யாருக்காக சிரித்தோமோ அவரை ஒருவேளை மறந்துவிடலாம். ஆனால், யாருக்காக அழுதோமோ அவரை ஒருநாளும் நம்மால் மறக்க முடியாது!
குழந்தை கமிலாவை இன்னும் மறக்காமல் நெஞ்சில் வைத்திருக்கிறார் டாக்டர் ஜெயபோஸ். காரணத்தைக் கேட்டால் நெகிழ்ந்துபோவீர்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபோஸ் 1968-ல் எம்.பி.பி.எஸ். படித்துவிட்டு அமெரிக்காவுக்கு சம்பாதிக்கப் போனவர். நியூயார்க்கில் உள்ள வெஸ்ட் செஸ்டர் மெடிக்கல் சென்டரில் குழந்தைகள் நல மருத்துவர் போஸ். 30 வருடங்கள் அங்கே மருத்துவராய் இருந்தவரை மூன்று வயது கமிலாவின் மரணம் ரொம்பவே பாதித்தது.
கமிலா யார்? அவளுக்கு என்ன ஆனது? ஏன் இறந்தாள்?
“கமிலாவுக்கு வயதை மிஞ்சிய அறிவு. அவளுக்கு வந்த நோயும் அப்படித்தான். ரத்தப் புற்றுநோய். அவளுக்கிருந்த நோயின் வீரியத்தை பெரியவர்களாலேயே தாங்கிக்கொள்ள முடியாது. ஆனால், கமிலா அழவே மாட்டாள். எந்த நேரமும் சிரித்த முகமாய் இருப்பாள். அந்த ஆஸ்பத்திரிக்கே அவள் செல்லக்குழந்தை.
எப்படியும் அவளை காப்பாற்றிவிடலாம் என்றுதான் நினைத்தோம். இயற்கையின் கணக்கு வேறுமாதிரி ஆகிவிட்டது. கடைசி நாட்களில் அந்தக் குழந்தை வேதனை தாங்கமுடியாமல் கதறியபோது நானும் அழுதுவிட்டேன்.
எத்தனையோ பிள்ளைகளை குணப்படுத்தி அனுப்பிய நம்மால் இந்தக் குழந்தையை காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தமும் தவிப்பும் என்னை அங்கே இருக்கவிடவில்லை. இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நினைவு என்னை மதுரைக்கு தள்ளிக்கொண்டு வந்துவிட்டது’’ என்கிறார் ஜெயபோஸ். பத்து லட்ச ரூபாய் சம்பளத்தை உதறிவிட்டு வந்திருக்கிறார்.
“2006-ம் ஆண்டு சர்வேபடி, உலகில் புற்றுநோய் பாதித்த குழந்தைகளில் 85 சதவீதம் பேர் ஏழை நாடுகளிலும் வளரும் நாடுகளிலும்தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு முறையான சிகிச்சைகள் கிடைப்பதில்லை. இதை மனதில் வைத்துத்தான் 2009-ல் இந்தியாவுக்கு கிளம்பினேன். மதுரையில் குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை மையத்தை கமிலா பெயரிலேயே ஆரம்பிக்க நினைத்தேன். மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இடம் கொடுத்தார்கள்.
இல்லாதவர்களுக்கும் சிகிச்சை தரணும் கிறதுக்காக கமிலா பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்தேன். நண்பர்கள் மூலமாகவும், பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தும், கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் கமிலா அறக்கட்டளைக்கு சிறுகச் சிறுக காசு சேர்த்தோம்.
புற்றுநோய் சிகிச்சைக்காக வரும் குழந்தைகளிடம் நாங்கள் எந்தவித கட்டணமும் கேட்பதில்லை. வசதியானவர்களாக இருந்தால் மட்டும் மருந்துக்கான பணத்தைக் கட்டச் சொல்வோம்.
பணம் இல்லை என்பதற்காக எந்தக் குழந்தைக்கும் சிகிச்சை மறுக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதனால்தான் ஒரு குழந்தைக்கு 7 லட்ச ரூபாய்க்கான சிகிச்சையை இலவசமாக கொடுத்து காப்பாற்றினோம். அதே சமயம், எங்களால் குணப்படுத்தப்பட்ட குழந்தைகளின் உறவுகள் கமிலா ஃபண்டுக்கு தாராளமாய் கைகொடுக்கிறார்கள். லண்டனில் இருக்கும் வினய் என்ற பையனை நாங்கள் காப்பாற்றியதற்காக டெல்லியில் உள்ள அவனது அத்தை 31 லட்சம் கொடுத்திருக்கிறார்.
இதுவரை சுமார் 400 குழந்தைகளுக்கு புற்றுநோய் சிகிச்சையளித்து அதில் 70 சதவீதம் பிள்ளைகளை குணப்படுத்தியும் இருக்கிறோம். இதில், பாதிக்கு மேல் இலவச சிகிச்சைதான்.
இன்னொரு கமிலாவை இழந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்” தீர்க்கமாகவும் திடமாகவும் சொன்னார் ஜெயபோஸ்.
முக்கிய செய்திகள்
மற்றவை
8 days ago
மற்றவை
16 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
5 months ago