மரக்கிளையில் சிக்கி 6 நாளாக உயிருக்கு போராடிய காகம் மீட்பு: தி இந்துவின் உங்கள் குரல் சேவையால் நடவடிக்கை

சென்னை மேடவாக்கம் அடுத்த சித்தாலப்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து ஒக்கியம்பாக்கம் செல்லும் சாலையில் பழமையான பெரிய மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் கிளை உச்சியில் காகம் ஒன்று சிக்கி 6 நாட்களாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. அந்த மரத்தின் எதிரே இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் டி.எம்.குருநாதன், காகத்தை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

இந்நிலையில், வாசகர்கள் தாங்கள் சந்திக்கும் சமூகப் பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் குறித்து தங்கள் குரலிலேயே பதிவு செய்யும் வகையில், 'உங்கள் குரல்' என்ற சேவையை 'தி இந்து' நாளிதழ் அறிவித்தது. இதைப் பார்த்த குருநாதன், ' >உங்கள் குரல்' வசதியை பயன்படுத்தி காகம் சிக்கிய தகவலை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இதையடுத்து, 'தி இந்து' நிருபர் அளித்த தகவலின்பேரில் புளூ கிராஸ் அமைப்பின் பொது மேலாளர் டான் வில்லியம் தலைமையில் தன்னார்வலர்கள் சதீஷ், முகுந்த் ஆகியோர் சென்று, பொதுமக்கள் உதவியுடன் மரக்கிளையில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காகத்தை பத்திரமாக மீட்டனர். அதற்கு உடனடியாக தண்ணீர் கொடுக்கப்பட்டது. பின்னர், புளூ கிராஸ் அமைப்பினர் காகத்தை தூக்கிச் சென்று சிகிச்சை அளித்தனர்.

இதுதொடர்பாக புளூ கிராஸ் அமைப்பின் பொது மேலாளர் டான் வில்லியம் கூறும்போது, ''மரத்தின் கிளையில் இருந்த மாஞ்சா நூல், காகத்தின் இறக்கையில் மாட்டிக் கொண்டது. அதனால், பறக்க முடியாமல் கிளையில் காகம் சிக்கிக் கொண்டது. மாஞ்சா நூல் அறுத்ததில் காகத்தின் இறக்கை கொஞ்சம் துண்டாகியுள்ளது. அதற்கு சிகிச்சை அளித்து வருகிறோம்'' என்றார்.

வாசகர் குருநாதன் கூறும்போது, ''வீட்டின் எதிரே உள்ள மரக் கிளையில் 5, 6 நாட்களுக்கு முன்பு காகம் ஒன்று சிக்கியது. அதைப் பார்க்கவே மிகவும் கஷ்டமாக இருந்தது. மற்ற காகங்கள் அவ்வப்போது வந்து, கிளையில் சிக்கிய காகத்துக்கு உணவு கொடுப்பதைப் பார்த்தேன். காகங்களே வந்து உதவும்போது, நாம் ஏன் உதவக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது. அந்த நேரத்தில்தான், 'தி இந்து' தமிழ் நாளிதழில் 'உங்கள் குரல்' சேவை பற்றிய அறிவிப்பை பார்த்தேன். உடனடியாக போனில் தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தேன்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE