தலை நரைத்திருந்தாலும், சிவாஜி ஸ்டைலில் சிகையலங்காரம். திரையரங்க வாசலில் எப்போதும் ஒரு கூட்டம். நடிகர் சிவாஜி இறந்துவிட்டாலும், அவர் இருந்தபோது எந்த அளவுக்கு மரியாதை கொடுத்தார்களோ, அதைவிட பல மடங்கு கொண்டாட்டம். பொதுவாக, புதிய படங்களுக்கே பகல் காட்சிகளுக்கு ஆட்கள் வராத சூழலில், திருப்பூரில் திரையரங்க வாயிலில் காலைக் காட்சி முடியும்முன்பே, பகல் காட்சிக்கு டிக்கெட் வாங்க கூட்டம் கூடுகிறது.
இதெல்லாம் எந்தப் படத்துக்காக? டிஜிட்டல் பிரிண்டில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வசந்த மாளிகை’ திரையரங்க வாசல்களில் தான் இந்த திருவிழாக்கோலம்!
திருப்பூர் கஜலட்சுமி , அனுப்பர் பாளையம் கலைவாணி, பாளையக்காடு கேஎஸ், பாரப்பாளையம் எம்பிஎஸ் என திருப்பூரில் மட்டும் 4 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது வசந்தமாளிகை திரைப்படம். நான்கு திரையரங்குகளிலும் சிவாஜி ரசிகர்களும், பெண்களும் படம் பார்க்கத் திரள்கிறார்கள். பெண்களும், இளைஞர்களும் அதிக அளவில் வருவதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர் சிவாஜி ரசிகர்கள். நான்கு திரையரங்குகளிலும் சேர்த்து தினமும் 16 காட்சிகளுக்கு ரசிகர்கள் குவிகின்றனர். சமீபத்தில் வெளியான புதுப்படங்களை கடந்து, நல்ல வசூல் இருப்பதாக மகிழ்கின்றனர் விநியோகஸ்தர்கள்.
“கடந்த 20 ஆண்டுகளாக திரையரங்கு பக்கமே வராதவர்களைக்கூட, திரையரங்குக்கு வர வைத்துள்ளது வசந்தமாளிகை திரைப்படம்” என பெருமிதமாய் பேசுகின்றனர் சிவாஜி ரசிகர்கள். ரசிகர்களுக்கு சினிமா பொழுதுபோக்கு. சிலருக்கோ வாழ்க்கை. ஆனால், வெகு சிலருக்கு மட்டும்தான் சினிமா தவம். அப்படிப்பட்டவர்தான் சிவாஜி. அதனால்தான், காலம் கடந்தும் கொண்டாடப்படும் கலைஞராக மனதில் நிற்கிறார் சிவாஜி.
1972-ல் வசந்தமாளிகை வெளியானது. 47 ஆண்டுகள் கழித்து, டிஜிட்டல் பிரிண்டில் மீண்டும் வெளியான இந்தப் படத்துக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை” என்கிறார் அகில இந்திய சிவாஜி மன்றச் செயலர் ஜி.கே.பிரசன்னாகுமார்.
“பள்ளியில் கற்றதைவிட, சினிமாவில் சிவாஜியைப் பார்த்து நாங்கள் கற்ற பாடம் அதிகம்” என்கிறார் சிவாஜி மன்ற திருப்பூர் மாவட்டத் தலைவர் சத்ருக்கன். மேலும், “அந்தக் காலத்தில் வசந்தமாளிகை ரிலீஸானபோது நடந்த நிகழ்வுகள், இன்னமும் எங்கள் மனதிலிருந்து அகலவில்லை. சிவாஜி படங்கள் எங்கள் வாழ்வுடன் இரண்டறக் கலந்துவிட்டன.
இன்னமும் 50 ஆண்டுகள் கழிந்தாலும், சிவாஜியைக் கொண்டாடுவோம். வசந்தமாளிகை டிஜிட்டல் பிரிண்ட் படம் திரையிடப்பட்ட முதல்நாள், எங்களுடன் பிரபு, விக்ரம் பிரபு ரசிகர்களும் இணைந்து கொண்டாடினர். போட்டிபோட்டுக் கொண்டு இனிப்பு, பிரியாணி, புத்தாடைகள் மற்றும் பால் அபிஷேகம் என அமர்க்களப்படுத்திவிட்டோம். திருப்பூர் திரையரங்குகளில் பெண்களுக்கு சேலைகள் வழங்கியும் மகிழ்ந்தோம்” என்றார்.
கஜலட்சுமி திரையரங்க ஆபரேட்டர் எம்.இளங்கோ கூறும்போது, “25 ஆண்டுகளுக்கு மேலாக ஆபரேட்டராகப் பணிபுரிந்து வருகிறேன். சிவாஜியின் வசந்தமாளிகை திரைப்படத்துக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று கருதவில்லை. எங்கள் திரையரங்குகளில் பல புதிய திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின. ஆனால், அந்தப் படங்களை காட்டிலும், வசந்தமாளிகை அதிக வசூலைக் குவித்துள்ளது. பெண்கள், குழந்தைகளை அழைத்துக்கொண்டு குடும்பத்துடன் வருகிறார்கள்” என்றார்.
முக்கிய செய்திகள்
மற்றவை
8 days ago
மற்றவை
16 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
5 months ago