ஐஎஸ்ஓ தரச் சான்று பெற்ற க. பரமத்தி அரசு பள்ளி: சொந்தப் பணத்தில் மாதம் ரூ.20 ஆயிரம் செலவிடும் தலைமை ஆசிரியர்

By க.ராதாகிருஷ்ணன்

ஒன்று முதல் ஐந்து வரை ஆங்கில வழி வகுப்புகள்; ஆங்கில உரையாடலுக்கு தனிப் பயிற்சி; இந்தி மொழி வகுப்புகள்; இசைப் பயிற்சி; நடன வகுப்புகள்; ஓவியம், யோகா, கராத்தே கற்றுக் கொடுக்க தனித்தனி ஆசிரியர்கள்; இத்தகைய பன்முகத் திறன்களை மாணவர்களிடம் வளர்க்க மாதந்தோறும் சொந்தப் பணத்தில் ரூ.20 ஆயிரம் செலவு செய்யும் தலைமை ஆசிரியர்…

கரூர் மாவட்டம் க.பரமத்தியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிதான் இத்தகைய சிறப்புகளோடு திகழ்கிறது. ஏராளமான மரங்கள், செடிகளுடன் இதமான சூழலில் பள்ளி வளாகம் பசுமையாகக் காட்சி அளிக்கிறது. 9 கம்ப்யூட்டர்களுடன் 2006-ல் தொடங்கப்பட்ட கம்ப்யூட்டர் ஆய்வகத்தில் இப்போது 12 கம்ப்யூட்டர்கள் உள்ளன.

பாடத் திட்டத்தோடு தொடர்புடைய விளையாட்டுகளைக் கொண்ட ஏராளமான செயலிகளை (Apps) மாணவர்களே டேப்லெட் கருவி மூலம் கையாளுகின்றனர். புரொஜக்டர், ஹோம் தியேட்டர் வசதிகள் கொண்ட மல்டி மீடியா டிஜிட்டல் வகுப்பறை 2012-ல் உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவீன தொடுதிரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்பட்டது. மையக் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு, எல்லா வகுப்பறைகளிலும் தொலைக்காட்சி பெட்டிகள், ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மின்தடையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க 3 கிலோவாட் திறன் கொண்ட இன்வெர்ட்டர் கருவி நிறுவப்பட்டுள்ளது.

மாணவர்களின் வீட்டுப் பாடம் உட்பட பெற்றோர்களுக்கு தினமும் தெரிவிக்க வேண்டிய தகவல்கள் குரல் வழிச் செய்தியாக (Voice message) பெற்றோர்களின் செல்போன்களுக்கு அனுப்பப்படுகின்றன. காலை 10 மணி வரை பள்ளிக்கு வராத மாணவர்கள் பற்றிய குரல் வழி தகவலை அவர்களின் பெற்றோருக்கு தலைமை ஆசிரியர் உடனே அனுப்பி விடுகிறார். இதனால் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. வண்ணப்படங்களுடன் கூடிய சுவரோவியங்கள், மின் விசிறிகள், டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்ட தரை, சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் போன்ற வசதிகள் அனைத்து வகுப்பறைகளிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நடனம் பயிலும் மாணவர்களுக்கு கிராமிய நடனமும், மேற்கத்திய நடனமும் கற்றுத் தரப்படுகின்றன. இசை வகுப்பில் சேர்ந்துள்ளவர்களுக்கு கீ போர்டு இசைக்கவும், வாய்ப்பாட்டு பாடவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் மைசூரில் தேசிய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. 9 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் இந்தப் பள்ளியைச் சேர்ந்த லோ.மஹா, என்.ரிதேஷ் ஆகியோர் தேசிய அளவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளனர். கேரம், செஸ் மற்றும் பல பாரம்பரிய விளையாட்டுகளில் மாணவர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது.

செயல்வழிக் கற்றல் முறையினை மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசை இந்தப் பள்ளி பெற்றுள்ளது. 2008-ம் ஆண்டு மாவட்ட அளவில் சிறந்த கணினி வழிக் கற்றல் மையத்திற்கான விருதும் கிடைத்துள்ளது. அடிப்படை வசதிகள் மட்டுமின்றி நவீன தொழில்நுட்ப வசதிகளும் நிறைந்து விளங்கும் இந்தப் பள்ளிக்கு 2015-ம் ஆண்டில் ஐ.எஸ்.ஓ. தரச் சான்று கிடைத்துள்ளது.இத்தகைய பல சிறப்புகளோடு வளர்ந்து வரும் இந்தப் பள்ளிக்கு மேலும் இடவசதி தேவைப்படுவதை உணர்ந்த ஊர் பொதுமக்கள், 2015-ம் ஆண்டில் ரூ.7 லட்சம் மதிப்புடைய 5 சென்ட் நிலத்தை வாங்கி பள்ளிக்கு கொடுத்துள்ளனர்.

“இவை மட்டுமல்ல; பள்ளிக்குத் தேவையான பல்வேறு பொருட்களை கிராம மக்கள் வழங்கி வருகின்றனர். இதற்காகவே 2014 முதல் ஆண்டு தோறும் கல்விச் சீர் வழங்கும் விழாவை ஊர் மக்கள் நடத்துகிறார்கள். இவ்வாறு இதுவரை ரூ.10 லட்சத்துக்கும் மேற்பட்ட மதிப்புள்ள பொருட்களை வழங்கியுள்ளனர்” என தலைமை ஆசிரியர் ரா.செல்வக்கண்ணன் கூறுகிறார். அவர் மேலும் கூறியதாவது:

“2005-ம் ஆண்டு இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றேன். அப்போது பள்ளிக்கு சுற்றுச்சுவர் கூட இல்லை. அந்த ஆண்டிலேயே சுற்றுச்சுவர் அமைக்க ஏற்பாடு செய்தேன். இன்ஃபோசிஸ் நிறுவனத்தை அணுகி 5 கம்ப்யூட்டர்கள் பெற்றோம். அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் நன்கொடையாளர்கள் வழங்கியவை உட்பட 9 கம்ப்யூட்டர்களுடன் கூடிய ஆய்வகத்தை அமைத்தோம். அரசு தொடக்கப் பள்ளியில் 2006-ம் ஆண்டிலேயே இப்படி ஒரு கம்ப்யூட்டர் ஆய்வகத்தை அமைத்தது பரவலான கவனத்தை பெற்றது. பல்வேறு தரப்பிலிருந்து எங்களுக்கு கிடைத்த பாராட்டுகளால் உற்சாகம் அடைந்த நானும், பள்ளி ஆசிரியர்களும் ஊர் மக்கள் ஒத்துழைப்போடு இத்தகைய நவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த பள்ளியை உருவாக்கியிருக்கிறோம்” என்று உற்சாகமாகப் பேசினார்.

இந்த தொடக்கப் பள்ளியில் நடப்பாண்டில் மொத்தம் 190 மாணவர்கள் பயில்கிறார்கள். “எங்கள் ஒன்றியத்தில் மொத்தம் 106 தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் சுமார் 50 பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்களே, அதாவது ஒற்றை இலக்க எண்ணிக்கையிலே மாணவர்கள் உள்ளனர். இத்தகைய சூழலில் 190 மாணவர்கள் பயில்வதே இந்தப் பள்ளியின் சிறப்பை பறைசாற்ற போதுமானது” என்கின்றனர் ஆசிரியர்கள்.

ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று பெற்றோர்களின் கூட்டம் நடத்தப்படுகிறது. பள்ளி மேலாண்மைக் குழு சிறப்பாக செயல்படுகிறது. பெற்றோர்களின் கருத்துகளுக்கு ஆசிரியர்கள் உரிய மதிப்பளித்து உடனுக்குடன் நிறைவேற்றுவதால், ஆசிரியர்கள் – பெற்றோர்கள் இடையே வலுவான பிணைப்பு நிலவுகிறது.

பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 6 நிரந்தர ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 4 தற்காலிக ஆசிரியர்களும் உள்ளனர். இவர்களில் ஒருவருக்கான ஊதியத்தை ஊர் மக்கள் தருவதாகவும், மற்ற 3 பேருக்கான ஊதியத்தை தானே கொடுத்து வருவதாகவும் தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணன் தெரிவிக்கிறார். மேலும் ஆங்கில உரையாடல், இந்தி, இசை, நடனம் ஆகிய பயிற்சிகளை அளிக்கும் சிறப்பாசிரியர்களுக்கும் தன் சொந்தப் பணத்தில் இருந்தே ஊதியம் தருவதாகவும், இதற்காக மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்வதாகவும் தலைமை ஆசிரியர் கூறுகிறார்.

இத்தகைய உயர்ந்த நோக்கம் கொண்ட ஆசிரியர்கள் பணியாற்றுவதால்தான் க.பரமத்தியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கு 10 கி.மீ. தொலைவில் இருந்து கூட சுமார் 60 மாணவர்கள் தினமும் வந்து செல்கின்றனர். வெளியூர்க்கார்கள் சுமார் 20 பேர் க.பரமத்தியில் வாடகை வீட்டில் குடியேறி, தங்கள் குழந்தைகளை இந்தப் பள்ளியில் சேர்த்துள்ளதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். இதிலிருந்து க.பரமத்தியில் உள்ள இந்த அரசு தொடக்கப் பள்ளி ஓர் ஆச்சரியப் பள்ளி என்பது உறுதியாகியுள்ளது.

தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள: 98946 66765

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

1 day ago

மற்றவை

12 days ago

மற்றவை

16 days ago

மற்றவை

23 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மேலும்