மண், மக்கள் சார்ந்து பயணிக்கிறது தி இந்து: தூத்துக்குடியில் வாசகர் திருவிழாவில் எழுத்தாளர் ஜோ டி குரூஸ் பேச்சு

'தி இந்து' நாளிதழ் இந்த மண் சார்ந்து, மக்கள் சார்ந்து பயணிக்கிறது' என, சாகித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ டி குரூஸ் பேசினார்.

'தி இந்து' தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டு வரும் வாசகர் திருவிழா கோவை, புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திண்டுக்கல்லை தொடர்ந்து தூத்துக்குடியில் நேற்று நடைபெற்றது.

தூத்துக்குடி, பெருமாள்புரம் சாலை சுப்பையா வித்யாலயம் மாணவியர் மேல்நிலைப்பள்ளி அரங்கில் நடைபெற்ற விழாவில் ஜோ டி குரூஸ் பேசியதாவது:

முத்துநகர் என அழைக்கப்படும் தூத்துக்குடிக்கு, 'திருமந்திரநகர்' என்ற சிறப்புப் பெயர் உண்டு. முருகனின் சூரசம்ஹாரத்தை காண்பதற்கு திருச்செந்தூருக்கு அம்மையும், அப்பனும் வந்தனர். மகனின் வெற்றியைப் பார்த்த பின் கைலாயத்துக்கு திரும்பிச் செல்லும் வழியில், பனைமரங்கள் சூழ்ந்த நெய்தல் சோலையாக இருந்த தூத்துக்குடியில் இளைப்பாறினர். அப்போது 'நமசிவாய' என்ற மந்திரத்தை அம்மை ஜெபித்தார். இதனால்தான், தூத்துக்குடிக்கு 'திருமந்திர நகர்' என்ற சிறப்பு பெயர் ஏற்பட்டது. இப்புராணத்தை உணர்த்தும் சிறப்புவாய்ந்த சிவாலயம் தூத்துக்குடியில் இருக்கிறது.

'திருமந்திர நகர்' முத்துக்கள் விளைந்ததால் 'முத்துநகர்' என பின்னர் அழைக்கப்பட்டது. அதன்பின், 'துறைமுக நகர்' என மாறியது. தற்போது தூத்துக்குடி, மின் உற்பத்தி கேந்திரமாக 'மின் நகராக' மாறியிருக்கிறது. இதனால் தொழில்கள் வளர்கின்றன. இதன் எதிரொலியாக தூத்துக்குடி 'சாம்பல் நகராக' தற்போது மாறியிருப்பதை 'தி இந்து' அக்கறையுடன் பதிவு செய்திருக்கிறது.

'தி இந்து' நாளிதழில் என்ன இருக்கிறது? என்ற கேள்வி எழுகிறது. பல்வேறு ரசனைகளுடன் கூடிய அம்சங்களை தாங்கி வருவதுதான் அதன் சிறப்பு.

பாராட்டுக்குரிய பயணம்

கொலை, பாலியல் பலாத்காரம் என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டு, தமிழகத்தை மிரட்டுவதில்லை என்ற முடிவை 'தி இந்து' எடுத்திருப்பது ஆரோக்கியமானது, பாராட்டுக்குரியது. இந்த செய்தித்தாள் மண் சார்ந்து, மக்கள் சார்ந்து, அவர்களது பண்பாடு, கலை, இலக்கியம் சார்ந்து பயணிக்கிறது. நமது கலாச்சாரத்தையும், நாம் என்ன பரிணாம நிலைக்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பதையும் தொடர்புபடுத்தி செய்திகள் தரமாக வெளியாகின்றன.

ஆய்வு தரத்தில்

'தி இந்து'வில் வாசிக்கும் செய்திகள் வெறும் ஏட்டுச் செய்திகளாக இல்லாமல் ஆய்வுக்குரிய தரத்திலான செய்திகளாக இருக்கின்றன. ஒரு சம்பவம் நடந்தால் அதன் பின்னணி என்ன? நிகழ்கால சம்பவத்துக்கான காரணம் என்ன? எதிர்காலத்தில் அதனால் ஏற்படும் தாக்கங்கள் என்ன? என்பதையெல்லாம் எடுத்துரைக்கும் ஆய்வு கட்டுரைகளாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

மக்களது முன்னேற்றத்துக்கான அர்ப்பணிப்பு உணர்வுடன் 'தி இந்து' வருகிறது. அதற்காக நன்றி தெரிவிக்கிறேன்' என்றார் அவர்.

'தி இந்து' நாளிதழ் இணைப்பிதழ்களின் ஆசிரியர் டி.ஐ.அரவிந்தன் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியை 'தி இந்து' குழுமத்தின் மூத்த பொதுமேலாளர் (நிர்வாகம்) வி.பாலசுப்பிரமணியன் தொகுத்து வழங்கினார். திருநெல்வேலி 'தி இந்து' விற்பனைப் பிரிவு முதுநிலை அலுவலர் ஜி.சதீஷ்குமார் நன்றி கூறினார். 'தி இந்து' சென்னை தலைமை நிருபர் தேவதாசன் ஏற்புரை வழங்கினார்.

லலிதா ஜூவல்லரி, ராம்ராஜ் காட்டன் வேஷ்டிகள், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், காஞ்சிபுரம் எஸ்.எம்.சில்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் விழாவை இணைந்து நடத்தின.

விழா அரங்கில் 'தி இந்து' குழுமத்தின் சிறப்பு வெளியீடுகளான திருப்பதி பிரம்மோற்சவம் மலர், தீபாவளி மலர், ஆடி மலர், நவராத்திரி மலர் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE