மதுரை: ஆணையர் கிரண்குராலா மாற்றத்தால் கனவாகிப்போன ‘ஹைடெக்’ திட்டங்கள்

By அ.வேலுச்சாமி

மதுரை மாநகராட்சி ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அவர் முயற்சித்து வந்த ஹைடெக் திட்டங்கள் அனைத்தும் கனவாகிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பும், இடமாற்றமும்

மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக கிரண்குராலா கடந்த நவம்பரில் நியமிக்கப்பட்டார். பி.டெக். முடித்தவர், நேரடி ஐஏஎஸ் அதிகாரி, இளம் வயதுடையவர் என்பதால் இவர் மீது மக்களிடம் பெரியளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அதற்கேற்ப கிரண்குராலாவின் நடவடிக்கைகளும் இருந்தன. துப்புரவுப்பணி, வரி வசூலை தீவிரப்படுத்தியது, ரிங்ரோடு சுங்கச்சாவடிகளில் கெடுபிடி, வாகனங்களின் எரிபொருள் மிச்சம் மூலமும் வருவாயை பெருக்கினார். ஒவ்வொரு பணியையும் நேரில் ஆய்வு செய்தார். தரமில்லாத பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மறுத்தார்.

இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் மக்களிடம் வரவேற்பை பெற்றன. அதேசமயம் தாங்கள் எதிர்பார்க்கும் பணிகளுக்கு, உடனே ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தியது ஆளும்தரப்பினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதன் விளைவு ஆணையர் கிரண்குராலா சென்னை வேளாண் துறை கூடுதல் இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டு விட்டார். இதன்மூலம், மதுரை மாநகரின் வளர்ச்சிக்காக அவர் செய்ய நினைத்திருந்த சில ஹைடெக் திட்டங்களும் கனவாகிப் போயின. அவை பற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

மாநகராட்சி கால்சென்டர்

சாலை, பாதாளச் சாக்கடை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக தற்போது மேயர், துணைமேயர், ஆணையர், உதவி ஆணையர், கவுன்சிலர்கள் என பலரிடம் பொதுமக்கள் குறைகளைத் தெரிவிக்கின்றனர். தொடர் பின்பற்றுதல் இல்லாமை, தகவல் தொடர்பில் ஏற்படும் இடைவெளி காரணமாக இவற்றில் சில குறைகள் நீண்ட நாளாகியும் சரி செய்யப்படுவதில்லை.

இதைத் தவிர்க்க மாநகராட்சிக்கென ‘கால் சென்டர்’ அமைக்கத் திட்டமிட்டிருந்தார். இதற்கான பிரத்யேக எண்ணில் தொடர்பு கொண்டு குறையைச் சொன்னால், உடனே சம்பந்தப்பட்ட வார்டு அடங்கியுள்ள உதவி ஆணையர், பொறியாளர்களுக்கு அதுபற்றிய எஸ்.எம்.எஸ். சென்றுவிடும்.

அடுத்த 48 மணி நேரத்துக்குள் அந்தக் குறை நிவர்த்தி செய்யப்பட்டதா என புகார்தாரருக்கு தகவல் தெரிவிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

பைல் ட்ராக்கிங் சிஸ்டம்

மாநகராட்சி அலுவலகங்களில் ஏதேனும் ஒரு பணிக்காக விண்ணப்பம் செய்தால், அதன்பின் மக்கள் நாள்கணக்கில் நேரில் அலைய வேண்டியுள்ளது. குறிப்பாக நகரமைப்பு, சுகாதாரம் போன்ற பிரிவுகளில் இந்த நிலை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக ‘பைல் ட்ராக்கிங் சிஸ்டத்தை’ கொண்டு வரத் திட்டமிட்டார்.

இதன்மூலம் ஒவ்வொரு விண்ணப்பம் அல்லது மனுவுக்கும் ஒரு எண் அளிக்கப்படும். அந்த எண்ணை மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவு செய்தால் தற்போது தங்களின் விண்ணப்பம் எந்த அதிகாரியிடம் நிலுவையிலுள்ளது என்ற விவரத்தை பொதுமக்கள் வீட்டிலிருந்தே தெரிந்துகொள்ள முடியும். இதனால் மக்களின் அலைச்சல் தவிர்க்கப்படுவதுடன், கோப்புகள் ஒரே இடத்தில் நீண்ட நாள் தேக்கமடைவதும் தவிர்க்கப்படும். இதற்கான சாப்ட்வேர் வடிவமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்தது.

வாய்க்கால் வழித்தடம்

மதுரை மாநகரில் பல இடங்களில் நீண்ட மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் உள்ளன. அவற்றில் தற்போது கான்கிரீட் தடுப்புகளைக் கொண்டு மூடும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிந்ததும் வாய்க்காலின் இரு கரை பகுதிகளையும் சீரமைத்து அவற்றில் சைக்கிள், பைக் மட்டும் செல்லும் வகையில் ‘வாய்க்கால் வழித்தடம்’ ஏற்படுத்துவது பற்றி ஆலோசித்து வந்தார். இதற்காக எந்தெந்த வாய்க்கால்கள், எந்தெந்த சாலைகளில் இணைகின்றன என்ற விவரமும் கணக்கிடப்பட்டுவந்தது. இதை செயல்படுத்துவதன் மூலம் வாய்க்கால் கரை ஆக்ரமிப்பு தவிர்க்கப்படுவதுடன், முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலையும் குறைக்க முடியும்.

இவைதவிர மாநகராட்சிக்குள்பட்ட சுங்கச்சாவடிகளில் தானியங்கி கதவுகளுடன் கூடிய கம்ப்யூட்டர் பில்லிங் முறையை அமல்படுத்தவும், ‘மும்முறை பாஸ்வர்டு திட்டம்’ மூலம் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வழங்குவது பற்றியும் ஆலோசித்துவந்தார். இந்த நிலையில் கிரண்குராலா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால், இந்தத் திட்டங்கள் அனைத்தும் கனவாகிப்போகும் நிலை ஏற்பட்டுவிட்டது என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

2 days ago

மற்றவை

3 days ago

மற்றவை

14 days ago

மற்றவை

19 days ago

மற்றவை

26 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மேலும்