நான்கு பில்லியன் ஒளியாண்டு தொலைவில், 650 மில்லியன் ஒளியாண்டு அளவில் ‘சரஸ்வதி' என்று பெயரிடப்பட்ட பிரம்மாண்டமான கேலக்ஸி பெரும்கொத்து கண்டுபிடிக்கப் பட்டிருப்பது, இருள் ஆற்றல், பிக் பாங் மற்றும் பிரபஞ்சம் குறித்த நமது புரிதல்களைப் பெருமளவில் மாற்றும் என வானவியலாளர்கள் கருதுகின்றனர்.
சுமார் நான்கு பில்லியன் ஒளி யாண்டு தொலைவில், இந்திய வானவிய லாளர்களால் சரஸ்வதி என பெயரிடப்பட்ட கேலக்ஸிகளின் தொகுப்பு ஒன்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெயதீப் பாக்சி தலைமையில் இந்திய வானவியலாளர்கள் ஸ்லோன் டிஜிட்டல் ஸ்கை சர்வே எனும் வானவியல் ஆய்வு தரவுகளைத் தேடி ஆராய்ந்து இந்த பிரம்மாண்டமான கேலக்ஸிகளின் பெரும்கொத்தை கண்டுபிடித்துள்ளனர்.
“பிரபஞ்சம் பரிணாமம் அடைந்த போது கேலக்ஸிகள் போன்ற பெரும் அமைப்புகள் எப்படி தோன்றின, இருள் பொருள் மற்றும் இருள் ஆற்றலின் தன்மை என்ன போன்ற கேள்விகளுக்கு விடை தேட இந்த கண்டுபிடிப்பு பெரிதும் உதவும்” என இந்த ஆய்வில் ஈடுபட்ட மற்றொரு வானவியலாளர் சோமக் ராய் சவுத்திரி கூறுகிறார்.
நாலு பில்லியன் ஒளியாண்டு தொலைவில் 20 பில்லியன் மில்லியன் சூரிய நிறை கொண்ட 650 மில்லியன் ஒளியாண்டு அளவில் பெரிதான இந்த பிரம்மாண்ட கேலக்ஸி சூப்பர்கிளஸ்டரில் பத்தாயிரம் கேலக்ஸிகளுக்கும் மேல் இருக்கும் எனவும் இவை 42 கேலக்ஸி கொத்துகளாக இருக்கின்றன எனவும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
பிரபஞ்சத்தில் சூரியனைப் போன்ற பல கோடிக்கணக்கான விண்மீன்கள் தமக்குள்ள ஈர்ப்பு விசையால் இணைந்து கேலக்ஸி என்றும் அழைக்கப்படும் உடு மண்டல அமைப்பு ஏற்படும். இதுபோன்ற பல கேலக்ஸிகள் ஒன்று சேர்ந்து கேலக்ஸி கொத்து அமையும். பல கேலக்ஸி கொத்துகளின் தொகுப்புதான் கேலக்ஸி சூப்பர்கிளஸ்டர் அல்லது கேலக்ஸி பெரும்கொத்து. நமது சூரியன் பால்வழி மண்டலம் எனும் கேலக்ஸியில் உள்ளது. ஐம்பதுக்கும் மேற்பட்ட கேலக்ஸிகளை தம்முள் கொண்ட வட்டார கொத்தின் ஓர் அங்கம் தான் நமது பால்வழி மண்டல கேலக்ஸி. இலணியாக்கியா (Laniakea) எனும் பெரும்கொத்தின் ஓர் அங்கமே நமது வட்டார கொத்து.
எப்படி செதுக்கப்பட்டது
வேண்டிய வடிவத்தை தவிர ஏனைய கல்பகுதியை வெட்டி எடுத்து கல்லிலிருந்து சிலையை சிற்பி செதுக்குகிறார். ஆனால் மர பொம்மை செய்யும்போது கால், கை தலை என தனித்தனியாக செய்து அதனை ஒன்றுடன் ஒன்று பொருத்தி மரபொம்மை தயாரிக்கப்படுகிறது. அதுபோல பிரபஞ்சத்தின் பெரும் அமைப்புகள் கொத்துக்கள் எப்படி ஏற்பட்டன என்பது குறித்து இரண்டு எதிரும் புதிருமான கருத்துகள் உள்ளன.
ஜிம் பீபுள்சு (Jim Peebles) எனும் வானவியலாளர் கீழிருந்து மேலாக, விண்மீன், விண்மீன்கள் அடங்கிய கேலக்ஸி, கேலக்ஸிகள் அடங்கிய கேலக்ஸி கொத்து, கொத்துகள் பிணைத்து பெரும்கொத்து என பெரிய பெரிய பிரபஞ்ச அமைப்புகள் மரபொம்மை தயாரிப்பு போல உருவாகின்றன என கூறினார். இதற்கு மாறாக சோவியத் வானவியலாளர் யாகோவ் போரிசோவிச் செல்டோவிச் (Zel'dovich) சிற்பி சிலை செதுக்குவது போல பிரபஞ்சம் உருவானபோது எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பொருளில் மேலிருந்து கீழாக அமைப்பு ஏற்படுகிறது என கூறினார். இதில் யார் சரி என்பது இன்னமும் விடுபடாத புதிர்.
நூறு மில்லியன் ஒளியாண்டு அளவு பெரிதாக இருக்கும் பல நூறு கேலக்ஸி பெரும்கொத்துகளை இதுவரை இனம் கண்டுள்ளனர் என்றாலும் ஐநூறு மில்லியன் ஒளியாண்டுக்கும் கூடுதல் அளவுள்ள ராட்சத சூப்பர்கிளஸ்டர்கள் ஐந்து ஆறு தான் இதுவரை இனம் காணப்பட்டுள்ளது. சரஸ்வதி சூப்பர்கிளஸ்டர் இதில் ஒன்று. எனவே பெரும் முக்கியத்துவம் பெறுகிறது என்கிறார் சோமக் ராய்சவுத்திரி.
யாரும் திடீர் என ஒரே நாளில் ஐந்து கிலோ எடை கூடவோ குறையவோ முடியாது அல்லவா? எடை கூட வேண்டும் என்றாலும் குறையவேண்டும் என்றாலும் குறிப்பிட்ட கால அவகாசம் வேண்டும். தற்போது வானவியலாளர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள பீபுள்சின் கீழிருந்து மேல் என்ற கருத்து மெய் எனில் ஈர்ப்பு விசையால் கேலக்ஸிகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து அதன் பின்னர் அவை கொத்து அமைப்பு பெற்றும் கொத்துகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து பெரும்கொத்து உருவாக பல காலம் பிடிக்கும். பல நூறு மில்லியன் ஒளியாண்டு அளவுக்கும் பெரிதான சூப்பர்கிளஸ்டர் கொத்து உருவாக கூடுதல் காலஅவகாசம் வேண்டும்.
சரஸ்வதி எனும் இந்த பெரும் கொத்து பிரபஞ்சம் தோன்றிய பெரும் வெடிப்புக்கு பின்னர் பத்து பில்லியன் ஆண்டுகளிலேயே தோன்றியுள்ளது. இவ் வளவு பிரம்மாண்டமான சூப்பர்கிளஸ்டர் உருவாக இந்த கால அவகாசம் போதாது. எனவே இந்த கண்டுபிடிப்பு பீபுள்சின் கீழி ருந்து மேல் என்ற கருத்துக்கு முரணாக அமைகிறது. இதுவரை பிரபஞ்சத்தின் இளமை காலம் குறித்து உள்ள கருத்து களை மீள்பார்வை செய்யவேண்டும் என ஜெயதீப் பாக்சி கூறுகிறார்.
பிரபஞ்ச அளவில் பார்க்கும்போது பொருள்கள் மற்றும் இருள் பொருள் களுடன் வினை செய்யும் ஈர்ப்பு ஆற்றலை தவிர விலக்கு தன்மை கொண்ட இருள் ஆற்றலும் செயல்படுகிறது. ஈர்ப்பு விசை பொருள்களை ஈர்த்து பிணைப்பு செய்தால், இருள் ஆற்றல் பிரபஞ்ச விசும்பை விரித்து ஈர்ப்பு ஆற்றலுக்கு எதிராக செயல்படுகிறது. இந்த இரண்டு ஆற்றல்களின் சமநிலை தான் பிரபஞ்சத்தில் உருவாகும் பெரும் அமைப்புகள் ஆகும். எனவே எப்படி கேலக்ஸி பெரும்கொத்துகள் உருவாயின என்பது இதுவரை மர்மமாக இருக்கும் இருள் ஆற்றலை குறித்து விளங்க உதவும்.
சரஸ்வதி பெயர் ஏன்?
1989-ல் மாணவராக இருந்தபோது இந்த ஆய்வில் பங்கேற்ற சோமக் ராய் சவுத்திரி தான் முதன்முதல் சூப்பர் கிளஸ்டர் கேலக்ஸி பெரும்கொத்தை கண்டுபிடித்தார். கேலக்ஸிகள் குறித்து ஆய்வு செய்த முன்னோடி அமெரிக்க வானவியல் ஆய்வாளர் ஆர்லோவ் சேப்ளே (Harlow Shapley) பெயரில் அதை ‘சேப்ளே கேலக்ஸி பெரும்கொத்து’ என்று பெயரும் சூட்டினர்.
கலை கல்வி படைப்பாக்கத்துக்கு கடவுள் என புராணத்தில் கருதப்படும் சரஸ்வதி வடமொழியில் பல நதிகளின் இணைப்பு எனவும் பொருள்படும். பத்தாயிரம் கேலக்ஸிகள் கொண்ட நாற்பத்தி இரண்டு கேலக்ஸி கொத்துகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து உருவான இந்த கேலக்ஸி பெரும்கொத்துக்கு இதன் காரணமாக தான் சரஸ்வதி என பெயரிட துணிந்தோம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கிளை நதிகள் ஒன்றுடன் ஒன்று கலந்து பெருநதி உருவாவது போலதான் சூப்பர்கிளஸ்டர் அசப்பில் காட்சி தரும்.
‘சரஸ்வதி’ பெரும்கொத்து
முக்கிய செய்திகள்
மற்றவை
8 days ago
மற்றவை
15 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
5 months ago