். ஆனால், வேலை முடிந்தபின்பு கூப்பிட்ட குரலுக்குச் சமர்த்தாக ஓடிவந்துவிட வேண்டும்.
அடியும் வாங்க வேண்டும்
அடுத்து, சிறப்புப் பயிற்சி ஒன்று உண்டு. நூறில் ஒருவர் தேறினாலே பெரிய விஷயம். உடல் மற்றும் மனதைக் கட்டுப்படுத்தும் பயிற்சி. முன்னாள் அதிகாரி பகிர்ந்துகொண்ட தகவல் இது.
அடிப்படைப் பயிற்சி உள்ளிட்ட சில பயிற்சிகளை முடித்த பின்பு உளவாளிகளுக்கு வேலைகளைக் கொடுத்து அனுப்பிவிடுவார்கள். ஆனால், மேற்கண்ட பயிற்சிகளின்போது நுட்பமாகக் கவனித்து மிகச் சிலரை மட்டும் சிறப்புப் பயிற்சிக்குத் தேர்வு செய்வார்கள். இவர்கள் பயிற்சியில் தேறிவிட்டார்கள் என்றால், ராஜ மரியாதைதான். முதலில் உடலை நன்றாகத் தேற்றுவார்கள். பூனை நடை நடப்பது, புலிப்பாய்ச்சல் பாய்வது, விமானத்தில் இருந்து குதிப்பது, கயிறே இல்லாமல் கை, கால் விரல் நகங்களைக் கொண்டே உயரமான இடங்களில் ஏறுவது எனப் பயிற்சி அளிக்கப்படும். இதுவரை எல்லாம் சரிதான். அடுத்த பயிற்சிதான் அசுரப் பயிற்சி... அதாவது, அடி வா(தா)ங்க வேண்டும். மரண அடி விழும். நகத்தைப் பிடுங்குவது, பிறப்புறுப்பிலும் பின்பக்கத்திலும் மின்சாரம் பாய்ச்சுவது, உச்சபட்ச வெப்பம், பனியில் வாட்டுவது, காற்று இல்லாத அறையில் அடைப்பது, ராட்சத மின்விசிறியைச் சுழல விட்டு ஆளைக் காற்றில் பந்தாட வைப்பது, தண்ணீருக்குள் முக்கி ‘தம்' கட்டச் செய்வது என ஏகப்பட்ட சித்திரவதைகள் இதில் அடக்கம். இந்தப் பயிற்சி மூன்று நாட்கள் ஒரு செஷன். மூன்று நாட்களும் உணவு, தண்ணீர் கிடையாது. யோகா, மூச்சுப் பயிற்சி மூலம் உடலைக் குளிரவைத்து நீர் சக்தியைச் சேமித்துக்கொள்ள வேண்டும். ஆனால், உயிருக்கு உத்தரவாதம் உண்டு. இப்படியாகச் சுமார் நான்கு அல்லது ஐந்து சித்திரவதைக் கட்டங்களை இந்த நிலை உளவாளிகள் வெற்றிகரமாகக் கடக்க வேண்டும். இப்போது பயிற்சி முடிந்ததா என்றால், அதுதான் இல்லை.
இதெல்லாம் தேவைப்படாத - கொடுக்கிற இலக்கைத் தொடர்ந்து கண்காணித்து தகவல் மட்டும் தரக்கூடிய உளவாளிகளுக்கும் பயிற்சி உண்டு. ஆனால், இது வேறு மாதிரி... சராசரி மனிதனின் ஆசாபாசங்களைத் தூண்டும் ‘வலை’கள் விரிக்கப்படும். மது, மாது, இன்னபிற போதைகளுக்கு ‘உளவாளி’விழுகிறாரா என்றும் சோதிக்கப்படும். பலவீனம் காட்டிவிட்டால் பட்டியலிலிருந்து கழித்துக்கட்டிவிடுவார்கள்.
இன்னும் முடியவில்லை பயிற்சி
‘அவ்வளவுதான் பயிற்சி; போய் வேலையைப் பாருங்கள்' என்று வேலையைக் கொடுத்து அனுப்பிவிடுவார்கள். உளவாளியும் உற்சாகமாக வேலையைப் பார்க்கக் கிளம்பிவிடுவார். ஆனால், அதுவுமே பயிற்சி என்பது அந்த உளவாளிக்கும் தெரியாது. பணியில் உளவாளியின் நேர்மையை, மனோபலத்தைப் பரிசோதிக்கும் இந்தப் பயிற்சி.
திடீரெனக் கடும் நெருக்கடியை உருவாக்கி, உளவாளி யைக் கற்பனைக்கு எட்டாத பெரும் விலை பேசுவார்கள். ஆனால், மசியக் கூடாது. அப்போதும் விட மாட்டார்கள். குடும்ப உறுப்பினர்களைப் பணயக் கைதியாக்கி விலை பேசுவார்கள். உளவாளி எதுவும் செய்ய முடியாது. ஒரே வழி சரணடைவதுதான். அதாவது தோற்பது. ஏனெனில், மேலிடத்திலும் உதவிகோர முடியாது. அது ஒருவழிப்பாதை. மேலிடத்திலிருந்து அவர்களாகப் பேசினால்தான் உண்டு. ஆனால், இங்கும் ஜெயிக்க வேண்டும். நிறைய உளவாளி களுக்குக் கடைசி வரை இது பயிற்சி என்றுகூடச் சொல்லப்படாது. இப்படித் தேறும் உளவாளிகள் இப்போது நம் வசம் சுமார் 30 பேர் இருப்பார்கள்.
ஆனால், இவர்களுக்குத்தான் உலக அளவில் கடும் கிராக்கி. இவர்களை அடையாளம் காண முடியாவிட்டாலும், அடையாளம் கண்டுபிடித்து நிஜமாகவே விலை பேசுவார் கள்; பயிற்சியில் நடந்த அத்தனையையும் நிஜத்திலும் நிகழ்த்துவார்கள். இதில் விலைபோனவர்களும் உண்டு. விலைபோகாத காரணத்தால் எதிரி நாடுகளால் கொல்லப்பட்ட வர்களும் உண்டு. இவ்வளவையும் தாண்டிதான் ‘சாமானிய' சரப்ஜித் சிங்குகள் உருவாகிறார்கள்.
- தொடர்புக்கு: sanjeevikumar.tl@kslmedia.in;
முக்கிய செய்திகள்
மற்றவை
1 day ago
மற்றவை
15 days ago
மற்றவை
15 days ago
மற்றவை
18 days ago
மற்றவை
19 days ago
மற்றவை
30 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago