மசாலா சுண்டல்: குஜராத்மேனியா முதல் மதுரை டெரர் ஸ்டார் வரை

By செய்திப்பிரிவு



குழந்தைகளிடையே காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்குவதற்காக மாநிலத்தில் செயல்படும் 'ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்டம்'2 கோடியே 23 லட்சத்து 16 ஆயிரம் குழந்தைகளை உள்ளடக்க வேண்டியது; ஆனால், 63 லட்சத்து 37 ஆயிரம் குழந்தைகளைத் தவிர்த்திருக்கிறது என்று விளாசியிருக்கிறது சிஏஜி.

நாமமேனியா?

***

கென்ய திடீர் தாக்குதலால் திரும்பிப் பார்க்க வைத்த 'அல் ஷபாப்' இயக்கத்துக்கு அதன் சொந்த மண்ணிலேயே அதிரடி வைத்தியம் நடந்திருக்கிறது. சோமாலியாவில் அதன் முக்கியமான கேந்திரத்தின் மீது தாக்குதல் நடந்திருக்கிறது. கடல் பகுதி வழியாக நடத்தப்பட்ட தாக்குதல் இது என்கிறார்கள். தாக்குதலை நடத்தியது யார் என்று தெரியவில்லை. 'அல் ஷபாப்' இதை மறைக்க முற்பட்டாலும், தாக்குதலில் இறந்த ஒருவருடைய சடலம் காட்டிக்கொடுத்துவிட்டது. அடுத்த அடி எங்கிருந்து வருமோ என்று அரண்டு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

யார் சுட்டாலும் துப்பாக்கி சுடும்!

***

கியூபாவில் விளையாட்டுகள் மீது மக்களுக்குத் தீராத மோகம். விளையாட்டு வீரர்களுக்கும் தங்களுடைய திறமையை வளர்த்துக்கொள்ள வெளிநாடுகளுக்குச் செல்வதில் பேரார்வம்தான். அமெரிக்காவுடன் கொண்டுள்ள பிணக்கால், இதுவரை வீரர்கள் வெளிநாடு செல்ல கியூப அரசு அனுமதிக்கவில்லை. இதனிடையே கியூபாவைவிட்டு வெளியேறிய பேஸ்-பால் மன்னன் யாசீல் பியூக் 'லாஸ் ஏஞ்செலஸ் டாட்ஜர்ஸ்' அணியில் சேர்ந்து கலக்க, மற்ற வீரர்கள் ஏங்கக் கூடாது என்று வீரர்கள் வெளிநாடு செல்ல அனுமதி அளித்துவிட்டார் அதிபர்.

அமெரிக்காவுல அகாசி கூப்பிட்டாக!

***

வெனிசுலாவின் தூதரக அதிகாரிகள் மூவரை வெனிசுலாவுக்கே திரும்பச் சொல்லியிருக்கிறது அமெரிக்கா. அதுவும் 48 மணி நேரத்துக்குள். கடந்த வாரம் வெனிசுலாவிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் மூவரை வெனிசுலா நாட்டைவிட்டு வெளியேற்றியதற்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை. அதிபரைக் கொல்ல சதி, பொருளாதாரத்தைக் குலைக்க முயற்சி என அமெரிக்காவின் மீது தொடர் குற்றச்சாட்டுகளை வெனிசுலா கூறிவருவது அமெரிக்காவைக் கடுப்பேற்றியிருக்கிறது.

அதுக்கு இது சரியாப் போச்சு

***

பொலிவியாவைச் சேர்ந்த போதை மருந்து கடத்தல்காரர்கள் தாழ்வாகப் பறந்த விமானத்திலிருந்து 10 லட்சம் டாலர்கள் (ரூ. 6,14,30,000) பணப்பொதியைத் தூக்கி வீசியிருக்கிறார்கள். கீழே தயாராகக் காத்திருக்கும் தங்கள் கும்பல் அதை எடுத்துக்கொள்வார்கள் என்று நினைத்து அவர்கள் பணத்தை வீசினால் பணம் சிக்கியதோ காவல் துறையின் போதைத் தடுப்புப் பிரிவினரின் கையில். சம்பவத்தோடு தொடர்புடைய பலரும் இப்போது சிறைக்குள்ளே. கூடுதல் தகவல்: கொகெய்ன் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் மூன்று நாடுகளில் பொலிவியாவும் ஒன்று.

வேலு நாயக்கராண்ட பாடம் படிங்கண்ணா!

***

ஈரானிலிருந்து பெட்ரோலிய எரிவாயுவை எடுத்துவரும் குழாய்ப் பாதையை அமைத்துக்கொள்ளும் ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரம் காட்டினால் அதன் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறார் அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணை அமைச்சர் வெண்டி ஷெர்மான்.

ஓநாயும் ஆட்டுக்குட்டிகளும்

***

நேபாளத்தில் மாவோயிஸ்ட் கட்சித் தலைவர் பிரசண்டவுக்கு எதிராக காத்மாண்டு தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார் பதம் குன்வர். முன்னாள் மாவோயிஸ்ட்டான இவர் பிரசண்டவைக் கன்னத்தில் அறைந்ததன் மூலம் பிரபலமானவர். இன்னொரு கன்னத்தையும் காட்டுவீங்களா பிரசண்ட? ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகள் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையை சிலே அதிபர் செபாஸ்டியன் பினேரா ஆதரித்திருக்கிறார்.

சிலேவுக்கு ஒரு சிலை பார்சேல்..!

***

லாலு சிறை சென்றது அவரது குடும்பத்தினருடன் சேர்த்து பிகாரின் புகைப்படக் கலைஞர்களுக்கும் கவலையாக மாறி இருக்கிறது. "செய்தியாளர்களைச் சந்திக்க மறுத்தாலும், புகைப்படக்காரர்கள் தன்னைப் படம் எடுக்க லாலு மறுப்புத் தெரிவிப்பதே இல்லை. மேல் சட்டையில்லாமல், கையில் கம்புடன் எனப் பல்வேறு வகையில் லாலு கொடுக்கும் படங்கள் கண்டிப்பாக தேசிய பக்கங்களில் இடம்பெற்றுவிடும். அதுவும் பண்டிகை நாட்களில் கேட்கவே வேண்டாம். சட் பூஜை என்றால், பயபக்தியுடன் அவர் மனைவி ராப்ரியுடனும், ஹோலி என்றால், பல வர்ணப் பொடிகளை மேலே பூசியபடி... இப்படி விதவிதமாகத் தரிசனம் தருவார் லாலு. மாட்டுத் தீவன வழக்கு விசாரணையின்போது அவர் அசரவில்லை. ஒருமுறை சைக்கிள் ரிக்ஷாவில் நீதிமன்றம் வந்தார்; இன்னொரு முறை மேள, தாளங்களுடன் வந்தார். இனி யார் அப்படி போஸ் கொடுப்பார்கள்?" என்கிறார்கள் இவர்கள்.

பெருங்கவலைதான்!

***

மதுரையில் இப்போது சரவணன்தான் பரபர. பவர் ஸ்டார் சீனிவாசன், ஜே.கே. ரித்தீஷ் வழிவந்தவர் சரவணன். 2010-ல் தன் சொந்தச் செலவில், 'இளமை ஊஞ்சலாடுகிறது' என்றொரு 'சரித்திரப் புகழ் வாய்ந்த' திரைப்படத்தில் நடித்த இவர், மதுரை மாவட்டம் முழுக்க சகட்டு மேனிக்கு ரசிகர் மன்றக் கிளைகளைத் தொடங்கினார். ஆனால், அந்தப் படம் வெளிவரவே இல்லை. கலை தாகம் அடங்காத அவர், மதுரையில் தன் பெயரில் ஒரு உள்ளூர் சேனல் தொடங்கி, டெலிசீரியல் ஒன்றில் மன்னர் வேடத்தில் நடித்தார்.

பிறகு, 'அகிலன்' என்ற படத்தைத் தானே நடித்துத் தயாரித்தார். கடந்த சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க.வில் எம்.எல்.ஏ. சீட் கேட்டு விருப்ப மனு கொடுத்த கையோடு, அடுத்த சுகாதாரத் துறை அமைச்சர் அண்ணன்தான் என்று ஃபிளக்ஸ் வைத்தவர், கடந்த ஜூலை 8-ம் தேதி வைகோவிடம் தேர்தல் நிதியாக ரூ. 1 லட்சம் கொடுத்து, ம.தி.மு.க-வில் சேர்ந்திருக்கிறார். ம.தி.மு.க-வின் மாநில மருத்துவ அணிச் செயலாளராகியிருக்கும் சரவணன், "மதுரை தொகுதியின் அடுத்த எம்.பி. நான்தான்" என்று இப்போது சொல்லிக்கொண்டிருக்கிறார்.

டெரர் ஸ்டார் பட்டம் ஒ.கே.வா?

| தொகுப்பு: சாரி, ஆசை, வெ. சந்திரமோகன், ஷஃபி முன்னா, கே.கே. மகேஷ் |

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

1 day ago

மற்றவை

9 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

5 months ago

மேலும்