ஈவ் டீசிங்கில் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?- மாணவிகளுக்கு புதுச்சேரி எஸ்.பி ஆலோசனை

‘ஈவ் டீசிங் நடைபெற்றால் உடனடியாக பெற்றோர் அல்லது ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும்’ என்று பள்ளி மாணவிகளுக்கு புதுச்சேரி எஸ்பி ரக்சனா சிங் ஆலோசனை வழங்கினார்.

புதுச்சேரியில் உள்ள கதிர்காமம் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளியில், பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறையை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பள்ளி முதல்வர் ரகோத்தமன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக எஸ்பி ரக்சனா சிங் பங்கேற்றார். ஈவ் டீசிங், செயின் பறிப்பு, ஆசிட் வீச்சு போன்ற பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் இருந்து பாதுகாத்து கொள்வது தொடர்பாக மாணவிகளுக்கு தற்காப்பு கலை உத்திகளை அவர் எடுத்துரைத்தார்.

பின்னர், எஸ்பி ரக்சனா சிங் பேசும்போது, “பெண்களை ஈவ் டீசிங் செய்வது அதிகளவில் நடைபெறுகிறது. நானும் ஈவ் டீசிங்கை சந்தித்துள்ளேன். ஈவ் டீசிங்கில் பாதிக்கப்பட்டால் பயப்படாதீர்கள்.

உடனே பெற்றோர் அல்லது ஆசிரியரிடம் தெரிவியுங்கள். உங்கள் தோழி ஈவ் டீசிங்கால் பாதிக்கப்பட்டு யாரிடமும் சொல்லாமல் இருந்தால், அவர்களுக்கும் இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். ஆணும், பெண்ணும் சமம். அதே நேரத்தில் ஆண்களால் பாதிப்பு ஏற்பட்டால் அமைதியாக இருக்காமல் உரியவர்களிடம் தெரிவியுங்கள்” என்று அறிவுரை வழங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE