மனிதநேயத்தின் குரலாக ஒலிக்கிறது

மனிதநேயத்தின் குரலாக 'தி இந்து'தமிழ் நாளிதழ் ஒலிக்கிறது என்றார் பாடலாசிரியர் நா.முத்துக்குமார்.

'தி இந்து' தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வாசகர் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கோவை, புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திண்டுக்கல், தூத்துக்குடியைத் தொடர்ந்து மதுரையில் நேற்று வாசகர் திருவிழா நடைபெற்றது.

மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு விகாசா பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் அவர் பேசியது: 'திரைக்குவந்த காலத்தில் முதல் பாடல் எழுதும்போது எனக்கு 23 வயது. அப்போது, 40 வயதை தாண்டியவர்கள்தான் பாடல் எழுதுவர் என்ற நம்பிக்கை திரைத்துறையில் வேரூன்றி இருந்தது. இதனால் எனக்கு பாடல் எழுதும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதனால், வயதைக் கூட்டி காட்டுவதற்காக தாடி வளர்க்க ஆரம்பித்தேன். எனது தந்தை தமிழ் ஆசிரியர். அவர் மூலம் ஆங்கில இந்து எனக்கு அறிமுகமானது. எங்கள் ஊர் நூலகத்தில் காத்திருந்து 'தி இந்து'படித்து ஆங்கிலம் கற்றுக்கொண்டேன்.

எனது தந்தை கடைசிவரை ஆங்கிலம் கற்றுக்கொள்ளவில்லை. அவர் எங்களிடம், தமிழ் மட்டும் தெரிந்ததால் நிறைய புத்தகங்களை வாங்கி உங்களை கடனாளியாக்கிவிட்டேன். ஆங்கிலமும் தெரிந்திருந்தால் ஆங்கிலப் புத்தகங்களாக வாங்கி உங்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்திருப்பேன் என்பார்.

நாளிதழ்கள் கடற்கரையில் கிடக்கும் வெண்சங்குகளைபோல இருக்க வேண்டும். காதில் வைத்துக்கேட்டால் மனிதநேயக் குரல் ஒலிக்க வேண்டும். சமூகப் பொறுப்புணர்வு, அக்கறை இருக்க வேண்டும். 'தி இந்து'தமிழ் நாளிதழ் மனிதநேயத்தின் குரலாக ஒலிக்கிறது. மின்கம்பி ஆற்றலைக் கடத்துவதுபோல, 'தி இந்து'அடுத்த தலைமுறைக்கு அறிவைக் கடத்தும் கருவியாக உள்ளது. 'தி இந்து'இலக்கியம், கலை சார்ந்த சிறப்பான கட்டுரைகளை சேர்த்து வழங்குவது தனிச் சிறப்பு' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE