தேன் கொட்டும் தேனீ: தேனீ இனங்கள் பாதுகாக்கப்படுமா?

By ஆர்.கிருஷ்ணகுமார்

பயிர் சாகுபடியை மட்டுமே நம்பியிருக்கும் விவசாயிகள், பல்வேறு பிரச்சினைகளால் பொருளாதார ரீதியில் நெருக்கடிக்கு உள்ளாக வேண்டியுள்ளது. எனவேதான், கால்நடை வளர்ப்பு, தேனீ வளர்ப்பு என விவசாயம் சார்ந்த தொழில்களையும் விவசாயிகள் மேற் கொள்ள வேண்டியுள்ளது. அந்த வகையில், தேனீ வளர்ப்பு லாபம் தரும் தொழிலாக உள்ளது. எனினும், அழிந்து வரும் தேனீ இனங்களைப் பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர் விவசாயிகள்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் சிலர் தேனீ வளர்ப்பு பெட்டி உள்ளிட்டவற்றுடன் வந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்துக்கு தலைமை வகித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி மற்றும் தேனீ வளர்ப்பு விவசாயி பொள்ளாச்சி விவேக் ஆகியோரிடம், “எதற்கு இந்தப் போராட்டம்?” என்று கேட்டோம்.

“பல்வேறு மாவட்டங்களிலும் விவசாயிகள் தேனீ வளர்ப்புத் தொழிலை, உபதொழிலாக மேற்கொள்கின்றனர். கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, ஆனைமலை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் தேனீ வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். தேனீ வளர்ப்பு மூலம் தேன் கிடைப்பது மட்டுமின்றி, மகரந்த சேர்க்கை மூலமாகவும் விவசாயிகளுக்கு உதவுகின்றன தேனீக்கள். இதனால், உணவு உற்பத்தியும் அதிகரிக்கிறது.

கோவை பகுதியில் மலைத் தேனீ, அடுக்குத் தேனீ, கொம்புத் தேனீ, கொசுத் தேனீ என 4 வகையான தேனீக்கள் உள்ளன. கொசுத் தேனீக்கள் 95 சதவீதம் அழிந்துவிட்டன. மற்ற வகை தேனீக்களும் குறைந்த அளவே உள்ளன. தேனீக்களின் முக்கியத்துவத்தை அறியாதவர்கள், அவற்றைத் தீயிட்டும், ரசாயன மருந்துகளைப் பயன்படுத்தியும் அழிக்கின்றனர்.

2016-17 அறிக்கைப்படி, இந்தியாவில் 10 ஆயிரம் கோடி முதல் 15 ஆயிரம் கோடி வரை தேனீக் கூட்டங்கள் வளர, இயற்கை வளம் சாதகமாக உள்ளது.  ஆனால், 35 லட்சம் முதல் 50 லட்சம் வரை மட்டுமே தேனீக் கூட்டங்கள் உள்ளன. 2017 கணக்கெடுப்புப்படி தேன் உற்பத்தி 76 ஆயிரம் டன். இதில், 50 சதவீதத்துக்கும் மேல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலக அளவில் தேன் உற்பத்தியில்  சீனா முதலிடம் வகிக்கிறது. இந்தியா 8-ம் இடத்தில்தான் உள்ளது.

தமிழகத்தில் மிகக் குறைந்த அளவே தேனீ வளர்ப்பாளர்கள் உள்ளனர். ரசாயன மருந்து, ரசாயன உரங்கள் பயன்பாடு, பருவநிலை மாற்றங்கள் உள்ளிட்டவற்றால் தேனீக்கள் அழிந்துகொண்டே வரும் நிலை உள்ளது. இந்த நிலை நீடித்தால், விவசாயத்துக்கும் பாதிப்பு ஏற்படும் என்கின்றனர் தேனீ ஆராய்ச்சியாளர்கள்.

தேனீக்களைப் பாதுகாப்பதன் மூலம், விவசாயம் செழித்து, உற்பத்தி அதிகரிக்கும். எனவேதான், தேனீ இனத்தைப் பாதுகாக்கவும், தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கவும் மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டுமென வலியுறுத்திப் போராட்டம் நடத்துகிறோம்.

தேனீ வளர்ப்பாளர்களிடமிருந்து தேனீ வளர்ப்புப் பெட்டிகளைப் பெற்று, தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்கு நேரடியாக தேனீ பெட்டிகளை வழங்குவதுடன், தேனீ வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு உரிய பயிற்சியும் அளிக்க வேண்டும். இந்த நடவடிக்கையை மாவட்ட வாரியாக மேற்கொள்ள வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தைப்போல, கோவை மாவட்டத்திலும் தேன் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும். தேனீ வளர்ப்பாளர்களுக்கு மாவட்ட கூட்டுறவு சங்கம் மூலம் கடனுதவி வழங்க வேண்டும். தேன், தேனீ தொடர்பான மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க, தேனீ வளர்ப்பாளர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். பூச்சியியல் துறை மூலம் தேனீ வளர்ப்பு முன்னோடி விவசாயிகளைக் கண்டறிந்து, அவர்களுக்குப் பரிசு வழங்கி ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மலைக் கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கும் தேனீயின் முக்கியத்துவம், பயன்கள் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். மலைவாழ் பழங்குடி மக்களின் வருவாயை அதிகரித்து, வாழ்வாதாரத்தை உயர்த்த இது மிகவும் உதவியாக இருக்கும்.

தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த தேனீ விவசாயிகளுக்கென தனி நல வாரியம் அமைக்க வேண்டும். தேனீ வளர்ப்பு மூலம் பல்வகை பயன்கள் இருப்பதால், தேனீக்களைப் பாதுகாப்பதில் தனி கவனம் செலுத்தி, மத்திய, மாநில அரசுகள் மூலம் தேனீ வளர்ப்புத் திட்டத்தை முழு அளவில் செயல்படுத்த வேண்டும்.

தேனீ வளர்ப்புக்குப் பயன்படுத்தப்படும் தேனீப் பெட்டிகளை இரவு நேரங்களில் இடமாற்றம் செய்யும்போது, காவல் துறையினர் அல்லது பிற துறையினர் இடையூறு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் தேனீ வளர்ப்போர் மற்றும் விவசாயிகளுக்கு மிகுந்த பயனளிக்கும். தேனீ வளர்ப்பை ஊக்குவித்து, அதிக அளவு தேன் உற்பத்தி செய்து, ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம், அந்நியச் செலாவணி அதிக அளவில் கிடைக்கும்” என்றனர்.

மகரந்த சேர்க்கைக்கு உதவும் தேனீக்கள்...

தேனீ வளர்ப்புக்கு குறைந்த நேரம், பணம் மற்றும் கட்டமைப்பு மூலதனம் போதுமானது. சாதாரண விவசாய நிலங்களில் தேன் மற்றும் தேன் மெழுகைத் தயாரிக்கலாம்.

தேனீ வளர்ப்பு சுற்றுச்சூழலை மேம்படுத்த உதவும். பலவிதமான பூக்களின் மகரந்த சேர்க்கைக்கு உதவுவதால், இந்த பயிர்களின் மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.தேன் அதிக ஊட்டச்சத்து நிறைந்த,  விரும்பத்தக்க உணவாகும். பழைய தேனீ சேகரிப்பு முறையில் தேன் கூடுகளை அழிப்பதால்,  பலவிதமான தேனீக்கள் அழிக்கப்பட்டன.

தற்போதைய தேனீ வளர்ப்பு முறை மூலம் இதைத் தடுக்கலாம்.தேனீ வளர்ப்பை தனி நபராகவோ அல்லது குழுவாகவோ மேற்கொள்ளலாம். தேன் மற்றும் தேன் மெழுகுக்கு சந்தையில் நல்ல தேவை இருக்கிறது.வீட்டிலோ  அல்லது பண்ணைகளிலோ பெட்டிகளில் தேனீக்களை வளர்க்கலாம். தேனீக்களை வளர்க்கப் பயன்படுத்தும் கூடு அல்லது பெட்டியானது, நீளமான, சாதாரண பெட்டியாகும்.

இதன் மேல் பகுதியில் பல அடுக்குகள் இருக்கும். சுமார் 100 செ.மீ. நீளம், 45 செ.மீ. அகலம் மற்றும் 25 செ.மீ. உயரம் கொண்டது இந்தப் பெட்டி.தேனீக்கள் உள்ளே நுழைய சிறிய ஓட்டைகள் இருக்கும்.தேனீ வளர்ப்பில், சிறிய தகர டப்பா மூலம் புகைப்பானைத் தயாரித்து, முக்கிய உபகரணமாகப் பயன்படுத்துகிறார்கள். தேனீக்களைக் கட்டுப்படுத்துவதற்கும், தேனீக்கள் கடிக்காமல் இருப்பதற்கும் இதைப் பயன்படுத்துகின்றனர்.

மேலும், கண்கள், மூக்குகளைப் பாதுகாக்க துணிகளைப் பயன்படுத்தலாம். மேல் அடுக்குகளை தனிமைப்படுத்துவதற்கும், தேன் கூடுகளைப்  பிரிக்கவும் கத்தியைப் பயன்படுத்தலாம். தேன் வளர்க்கும் இடமானது, நல்ல வடிகால் வசதியுடைய திறந்த இடங்களாகவும், பழத் தோட்டத்துக்கு அருகிலும், நிறைய மதுரம், மகரந்தம் மற்றும் தண்ணீர் கிடைக்கக்கூடிய இடமாகவும் இருந்தால் நல்லது. நேரடியாக சூரிய ஒளி இல்லாமல் இருந்தால்தான், மிதமான வெப்பத்தைக் கொடுக்க இயலும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

8 days ago

மற்றவை

16 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

5 months ago

மேலும்