புதுக்கோட்டை: சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மாறும் குடிநீர் தட்டுப்பாடு

தேர்தலை மட்டுமே குறிவைத்து செயல்படாமல் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மாறியுள்ள குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க தொடர்புடைய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

3 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம்…

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையளவு குறைவினால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஏராளமான குடிநீருக்கான ஆழ்குழாய் கிணறுகளும் செயல் இழந்துள்ளன. மேலும், காவிரி குடிநீர் விநியோகமும் குறைந்துள்ளது. அதோடு, நாளொன்றுக்கு 10 மணி நேரம் இயங்கினால்தான் குடிநீர் தொட்டி முழுமையாக நிரம்பும். ஆனால், தற்போது நாளொன்றுக்கு 3 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இத்தகைய பிரச்சினைகளால் தற்போது குடிக்கவும் தண்ணீர் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது.

தண்ணீர் பற்றாக்குறையினால் பொதுக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் அண்டை வீட்டார்களுக்கிடையே தள்ளுமுள்ளு, அடிதடி, தகராறு, மறியல் என குடிநீர் பிரச்சினையானது சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மாறியுள்ளது.

பிரச்சினைகள்… வழக்குகள்…

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே பரம்பூரில் மார்ச் 5-ம் தேதி ஏற்பட்ட மோதலில் அதே கிராமத்தைச் சேர்ந்த நா.அமிர்தம்(60) காயம் அடைந்தார். இது குறித்து அன்னவாசல் போலீஸார் அதே பகுதியைச் சேர்ந்த சி.கணேசன்(60), சு.திருமுருகன்(35), சு.மூர்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிந்துள்ளனர்.

இதேபோல, கந்தர்வகோட்டை அருகே குளத்துப்பட்டியில் பிப்.12-ல் ஏற்பட்ட மோதலில் சி.மதி(39), சி.மாசிலா ஆகியோர் காயம் அடைந்தனர். இதில் அ.கனகராஜ், க.ராமு, சா.அடைக்கலம் ஆகியோர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. மேலும், அறந்தாங்கி அருகே களப்பக்காட்டில் பிப். 17-ம் தேதி நடந்த மோதலில் செ.பாக்கியவதி(26) காயம் அடைந்தார். இவ்வழக்கில் மு.கீதா கைது செய்யப்பட்டார்.

கந்தர்வகோட்டையில் பிப். 19-ம் தேதி ர.கார்த்திக் காயம் அடைந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக மு.சாமிநாதன் கைது செய்யப்பட்டார். பிப். 23-ம் தேதி கீரனூர் அருகே வெம்மேணியில் ஏற்பட்ட மோதலில் வெ.அரவிந்த்(22) காயம் அடைந்தார். இதுகுறித்து ப.வீரையா, வீ.திருமுகன், ச.வீரையா ஆகியோர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இதேபோல, பல மோதல்கள் உள்ளூரில் வழக்குபோடாமல் பஞ்சாயத்தில் முடிக்கப்பட்டும் வருகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் தேர்தல் பணிகளோடு தங்களது கடமை முடிந்துவிடுமென நினைக்காமல் மக்களின் பிரதான பிரச்சினையாக உருவெடுத்துள்ள குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நடவடிக்கை எடுக்க தயக்கம்…

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை நகரச் செயலர் நாகராஜன் கூறியது: “பொதுக்குழாயில் மோட்டார் வைத்து உறிஞ்சுதல், தொழில் செய்தல், தோட்டத்துக்கு பாய்ச்சுதல் என குடிநீரை சட்டவிரோதமாகவும் பயன்படுத்துகின்றனர். இத்தகைய செயல் சட்டவிரோதமானது எனத் தெரிந்தும் வாக்குப் போய்விடுமோ என்ற அச்சத்தினால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் பிரதிநிகள் தயங்குகின்றனர்.

அதற்கு அலுவலர்கள் துணைபோகின்றனர். தற்போது நடைபெற உள்ளது மக்களவைத் தேர்தல் என்றாலும் குடிநீர் பிரச்சினையின் தாக்கமானது உள்ளாட்சித் தேர்தலைப்போன்று குடிநீருக்கு உத்தரவாதம் அளிப்போருக்கே வாக்கு அளிப்போம் என்றெல்லாம் கோரிக்கை வைக்கின்றனர்” என்றார்.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறையினர் கூறியது: “குடிநீர் பிரச்சினைகளைக் களைவதற்கு தேவையான சிறப்பு நடவடிக்கை எடுத்து தடையில்லாமல் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

14 days ago

மற்றவை

29 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

6 months ago

மேலும்