பணம் புழங்காத உலகம் படைக்கலாம்!

இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் உள்ள அத்தனை பேரையும் ஊழலற்ற உத்தமர்களாக்க உங்களால் யோசனை சொல்ல முடியுமா? கேள்வியைப் பார்த்ததும் தலைச்சுற்றல் வருகிறதா? ஆனால், அதற்கான அருமையான திட்டத்தை வைத்திருக்கிறார் மதுரை யைச் சேர்ந்த பாலாஜி.

பி.காம். பட்டதாரியான பாலாஜிக்கு ஐபிஎஸ் அதிகாரியாக வரவேண்டும் என்பது கனவு. அது வெற்றி பெற முடியாமல் போனதால் தற்போது எல்.ஐ.சி-யில் டெவலப்மென்ட் ஆபீஸ ராக இருக்கிறார். பணியில் சேர்வதற்கு முன்பு, அண்ணா ஹசாரேயின் ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பின் மதுரை தொடர்பாளராக இருந்தார். பிறகு, அரவிந்த் கெஜ்ரி வாலின் ‘ஆம் ஆத்மி’ கட்சியில் ஊழலை ஒழிக்கும் 7 பேர் கமிட்டியில் மெம்பராக இருந்தார். உலகத்தையே உத்தமர் பூமியாக்க முடியும் என எப்படி சொல்கிறார் பாலாஜி? அவரது திட்டத்தைக் கேட்போம்.

ரூபாய் நோட்டுக்கு குட்பை

ஒரு நாட்டுக்கு சவாலாக நிற்பது ஊழல், கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், பாலியல் வன்முறைகள், விலைவாசி உயர்வு. இவை அத்தனைக்கும் காரணம் பணம். ரூபாய் நோட்டுக்களை ஒழித்து விட்டால் இவை எதுவுமே நடக்காதல்லவா? சரி, ரூபாய் நோட்டுக்களை எப்படி ஒழிப்பது, அது சாத்தியமா என கேட்கலாம். அதற்குத்தான் இந்த யோசனை.

குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் நாட்டில் உள்ள அனைவரையும் (குழந்தைகள் உள்பட) வங்கிக் கணக்கு தொடங்க வைக்க வேண்டும். மக்கள் கைவசம் உள்ள மொத்தப் பணத்தையும் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்த வைக்க வேண்டும். 25 ரூபாய்க்கு குறைவான செலவுகளுக்காக ஒன்று, இரண்டு, ஐந்து ரூபாய் காயின்களை ஒரு குடும்பத்துக்கு மாதம் 500 ரூபாய் மட்டும் வைத்துக்கொள்ள அனுமதிக்கலாம்.

வங்கிக் கணக்குகளில் எல்லோரும் பணம் செலுத்திய பிறகு, ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறி வித்துவிட வேண்டும். பின்னர் யார் பெயரில் எவ்வளவு ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதோ அத்தனையை யும் புள்ளிகளாக மாற்ற வேண்டும். (ஆயிரம் ரூபாய் என்றால் ஆயிரம் புள்ளிகள்). இந்தப் புள்ளிகளை வங்கிப் பரிவர்த்தனைகள் மூலமாகவோ, டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலமாகவோ ஒருவர் கணக்கிலிருந்து இன்னொருவர் கணக்குக்கு மாற்றலாம்.

ஜவுளிக் கடையில் ஆயிரம் ரூபாய்க்கு துணி எடுத்தால் உங்கள் கணக்கில் இருந்து ஆயிரம் புள்ளிகள் ஜவுளிக்கடை அக்கவுண்டுக்கு மாறி விடும். எதற்காக, யாரால், யாருக்கு பணம் கொடுக்கப்பட்டது என்ற விவர மும் அதில் இருக்க வேண்டும்.

கள்ள நோட்டு ஒழியும்

புள்ளிகளை டிரான்ஸ்பர் செய்ய வசதியாக விற்பவர், வாங்குபவர், கடன், எம்ப்ளாயீ, எம்ப்ளாயர் என எட்டு வகையான இனங்களை உருவாக்க வேண்டும். இந்த சிஸ்டம் அமலுக்கு வந்தால், கள்ள நோட்டும் கறுப்புப் பணமும் அடியோடு ஒழியும். நாட்டில் விலைவாசி உயர்வுக்கும் பெரும்பகுதி ஊழலுக்கும் காரணமே ரியல் எஸ்டேட் தொழில்தான். லட்சம் ரூபாய் மதிப்புள்ள இடத்தை வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு பத்திரப்பதிவு செய்கிறார்கள். மீதி தொண்ணூறு ஆயிரம், கறுப்புப் பணமாக கைமாறுகிறது.

ஒரே நிலமதிப்பு

இதைத் தடுக்க ஒரே வழி, காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ஒரே சீரான நிலமதிப்பை நிர்ணயிக்க வேண்டும். ஒருவர் தனது சொத்தை விற்க நினைத்தால், அதை முதலில் அரசுக்கு எழுதிக் கொடுக்க வேண்டும். அது தொடர்பாக அரசு விளம்பரம் கொடுத்து, தான் விரும்புகிறவர்களுக்கு அந்தச் சொத்தை விற்கும். சொத்துக்காரருக்கு உரிய பணம் புள்ளிகளாக அவரது வங்கிக் கணக்கில் சேர்ந்துவிடும்.

நாட்டில் அனைவருமே நல்ல வர்கள்தான். சிஸ்டம்தான் பலரை கிரிமினல்களாக மாற்றி வைத்தி ருக்கிறது. சிஸ்டம் சரியாகிவிட்டால் அனைவரையுமே உத்தமர்களாக்கி விடலாம்.

ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது?

எனது யோசனையை நரேந்திர மோடி, ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு அனுப்பி வைத்தேன். ‘இது அரசாங் கத்தின் கொள்கை. முடிவு நாங்கள் எதுவும் செய்ய முடியாது’ என்று பதில் வந்திருக்கிறது. அரசு சட்டப் படியான தனது கடமையை செய்யத் தவறும் பட்சத்தில் கோர்ட் தலையிடக் கோரி ‘ரிட் ஆஃப் மேன்டமஸ்’ தாக்கல் செய்யலாம். எனது யோசனையை அமல்படுத்தக் கோரி பொதுநல அமைப்புகள் மூலம் ‘ரிட் ஆஃப் மேன்டமஸ்’ தாக்கல் செய்வதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறேன்… உறுதியுடன் பேசினார் பாலாஜி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE