பாதுகாப்பு இல்லாத அமைந்தகரை நடைபாலம்; அச்சத்தில் மக்கள்- மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி

By எல்.ரேணுகா தேவி

சென்னை அமைந்தகரையில் உள்ள மாதா கோயில் தெருவில் இருக்கும் நடைபாலம் பிரதான சாலையான திருவள்ளுவர்புரம் பகுதியை இணைக்கும் முக்கியமான பாலம் ஆகும். இப்பாலம் போதுமான பராமரிப்பின்றி இருப்பதால் எந்த நேரமும் விழுந்துவிடும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கூவம் கரைக்கு மேல் இந்த நடைபாலம் அமைக்கப்பட்டதாகவும், கூவம் கரையோரம் இருந்த குடிசைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டபோது பொக்லைன் இயந்திரம் பாலத்தின் மீது மோதியதில் நடைபாலத்தின் சுவர் ஒரு பக்கமாக உடைந்ததாகப் பகுதி மக்கள் கூறினர்.

இதனைத் தொடர்ந்து நடைபாலத்தின் கைப்பிடி மற்றும் தாங்கு தூண் நாளடைவில் சேதமடைந்து தற்போது வலுவற்ற நிலையில் உள்ளது.

இப்பகுதி மக்கள் எங்கு செல்வதாக இருந்தாலும் பிரதானச் சாலையை இணைக்கும் இந்த நடைபாலத்தை கடந்துதான் செல்ல வேண்டியுள்ளது.

இப்பகுதி மக்கள் ஒன்று கூடி பாலத்தை சீரமைப்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.

இது குறித்து அந்தப் பகுதியில் வசித்து வரும் மகேந்திர லச்சாவு கூறுகையில், ''இந்தப் பாலத்தைக் கடந்துதான் பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. கைப்பிடி சுவர் இல்லாததால் மாணவர்கள் கூவத்தில் விழுந்துவிடும் அச்சத்துடன் ஒவ்வொரு நாளும் செல்ல வேண்டியுள்ளது'' என்றார்.

தனலட்சுமி என்பவர் கூறுகையில், ''மாநகராட்சி அதிகாரிகள் பாலத்தைச் சரி செய்ய ஜல்லி, செங்கல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை கொண்டுவந்து சீரமைப்புப் பணியை தொடங்கினர். ஆனால் அந்தப் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை'' என்றார்.

சகுந்தலா என்பவர் கூறுகையில், ``கோயிலுக்குச் சென்றுவிட்டு என்னுடைய பேத்தியுடன் பாலத்தைக் கடக்க முயன்றபோது கால் இடறிக் கைப்பிடி இல்லாததால் விழுந்துவிட்டேன் பிறகு அருகில் இருந்தவர்கள் காப்பாற்றினார்கள்'' என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, “சேதமடைந்துள்ள நடைபாலத்தில் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கைப்பிடி அமைக்கப்படும். புதிய பாலம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து மாநகராட்சியின் பாலங்கள் அமைக்கும் பிரிவினரிடம் எடுத்துக் கூறப்படும்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE