இந்த பொம்மைகள் இவரை வாழவைக்கும்..

By பி.டி.ரவிச்சந்திரன்

அந்தப் பெண்ணுக்கும் வாய் பேசமுடியாது; காதும் கேக்காது. அவளப் பெத்தவளுக்கும் பார்வை இல்ல.. ரெண்டு பேரும் என்னதான் செய்வாங்க பாவம்!’ - யாரையும் இப்படி பரிதாபப்பட விடாத பஞ்சவர்ணம், தனக்கிருக்கும் குறையை சவாலாக எடுத்துக் கொண்டு தன்னம்பிக்கைத் தளிராய் மிளிர்கிறார்.

திண்டுக்கல் அருகே வேடபட்டி பஞ்சவர்ணத்தின் சொந்த ஊர். சிறுவயதிலிருந்தே வாயும் பேசாத காதும் கேட்காத மாற்றுத்திறனாளி பெண் இவர். இதனால், பள்ளிக்குச் சென்று இவரால் படிக்கமுடியவில்லை. தன் சோட்டுப் பிள்ளைகள் புத்தகப் பைகளைச் சுமந்து பள்ளிக்குச் சென்று கொண்டிருக்க, தினமும் தனது வீட்டுக்கு அருகிலிருந்த சுடுமண் (டெரகோட்டா) பொம்மைகள் தயாரிக்கும் கலைக் கூடத்தை வேடிக்கை பார்த்தார் பஞ்சவர்ணம்.

‘பார்க்கப் பார்க்க எதுவும் பழக்கத்துக்கு வந்துவிடும்’ என்று சொல்வார்களே.. அதுபோல, வேடிக்கை பார்க்கப்போன இடத்தில், சிதறிக்கிடந்த களிமண்ணை எடுத்து பொம்மை பிடித்துப் பார்த்தார் பஞ்சவர்ணம். இவரது ஆர்வத்தைப் பார்த்து அங்கிருந்த மற்றவர்களும் அரவணைக்க, சித்திரமாய் பொம்மைகள் செய்யச் சீக்கிரமே பழகிக் கொண்டார்.

மாதம் நான்காயிரம் சம்பாதிக்கிறார்

பொம்மை செய்யும்போது ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் அதை மற்றவர்களிடம் வாயால் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியாது என்பதால் கண்களாலேயே கலையைப் படித்து, அனைத்து நுணுக்கங்களையும் அற்புதமாய் கற்றுக் கொண்டார் பஞ்சவர்ணம். இப்போது, தனது வீட்டிலிருந்து தினமும் பத்து கிலோ மீட்டர் தூரம் பயணித்து சுடுமண் பொம்மை கலைக்கூடத்தில் பொம்மைகளை செய்துகொடுத்து வருகிறார்.

யானை, குதிரை, அலங்கார விளக்குகள், விநாயகர் சிலை என சுடுமண் பொம்மைகள் இவரது கைவண்ணத்தில் கலைநயம் பேசுகின்றன. சக தொழிலாளர்கள், சற்றே நேர்த்திக் குறைவாக பொம்மைகளை செய்தாலும் கண்ஜாடை மூலமே அதை எடுத்துச் சொல்லித் திருத்தும் பஞ்சவர்ணம், இப்போது மாதம் நான்காயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்.

panjajpgபஞ்சவர்ணம்

தனது மூன்று சகோதரிகளும் திருமணமாகிச் சென்றுவிட்ட நிலையில், திருமணத்தைப் பற்றியெல்லாம் பெரிதாக ஆசைகளை வளர்த்துக் கொள்ளவில்லை பஞ்சவர்ணம். இப்போதைக்கு இவருக்குத் துணை பார்வையிழந்த இவரது தாய். அவருக்கும் இவரது வருமானம்தான் சோறு போடுகிறது.

பொம்மைக் கலைக்கூடத்தில் ஒன்றாகப் பணிபுரியும் பஞ்சவர்ணத்தின் சகோதரி கணவர் இருளப்பன் அவரைப் பற்றிப் பேசினார். “காலையில் நான் வேலைக்குப் போகும்போது பஞ்சவர்ணத்தையும் கூட்டிட்டுப் போவேன். தொழிலைக் கத்துக்கணும்கிற ஆர்வம் இருந்ததால சீக்கிரமே தொழிலைக் கத்துக்கிருச்சு. அது, இப்ப அம்மா, மகள் இருவருக்கும் கைகுடுக்குது.

கல்யாணம் கட்டிக்க முன்வரல

மகன் இருந்துருந்தாக்கூட தாயை இப்படிக் கவனிச்சிருப்பாரான்னு எனக்குச் சொல்லத் தெரியல. அந்த அளவுக்கு ஓவியமா தன்னோட அம்மாவ பஞ்சவர்ணம் பாத்துக்குது. இதுக்கும் ஒரு திருமணத்தை செஞ்சுவைக்கலாம்னு முயற்சி எடுத்தோம். ஆனா, குறையை பெருசுபடுத்தாம கல்யாணம் கட்டிக்க யாரும் முன்வரல. பஞ்சவர்ணமும் அதை ஒரு பெரிய விஷயமா எடுத்துக்கல” என்கிறார் இருளப்பன்.

இரண்டு வயதுக்குள் நாம் பேசக் கற்றுக்கொள்கிறோம். ஆனால், எத்தனை வயதானாலும் எப்படிப் பேசவேண்டும் என்பதை நாம் கற்றுக் கொள்வதில்லை. பஞ்சவர்ணம், பேசாமலேயே நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறார். அதனால், எதற்கும் சலனப்படாமல் வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழ்கிறார். நிச்சயம், இந்த பொம்மைகள் இவரை வாழவைக்கும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

1 day ago

மற்றவை

3 days ago

மற்றவை

14 days ago

மற்றவை

19 days ago

மற்றவை

26 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மேலும்