சமூக விழிப்புணர்வு கட்டுரைகள் அதிகம் வெளிவர வேண்டும்: தி இந்து வாசகர் திருவிழாவில் ஆர்.நல்லகண்ணு பேச்சு

By செய்திப்பிரிவு

'தி இந்து' நாளிதழில் மதுஒழிப்பு போன்ற சமூக விழிப்புணர்வு கட்டுரைகள் இன்னும் அதிகமாக வெளிவர வேண்டும் என்று பொதுவுடமை இயக்க மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கேட்டுக்கொண்டார்.

'தி இந்து' தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவை வாசகர்களுடன் சேர்ந்து கொண்டாடும் விதமாக தமிழகத்தின் பல நகரங்களில் வாசகர் திருவிழா நடந்தது.

கோவையில் தொடங்கி புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திண்டுக்கல், தூத்துக்குடி, மதுரை, திருப்பூர், சேலம், வேலூர், ஈரோடு ஆகிய 12 நகரங்களில் நடத்தி முடித்துவிட்டு, தலைநகரான சென்னையில் கடந்தவாரம் 13-வது 'வாசகர் திருவிழா' நடந்தது.

இதைத் தொடர்ந்து சென்னை புறநகர் வாசகர்களுக்காக காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவமனை மருத்துவக் கல்லூரி கலையரங்கில் 14-வது வாசகர் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

விழாவில், பொதுவுடைமை இயக்க மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, கவிக்கோ அப்துல் ரகுமான், திரைப்பட வசனகர்த்தா கிரேசி மோகன், எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி, வழக் கறிஞர் மற்றும் பெண் உரிமை செயல்பாட்டாளர் அஜிதா, திரைப்பட இயக்குநர் நலன் குமரசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

வாசகர்களிடையே பொதுவுடைமை இயக்க மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பேசியதாவது: 'தி இந்து' தமிழ் நாளிதழ் தொடங்கியது முதல் இன்று வரை தொடர்ந்து படித்து வருகிறேன். மற்ற நாளிதழ்களைப் போல பரபரப்பு என்பது தலைப்பில் இல்லை. அதுவே மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழகத்தைப் பிடித்துள்ள பெரிய கேடு மது. கல்லூரி மாணவர்களைத் தாண்டி இன்றைய தினம் பள்ளி மாணவர்களையும் குடிப்பழக்கம் சென்றடைந்திருக்கிறது.

மதுவினால் ஏற்படக்கூடிய பாதிப்பு களை, சிறுவர்-சிறுமிகள், பெண்கள் அனுபவிக்கும் வேதனைகளை 'மெல்லத் தமிழன் இனி' என்ற தலைப்பில் தொடர் செய்தியாக வெளியிட்டது பாராட்டுக்குரியது. இதுபோன்ற கட்டுரைகள் அதிகம் வெளிவர வேண்டும்.

அதேபோல், இன்னொரு இந்தியா, பேரழிவின் 30 ஆண்டுகள், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் விளைவுகள், அதைப் பற்றிய விவரமான தகவல்கள், கருணைக் கொலைகள் பற்றிய கட்டுரை, நேரு, சர்தார் வல்லபாய் படேல், அம்பேத்கர் தொடர்பான கட்டுரைகள் சிறப்பானவை. இத்தகைய கட்டுரைகளை வேறு எந்த நாளிதழ்களிலும் பார்க்க முடிய வில்லை. இதேநிலை தொடர வேண்டும். இவ்வாறு ஆர்.நல்லகண்ணு பேசினார்.

விழாவில் ஆர்.ஆர்.பி. ஹவுசிங் நிறுவன மேலாண்மை இயக்குநர் பத்ம நாபன் கவுரவிக்கப்பட்டார். நிகழ்ச்சியை, 'தி இந்து' குழுமத்தின் பொதுமேலாளர் வி.பாலசுப்பிரமணியன் தொகுத்து வழங்கினார். 'தி இந்து' நாளிதழ் இணைப்பிதழ்களின் ஆசிரியர் அரவிந்தன் வரவேற்றுப் பேசினார். 'தி இந்து' நாளிதழின் பணிகள் குறித்து ஆசிரியர் கே.அசோகன் அறிமுகவுரையாற்றினார். 'தி இந்து' தமிழ் நாளிதழ் வணிகப் பிரிவு தலைவர் ஷங்கர் வி.சுப்பிரமணியம் நன்றி தெரிவித்தார்.

'தி இந்து' வாசகர் திருவிழாவை லலிதா ஜுவல்லரி நிறுவனம், ராம்ராஜ் காட்டன் வேஷ்டிகள், கிருஷ்ணா ஸ்வீட்ஸ், காஞ்சிபுரம் எஸ்.எம்.சில்க்ஸ், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்தின. சென்னை ஆல்பா விளம்பர நிறுவனம் சார்பில் வாசகர்களுக்கு குறிப்பேடுகள் வழங்கப்பட்டன.

14 வாரம் 'ஜனவாசம்'

'தி இந்து' தமிழ் நாளிதழின் ஆசிரியர் கே.அசோகன் பேசியதாவது: இதிகாசங் களில் 14 என்ற எண்ணைப் பற்றி பேசி னாலே, வனவாசம்தான் நினைவுக்கு வரும். வனவாசம் என்பது மக்களைவிட்டு விலகி கண்காணாமல் காட்டுக்குள் அனுப் பப்படுவது.

இந்த வருடம் செப்.16-ம் தேதி 'தி இந்து' தமிழ் நாளிதழ் ஆரம்பித்து ஓராண்டு பூர்த்தி ஆனதுமே தமிழகம் முழுவதும் வாசகர்களை சந்திக்கப் புறப்பட்டோம். 13 நகரங்களில் வாரந்தோறும் வாசகர் திருவிழாவை நடத்திவிட்டு, 14-வது வாரமாக உங்கள் முன் நிற்கிறோம். புராணத்து 14 வருடங்கள் 'வனவாசம்' என்றால், வாசகர் திருவிழா நடந்த 14 வாரம் 'ஜனவாசம்'. இந்த 14 வாரங்களும் மக்களோடு மக்களாக இருந்து உங்களுடனான எங்கள் உரிமையை மேலும் உறுதியாக்கிக் கொண்டுள்ளோம்.

நீங்கள் கூறிய கருத்துகளை எல்லாம் செயல்படுத்தியதால் வந்த வெற்றி இது. இன்னும் உங்களை எங்களுக்கு நெருக்கம் ஆக்கிக்கொள்ளும் எல்லா பணிகளையும், 'வாசகர் திருவிழா'வுக்குப் பிறகும் தொடர்ந்து கொண்டே இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE