‘‘நம்முடைய மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அப்பா, அம்மா, பாட்டி ஆகியோர் அடிக்கடி கூறுவார்கள். இறுதிப்போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன் என் பெற்றோர், ‘போட்டியில் வெற்றி பெற்றால் கிடைக்கும் பரிசை இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சிக்கு கொடுக்கலாமா?’ என்று கேட்டார்கள்.
அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற கிடைத்த சந்தர்ப்பமாகத்தான் இதைக் கருதுகிறேன். போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மட்டுமின்றி இங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கும் சிறிது நிதியை ஒதுக்கியுள்ளோம்” என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஜெஸ்ஸிகா.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியான இவர், விஜய் தொலைக்காட்சியின் ‘சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 4’ போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இதற்காக தனக்கு பரிசாகக் கிடைத்த 1 கிலோ தங்கத்தின் மூலம் கிடைக்கும் ரூ.30 லட்சத்தை இலங்கையில் வாழும் ஆதரவற்ற தமிழ்க் குழந்தைகளின் வளர்ச்சிக்கு வழங்கியுள்ளார்.
இசையின் மீது உங்களுக்கு ஆர்வம் வரக் காரணம் என்ன?
இலங்கையில் யாழ்ப்பாணம் அருகில் உள்ள பருத்தித்துறைதான் எங்களின் சொந்த ஊர். அப்பா, அம்மா, பாட்டி எல்லோரும் அங்கே வசித்தவர்கள்தான். அப்பாவுக்கு கனடாவில் வேலை கிடைத்ததால் சிறுவயது முதல் நான் கனடாவில்தான் இருக்கிறேன்.
அங்கே டொரண் டோவில்தான் படிக்கிறேன். ஒன்றிரண்டு முறை எங்கள் சொந்த ஊருக்கு போய் வந்திருக்கிறேன்.
என் அப்பா இசைக் கச்சேரிகளில் கலந்து கொண்டு பாடுவார். அந்த ஆர்வம்தான் எனக்குள் ளும் இசையை விதைத்தது. பள்ளிக்கு போகும்போதே பாட்டு வகுப்புக்கும் போக வேண் டும் என்று விரும்பினேன். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே கடந்த ஒரு ஆண்டு முழுவதும் சென்னையில் இருந்துள்ளேன்.
என் அம்மாவும் வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு என்னுடன் இருந்தார். அப்பா, அடிக்கடி வந்து என்னை பார்த்துவிட்டு போனார். இப்படி ஒரு பெற்றோர் கிடைத்ததும் என் வெற்றிக்கு முக்கிய காரணம்.
‘சூப்பர் சிங்கர்ஸ்’ இறுதிப்போட்டியில் ‘விடைகொடு எங்கள் நாடே’ பாடலை நீங்களே தேர்வு செய்து பாடினீர்களா?
இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் இடம்பெற்ற பாடல் அது என்பது இதை நான் தேர்வு செய்ததற்கு முதல் காரணம். இரண்டாவது காரணம், நான் இறுதிப் போட்டியில் இந்தப் பாடலை பாடவேண்டும் என்று எங்கள் நாட்டு மக்கள் பலரும் குறுஞ்செய்தி மூலமாக கேட்டனர்.
இப்படி எங்களது உணர்வுகள் மொத்தமும் ஒன்று சேர்ந்ததால் இந்தப் பாடலை தேர்வு செய்தேன்.
முதல் பரிசு கிடைக்காததால் வருத்தப் படவில்லையா?
நிச்சயமாக இல்லை. கனடாவில் இருந்து வந்து இறுதிப்போட்டி வரைக்கும் சென்றதையே பெரிய வெற்றியாக நினைக்கிறேன். அப்பா, அம்மா இரு வருமே ஒரு கட்டத்தில் ஊருக்கு போகலாம் என்று முடிவெடுத்தார் கள்.
ஆனால் என் ஆசைக்காக மட்டுமே அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டனர். இந்த வெற்றி அவர்களுக்கும் மகிழ்ச்சி யளித்துள்ளது. இது எனக்கு கடவுள் தந்த பரிசு.
இந்த வெற்றியால் திரைப்பட பின்னணிப் பாடகியாகும் ஆசை பிறந்திருக்குமே?
கண்டிப்பாக. அதே நேரத்தில் படிப்பையும் விட்டுக் கொடுக்க மாட்டேன். இரண்டையும் சரி நிகராக்கி பயணிக்க வேண்டும் என்பது என் ஆசை. இந்தப் போட்டியில் கலந்து கொண்டதால் எஸ்.பி.பி அங்கிள், ஜானகி அம்மா, சித்ராம்மா, மனோ அங்கிள் இப்படி பல பாடகர்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது.
என்னுடன் போட்டியில் கலந்துகொண்ட ஸ்ரீஷா உள்ளிட்ட தோழிகளை விட்டுப் பிரியப் போகிறேன் என்பதுதான் வருத்தமாக உள்ளது. இங்கே பாட்டுப் பாட திரும்பி வருவதன் மூலம்தான் இதையெல்லாம் மீண்டும் பெற முடியும். அதற்காகவே நிறைய பாடல்களைப் பாட வேண்டும்.
யாருடைய இசையில் பாட ஆசை?
இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், டி.இமான் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். யாரோட இசையில் முதல் பாட்டு அமையப்போகிறதோ என்கிற எதிர்பார்ப்பும் கூடிக்கொண்டே போகிறது.
தமிழ் பேச கற்றுக் கொண்டேன்
சூப்பர் சிங்கர் போட்டியில் முதல் பரிசை வென்ற கையோடு பெங்களூருவுக்கு பறந்துவிட்டார் ஒன்பது வயதான ஸ்பூர்த்தி. தொலைபேசியில் அவரைத் தொடர்புகொண்டபோது உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.
‘‘ ஒரு ஆண்டுக்கு முன் எனக்கு தமிழில் பேசத் தெரியாது. இந்த போட்டிக்காக தமிழ் கற்றுக்கொண்டதால், இன்று தடையில்லாமல் தமிழ் பேசுகிறேன். சூப்பர் சிங்கர் போட்டியால் பல நாட்கள் பள்ளிக்கு போக முடியவில்லை. இந்த நேரத்தில் என் பள்ளித் தோழிகள்தான் தேர்வுகளுக்கான பாடங்களை சொல்லிக்கொடுத்தார்கள். அவர்களை இந்த நேரத்தில் நினைத்துப்பார்க்கிறேன்.
முதல் மூன்று இடத்தில் ஒரு இடத்தை பிடிப்பேன் என்ற நம்பிக்கையோடு களத்தில் இறங்கிய எனக்கு முதல் பரிசாக வீடு கிடைத்திருக்கிறது. கடவுளை நேசிப்பதைப்போல இசையை நேசித்ததால் கிடைத்த பரிசு இது’’ என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ஸ்பூர்த்தி
தமிழ் பாடகர்கள் ஒதுக்கப்படுகிறார்களா?
‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கலைஞர்களுக்கு வேண்டுமென்றே பரிசு தராமல் ஒதுக்குவதாகவும் பிற மாநிலத்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தலைமை பொறுப்பாளர் பிரதீப்பிடம் கேட்டோம்.
‘‘இசைக்கு மதம், மொழி எதுவும் கிடையாது. தமிழில் சிறப்பான 500 பாடல்களை தேர்வு செய்து பார்த்தால் அந்தப்பாடல்களில் நிச்சயம் எஸ்.பி.பி, சுசிலா உள்ளிட்ட பாடகர்களின் பாடல்கள் இல்லாமல் இருக்காது. இவர்கள் வேற்றுமொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள்தான்.
தமிழை தாய்மொழியாகக் கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான், சங்கர்மகாதேவன் உள்ளிட்ட கலைஞர்கள் சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கிறார்கள். இதெல்லாம் இசைக்கு எல்லையே இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.
நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களின் தமிழ் உச்சரிப்பு, வார்த்தைகளை வெளிப்படுத்தும் விதம் வரைக்கும் எல்லாவற்றையும் வைத்துதான் அவர்கள் போட்டியில் அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்கிறார்கள். தமிழ் மொழியே தெரியாமல் வந்து, நிகழ்ச்சியின் இறுதியில் அழகாக தமிழ் பேசக் கற்றுப்போகிறார்கள். அது நமக்கு பெருமையான ஒன்றுதானே” என்றார் அவர்.
முக்கிய செய்திகள்
மற்றவை
8 days ago
மற்றவை
8 days ago
மற்றவை
11 days ago
மற்றவை
12 days ago
மற்றவை
23 days ago
மற்றவை
28 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago