‘தீம் பார்க்’ ராட்சத ராட்டினங்களில் சுற்றிப் பழகிய குழந்தைகள்கூட, கையால் சுற்றும் தெருவோரத்து ராட்டினங்களைக் கண்டால் ஏக்கத்துடன் கைநீட்டுவார்கள். இப்போது, பெரும்பாலும் கோயில் திருவிழாக்களில் மட்டுமே சுழலும் இந்த ராட்டினங்களும் அரிதாகி வருகின்றன.
கை ராட்டினங்களுக்கு இன்னும் வரவேற்பு இருந்தாலும் போதிய வருமானம் இல்லை என்கிறார் திருச்சி வட்டாரத்தில் ராட்டினத்தால் குழந்தைகளைக் குஷிப்படுத்திக் கொண்டிருக்கும் பால்பாண்டி. ‘ராட்டினம் தாத்தா’ என்று குழந்தைகள் சிநேகமாய் அழைக்கும் பால்பாண்டிக்கு வயது 75. கடந்த 40 ஆண்டுகளாக ராட்டினம் சுற்றும் இவர், மழைக்குக்கூட பள்ளிக்கூடம் ஒதுங்கியதில்லை. ஆனால், இப்போது இவரை வாழவைப்பதே பள்ளிக்கூட வாசல்கள்தான்!
சொந்தக்காரங்க ஏமாத்திட்டாங்க
“விவசாயம் சரிப்பட்டுவரலைன்னு சொந்தக்காரங்க பேச்சைக் கேட்டு கூட்டுத் தொழிலுக்குப் போனேன்; கையிலிருந்த காசைப் பறிச்சிக்கிட்டு நல்லா ஏமாத்திட்டாங்க. புள்ளைங்களுக்கு பால் வாங்கக்கூட காசில்லாத நிலையிலதான் திருச்சியைவிட்டு மெட்ராஸுக்கு ஓடுனேன். அங்க, கிடைச்ச வேலையப் பார்த்து நாலு காசு சேர்த்தேன்.
அப்பத்தான், மெரினா பீச்சுல ராட்டினம் வைச்சு பொழைக்கிறவங்கள பார்த்தேன். இவங்க மாதிரி நம்மளும் ஏன் செய்யக்கூடாதுன்னு தோணுச்சு. உடனே, அங்கயே ஒரு ராட்டினத்தை வாங்கி வண்டியில ஏத்திட்டு, நானும் திருச்சிக்கு பஸ் ஏறிட்டேன். அப்பலருந்து இப்ப வரைக்கும் ராட்டினம் சுத்துறதே நமக்கு நிரந்தரமாப் போச்சு’’ என்கிறார் பால்பாண்டி.
திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நடக்கும் திருவிழாக்கள் மற்றும் வாரச் சந்தைகள், பள்ளிக் கூடங்கள் என தினமும் எங்காவது ஓரிடத்தில் பால்பாண்டியின் ராட்டினம் ஓடிக்கொண்டே இருக்கும். குழந்தைகளை ஈர்க்கும் அம்சம் என்பதால் கடன் வாங்கியாவது ஆண்டுக்கு ஒருமுறை தனது ராட்டினத்தை மராமத்து செய்து, ‘பளிச்’ ஆக்கிவிடுகிறார்.
கைராட்டினம் அவ்வளவு சுலபமில்லை
“ராட்டினம் வைச்சுப் பொழப்பு நடத்துறது அவ்வளவு சுலபமில்லை. சந்தோஷமா ராட்டினத்துல ஏறி உட்காரும் குழந்தைங்க சில நேரம் பயத்துல அடம் பிடிப்பாங்க. அவங்கக்கிட்ட கொஞ்சிப் பேசி, சிரிப்புக் காட்டி, சமாதானப்படுத்திப் பயம் போக்கணும். குழந்தைங்க, பயத்துல ஒண்ணுக்குப் போறது, வாந்தி எடுக்குறதும் நடக்கும் அதையும் சமாளிக்கணும். சில நேரங்கள்ல, இம்சைகளும் வந்து சேரும்.
அப்படித்தான், 20 வருசத்துக்கு முந்தி, திருச்சி எடமலைப்பட்டி புதூர் கோயில் திருவிழாவுல குடிகாரப் பசங்க சிலபேரு ராட்டினத்துல ஏறிட்டாங்க. கீழ இறங்குங்கன்னு சொல்லமுடியல. போதையில அந்தப் பசங்க, ராட்டினம் சுத்திக்கிட்டு இருக்கும்போது திடீர்னு கீழே குதிச்சுட்டாங்க. ஒரு பக்கம் எடை குறைஞ்சதால பேலன்ஸ் தப்பி, ராட்டினம் தாறுமாறா ஓடிருச்சு. ராட்டினத்தை நிறுத்தி மத்த குழந்தைகள காப்பாத்துற முயற்சியில அப்ப என் கை துண்டாயிடுச்சு. 15 ஆயிரம் ரூபாய் செலவு செஞ்சும் கையை பழைய மாதிரி கொண்டுவர முடியல” என்று சொன்ன பால்பாண்டி, தொடர்ந்தும் பேசினார்.
“இத்தன வருசத்துல எனக்குத் தவிர யாருக்கும் ராட்டினத்துல விபத்து ஏற்பட்டதில்ல. உடல்நிலை பாதிக்கப்பட்ட என் மனைவி முப்பது வருசத்துக்கு முந்தியே நிம்மதியா போய்ச்சேர்ந்துட்டா. பசங்க ரெண்டு பேரும் வெளியூர்ல வியாபாரம் பாக்குறாங்க. நான் மட்டும் திருச்சியில ஒரு குடிசையில இருந்துக்கிட்டு இந்தப் பொழப்பப் பார்த்துட்டு இருக்கேன். பக்கத்துல இருக்கிற பேத்தி எனக்கு சாப்பாடு குடுத்துக் கவனிச்சிக்கிறா. வெளியூர் போனா, கெடைக்கிறத வாங்கிச் சாப்பிட்டுக்கிறது.
இந்தத் தொழில்ல இப்பப் பெருசா வருமானம் இல்லை. ஆனாலும் காலையில அஞ்சு மணிக்கே எந்திரிச்சு திருச்சி டவுனுக்கு கிளம்பிருவேன். இந்த வயசுலயும் ராட்டினம் சுத்துறது சிரமமாத்தான் இருக்கு. ஆனா, எத்தனை வலியோட போனாலும், ராட்டினத்துல குழந்தைகளின் குதூகலிப்பைப் பார்த்ததும் வலியெல்லாம் பஞ்சா பறந்துடுது. தினமும் இந்தக் குழந்தைகளின் சிரிப்பைப் பார்க்கணும் தம்பி. அதுக்காகத்தான், இதை விடாம சுத்திக்கிட்டு இருக்கேன்.” நெகிழ்வுடன் சிரிக்கிறார் ராட்டினம் தாத்தா!
முக்கிய செய்திகள்
மற்றவை
1 day ago
மற்றவை
3 days ago
மற்றவை
14 days ago
மற்றவை
18 days ago
மற்றவை
25 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago